எதிர்காலம் நிகழ்காலத்தின் தொடர்ச்சி; நிகழ்காலம் கடந்த காலத்தின் தொடர்ச்சி.’ இதுவே எதார்த்தமானதாகும். கற்று விழிப்படைகின்றார்கள் மாற்றிக் கொள்கின்றார்கள். அல்லது படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாது நகர்ந்து செல்கின்றார்கள். எனினும் எதுவும் புதிதாக தோன்றிவிடப்போவதில்லை. நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் மக்கள் தாங்கள் எதிர்கொண்ட அன்றாட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை எதிர்கால அறிவுக்கு ஏற்றி, விரக்தியும் நம்பிக்கையும் சந்திக்கும் கட்டத்தினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டிய உளவியல் நிலையில் உள்ளனர். இந்த தற்போதைய நிகழ்வுகள் மற்றும் முன்னேற்றங்களைப் புரிந்து கொள்ள, கடந்த கால நிகழ்வுகளைப் படிக்க வேண்டும். ஏனெனில் கடந்த காலம் நிகழ்காலத்தை ஒளிரச் செய்யும் போது அது முக்கியமானது. எதிர்காலத்திற்கும் இதையே சொல்ல முடியும். எனவே, வரலாற்றாசிரியர்கள் நிகழ்வுகளைக் கையாள்வார்கள்; மற்றும் நிகழ்வுகளின் காரணங்களைப் படிப்பார்கள். ஆனால் நிகழ்வு வரலாற்றின் ஒரே நிறுவனர் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2024ஆம் ஆண்டு உலக அரசியலும் பல புதிய மாற்றங்களை எதிர்காலத்துக்கு அனுப்பி உள்ளது. ஒரு சில நிகழ்வுகளை மாற்றமின்றி கடத்தி செல்கின்றது. ஒரு கலவையான ஆண்டாக கடந்து செல்கின்றது. இக்கட்டுரை 2024ஆம் ஆண்டின் சர்வதேச அரசியலின் தொகுப்பை ஆராய்வதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு உலகை முடக்கிய கொரோனா பேராபத்தின் தாக்கம் தொடர்ச்சியாக அரசியல் மற்றும் பொருளாதாரம் மீது பாரியளவில் செல்வாக்கு செலுத்தியது. குறிப்பாக பொருளாதாரத்தின் ஸ்திரமற்ற நிலைமைகள் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குட்படுத்தியது. பரவலாக ஜனநாயகம் பற்றிய போலிகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதனையே தொடர்ச்சியான ஆண்டுகள் உறுதி செய்திருந்தன. 2020ஆம் ஆண்டு கொரோனா நெருக்கடிக்கு சமாந்தரமாகவே ஆசிய, ஆபிரிக்க என பரவலாக பல நாடுகளில் இராணுவ ஆட்சி துளிர்விட்டிருந்தது. இவை நிலையாகியது. பின்னாட்களில் இராணுவ சர்வதிகார அரசுகள் இயல்பாக்கம் அடைவதனையே ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு அமெரிக்காவின் இராணுவ வெளியேற்றமும் தலிபான்களின் ஆட்சியும் வெளிப்படுத்தியது. 2022ஆம் ஆண்டு ரஷ;சியா-உக்ரைன் யுத்தம்; 2023ஆம் ஆண்டு இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் என உலகின் கவனத்தை ஈர்த்துள்ள யுத்தங்கள் தொடர்கதையாகியது. இத்தகைய அரசியல் வரலாற்றின் தொடர்ச்சியையே 2024ஆம் ஆண்டு வரவேற்றிருந்தது.
2024ஆம் ஆண்டு சர்வதேச தளத்தின் ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கான பருவ காலமாக எதிர்பார்க்கப்பட்டது. நான்கு பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா, இந்தோனேஷpயா, அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் அனைத்தும் தேர்தலுக்குச் சென்றன. 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் புதிய ஐரோப்பிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுத்துள்ளது. ரஷ;சியா விளாடிமிர் புடினை மீள தெரிவு செய்துள்ளது. மனித இனத்தில் பாதி மக்கள் வாழும் 70இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடந்துள்ளன என்று மதிப்பீடுகள் காணப்படுகின்றது. ஜனநாயகத்தின் அளவீடுகள் தேர்தலுக்குள்ளேயே சுருங்கியுள்ளது. இவ்வாறான பின்னணிக்குள்ளேளேயே 2024ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் அவதானிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் பரவலாக, பதவியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு மிகவும் மோசமாகவே அமைந்திருந்தது. வெற்றி தோல்வி என்பவற்றுக்கு அப்பால் நெருக்கடி அரசாங்கங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. தேர்தல் முடிவுகள் ஆட்சி அதிகாரத்தின் மீது மக்களின் அதிருப்தி வெளிப்பட்டுள்ளதேயன்றி, கொள்கைகளில் ஒருமித்த உலகை வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஒரு கலவையான முடிவுகளையே வெளிப்படுத்தியுள்ளார்கள். அமெரிக்காவில் குடியரசுக்கட்சியின் வெற்றி வலதுசாரி சித்தாந்த எழுச்சியை வெளிப்படுத்தியது. மாறாக இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் வெற்றி இடதுசாரி சித்தாந்த சாயலை வெளிப்படுத்தியது. பிரான்சில் இடது – வலது – மத்தி என பலதரப்பட்ட சரிவுகளில் ஸ்திரமற்ற அரசியல் கொள்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மக்களிடம் ஆட்சி மாற்றம் மற்றும் ஆட்சிக்கான நெருக்கடி என்ற ஒரு பொதுமை வெளிப்படுத்தப்படுகின்றது.
ஒன்று, ஆட்சி மாற்றம். அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், பிரித்தானியாவில் பழமைவாத கட்சியின் தோல்விகள் மற்றும் இலங்கையில் மாக்சிச லெனினிச வரலாற்றைக்கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனவின் வெற்றி என்பன மக்களின் ஆட்சி மாற்றம் சார்ந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. இவ்ஆட்சி மாற்றங்களில் கடந்த கால அரசாங்கங்கள் வரலாறு காணாத தோல்வியையும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வரலாறு காணாத வெற்றியையும் பதிவு செய்து வியப்புக்களை உருவாக்கியுள்ளது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் 3.7சதவீத வாக்குச்சரிவானது பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் 20சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் தாக்கம் குறைந்ததாகவே அமைகின்றது. பிரத்தானிய அரசியல் வரலாற்றில் 1905இல் நம்பகமான பதிவுகள் தொடங்கியதிலிருந்து இது முன்னோடியில்லாதது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அவ்வாறே இலங்கையில் 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.84சதவீத வாக்குகளை பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 61.56சதவீத வாக்குகளை பெற்று அரசாங்கத்தை அமைத்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குள் மூழ்கியவர்களிற்கு புரியும் வகையில் கூறுவதாயின் ‘டீபைப டீழளள’ நிகழ்ச்சியல் கூறுவது போல், ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதாகவே தேர்தல் முடிவுகள் அமையப்பெற்றுள்ளது.
இரண்டு, அரசாங்கத்தின் வாக்குசதவீத வீழ்ச்சி. இந்தியாவில் நரேந்திர மோடி, ஜப்பானில் ஷிகெரு இஷிபா, மற்றும் தென்னாப்பிரிக்காவில் சிரில் ரமபோசா போன்றவர்கள் தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் அதிகாரத்தில் தடுமாற்றத்தை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கடந்த இருமுறையும் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணியாகவே தேர்தலை எதிர்கொண்டாலும், பாரதீஜ ஜனதாக்கட்சி தனிப்பெரும்பான்மையை உறுதி செய்திருந்தது. எனினும் 2024ஆம் பாராதீஜ ஜனதாக்கட்சி தனது தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது. கூட்டணி ஆட்சியையே உறுதி செய்துள்ளது. இது நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மீதான மக்களின் அதிருப்தியையே உறுதி செய்கின்றது. அவ்வாறே தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இறுதியாக நடைபெற்ற 2019ஆம் ஆண்டு தேர்தலில் 57.50சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. எனினும் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையை இழந்து 40.18சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
மூன்று, ஸ்திரமற்ற அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்சில் தேர்தல் முடிவுகள் ஸ்திரமற்ற அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. ஒரு வருட காலப்பகுதிக்குள் நான்காவது புதிய அரசாங்கத்தை வருட இறுதியில் உருவாக்கியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜூன்-2024 ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் தனது மையவாத கூட்டணி பின்னடவை எதிர்கொண்ட நிலையில், உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை ஸ்திரப்படுத்துவதற்காக உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்தார். ஆனால் பாராளுமன்றத்திலும் பிரான்ஸ் மக்கள் மையவாத கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு பாராளுமன்றமாக தோராயமாக சமமான மற்றும் அரசியல் ரீதியாக பொருந்தாத மூன்று பிரிவுகளுக்கு இடையில் ஆசனங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் சட்டமன்றத்தில் 577 மொத்த ஆசனங்களில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த 289 ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். NFP எனப்படும் பரந்த இடதுசாரி கூட்டணி 180 ஆசனங்களையும், Ensemble எனப்படும் மையவாத கூட்டணி 159 ஆசனங்களையும் RN/UXD எனப்படும் தீவிர வலதுசாரி கூட்டணி 89 ஆசனங்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் செப்டம்பரில் மக்ரோன் மத்திய-வலது மைக்கேல் பார்னியரை பிரதம மந்திரியாக நியமித்தார். டிசம்பர் தொடக்கத்தில், பார்னியரை வீழ்த்துவதற்கு தீவிர இடது மற்றும் தீவிர வலதுசாரிகள் இணைந்தனர். டிசம்பர் 13 அன்று, மக்ரோன் தனது ஆரம்பகால அரசியல் கூட்டாளிகளில் ஒருவரான 73 வயதான மத்தியவாத பிரான்சுவா பெய்ரூவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். பார்னியர் தோல்வியுற்ற இடத்தில் பேய்ரோ வெற்றிபெற முடியுமா என்பதே தற்போது பிரான்ஸ் அரசியலில் தொங்கிக்கொண்டிருக்கும் முக்கிய கேள்வியாக அமைகின்றது. ஏனெனில் அவர் அதே பாராளுமன்ற கட்டத்தை எதிர்கொள்கிறார். புதிய அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை 2025இன் ஆரம்பத்தில் மேற்கொள்ள உள்ளதாக இடதுசாரி LFI கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்ச்சியாக பிரான்சின் ஸ்திரமற்ற அரசியலையே உறுதி செய்கின்றது.
நான்கு, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் மக்கள் போராட்டத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. பங்களதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். எதிர்க்கட்சிகள் இத்தேர்தலின் ஜனநாயக சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தி புறக்கணித்திருந்தார்கள். இந்த பின்னணியிலேயே ஷேக் ஹசீனாவின் வெற்றியும் உறுதியாகியது. எனினும் ஆறு மாத கால இடைவெளியில் ஜூலையில் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறுகிய கால இடைவெளில் முன்பை விட குறைவான வாக்காளர்களின் ஈடுபாட்டில், மக்கள் எதிர்ப்பு அலையில், ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்-08 அன்று இடைக்கால அரசாங்கத்தின் தலைமைய முகமட் யூனுஸ் வழங்குகின்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட அவாமி லீக் கட்சி தவிர்க்கப்பட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டு ஒத்துழைப்புடன் இடைக்கால அரசாங்கம் செயற்படுகின்றது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அரசியல் அடைக்கலத்தில் காணப்படுகின்றார். புதிய தேர்தல் 2025 ஜனவரியில் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் பங்களாதேசில் சிறுபான்மையோர் மீதான தாக்குதல்கள் சார்ந்து தொடர்ச்சியாக பிரச்சினைகள் மேலெழுவதையும் சர்வதேச செய்திகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஐந்து, தேர்தலை கடந்தும் புதிய ஆட்சி மாற்றங்களை சர்வதேச அரசியல் எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக மேற்காசிய இரத்தக்களரியில் ஆட்சி மாற்றம் ஒன்று உருவாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு தொடக்கம் சிரியாவில் நீடித்த உள்நாட்டுப்போர் நிறைவுக்கு வந்துள்ளதாக மேற்கு ஊடக செய்திகள் முதன்மைப்படுத்தப்படுகின்றது. எனினும் பரவலாக சிரியாவின் அரசியலை தொடர்பவர்கள், ஆட்சி மாற்றத்தையே விளக்குகின்றார்கள். மாறாக உள்நாட்டு யுத்தத்தின் தொடர்ச்சியையே காண்கின்றார்கள்.
நவம்பர்-27அன்று ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக்குழு சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தது. இரு வார கால இடைவெளியில் டிசம்பர்-08 அன்று கிளர்ச்சிக்குழு சிரிய தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியது. இது முன்னாள் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் இரு தசாப்த கால ஆட்சியை கவிழ்த்துள்ளது. மேலும் அசாத் குடும்பத்தின் ஐந்து தசாப்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறி ரஷ;சியாவிற்கு சென்றுள்ளார். மறுதலையாக சிரியாவில் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கியுள்ள ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவின் ஜனநாயகத் தன்மை கடந்த கால அனுபவங்களின் தொடர்ச்சியில் சந்தேகத்திற்கு உரியதாகவே காணப்படுகின்றது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு மற்றும் அதன் தலைவர் அபு முஹம்மது அல்-ஜோலானி அமெரிக்க மற்றும் ஐ.நா அமைப்பினரால் பயங்கரவாத அமைப்பாக மற்றும் செயற்பாட்டாளராக தடைசெய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவா தடைப் பட்டியலில் உள்ளவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சிமாற்றம் சர்வதேச அரசியலின் பெரும்பான்மை போக்குடன் ஒன்றிணைந்து போகுமா என்பதில் சர்வதேச அரசியல் அவதானிகளிடம் சந்தேகங்களே காணப்படுகின்றது. சிரியாவில் நீடித்த ஒரு பரம்பரை ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் சிரியாவின் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாகவே காணப்படுகின்றது.
சர்வதேச அளவில் அரசாங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, சர்வதேச அரசியல் பொருளாதார பலவீனத்தையே உறுதி செய்கின்றது. அரசியல் அவதானிகள் மந்தமான உலகப் பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்தி, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் மோசமான முடிவுகளை விளக்கியுள்ளனர். தொற்றுநோயால் தூண்டப்பட்ட மன அழுத்தம் மற்றும் நுகர்வோர் மற்றும் ஊழியர்களின் புதிய எதிர்பார்ப்புகள் ஆகிய இரண்டிற்கும் உலகளாவிய வணிகம் இன்னும் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. 2022 முதல் உக்ரைனில் நடந்த போர் உணவு மற்றும் சில பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இது அதிகளவில் ஐரோப்பாவை தாக்கியுள்ளது. பிரித்தானியாவின் கடந்த கால ஸ்திரமற்ற அரசியலும் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியும் உறுதி செய்கின்றது. மேலும், 2023இல் மேற்காசியாவில் ஆரம்பமாகிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து அதிக ஆபத்தை எதிர்கொள்வதால், விநியோகச் சங்கிலிகளைத் தாக்கியுள்ளது. இவை ஏற்படுத்தியுள்ள அரசியல் பொருளாதார தாக்கத்தின் விளைவையே 2024 தேர்தல் முடிவுகள் விளக்குகின்றது. 2008 நிதி நெருக்கடிசார்ந்த அரசியல் தாக்கங்களை சமகாலத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் அரசியல் பொருளாதார அவதானிகளின் புள்ளிவிவரப்படி, 16 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 2024 அரசாங்கத்தில் இருப்பது மிகவும் கடினமான காலமாகவே அமைகின்றது.
எனவே, 2024ஆம் ஆண்டு, 2020 தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையான கடந்த ஐந்து வருடங்களின் பொருளாதாரத்தினை மையப்படுத்திய அரசியல் ஸ்திரத்தன்மையை ஒரு புள்ளியில் உச்சத்தை இனங்காட்டியுள்ளது. இதற்கு 2024இல் பரவலாக இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயகத்தின் விம்பத்தில் காட்சிக்கு வந்துள்ளது. 2024 தேர்தல் முடிவுகள் ஆட்சிக்கு நெருக்கடிகளை வழங்கி மக்கள் தமது தேவையை வெளிப்படுத்த சாதகமாக அமைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் தொடர்பில் பைனான்சியல் டைம்ஸ் (Financial Times), நவம்பர்-7அன்று வெளியிட்ட கட்டுரையில், ‘பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு கல்லறை’ என்று விவரித்தது. தேர்தலில் வென்று ஆட்சியை பாதுகாத்தவர்ளும்; தேர்தல் தோல்வியால் ஆட்சியை இழந்தவர்கள் என இரு தரப்புமே ஆட்சியதிகாரத்தில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் அதிருப்தியை எதிர்கொண்டுள்ளனர். தமிழில் ஒரு முதுமொழி, ‘அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்’ என்பாதாகும். மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் இவ்அரசியல் தரப்புக்களிடமிருந்தே ஆட்சி விளைவுகளை பெற முடியும் என்பதே எதார்த்தமாகும். அவ்எதார்த்தத்துக்குள் தம் உயர் விளிம்பு நிலை அழுத்தத்தை மக்கள் தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்