தென்னாசியப் பிராந்திய அரசியல் போர்ப் பதற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளின் எல்லைகளில் கிளர்ச்சிக்குழுக்களின் தாக்குதல் நிகழ்ந்து வருகின்றது. மியான்மார் கிளர்ச்சிப் படைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையோரங்களிலும்; பங்களாதேஷ் மற்றும் மியான்மார் எல்லையிலும் தீவிர தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். இதனால் பிராந்திய அரசியல் போர் பதற்றத்தையும் எல்லை பாதுகாப்பையும் முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இந்தியா தனது எல்லையோரத்தில் நுழையும் அகதிகளை கட்டுப்படுத்தவும் கிளர்ச்சிப்படைகளின் ஊடுருவலை தடுக்கவும் தீவிர கண்காணிப்பை ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் தென்னாசியாவின் பிராந்தியதத்தில் ஏற்பட்டிருக்கின்ற போர் பதற்றத்தையும் அதன் பின்னால் உள்ள காரணங்களையும் தேட முயற்சிக்கின்றது.
பங்களாதேஷ், மியான்மார் அரசுக்கு எதிராக போர் நடத்தி வரும் கிளர்ச்சிப்படையினர் பங்களாதேஷ் எல்லைப் பகுதி முழுவதையும் கடந்த சில வாரங்களில் கைப்பற்றியுள்ளனர். இதனால் இந்தியாவின் வட-கிழக்கு மாநில எல்லையோரங்கள் இந்திய இராணுவத்தினால் கண்காணிக்கப்படுகின்றது. மியான்மாரில் இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற சூழலில் வெவ்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் எழுச்சி பெற்று வருகின்றன. இந்தியா, பங்களாதேஷ் எல்லைகளில் அமைந்துள்ள ராக்ரைன் மாநிலத்தை முழுமையாக கைப்பற்றியுள்ள கிளர்ச்சிக் குழுக்கள் தமது போர் நடவடிக்கைகளை ஏனைய பிரதேசங்கள் நோக்கி விஸ்தரித்து வருகின்றனர். அரக்கான் இராணுவம் என அழைக்கப்படும் கிளர்ச்சிக் குழுவானது மியான்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக எல்லையோரத்தில் சுயாட்சி பிரதேசம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது. இதனை கைப்பற்ற மியான்மார் இராணுவம் பாரிய போர் நடவடிக்கை பிரதேசம் நோக்கி நகர்த்தி வருகின்றது. இரு தரப்புக்கும் இடையில் பாரிய போர் நிகழ்ந்து வருவதாக தெரிய வருகின்றது. ஏறக்குறைய 1643 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்திருக்கும் இந்தியாவும் மியான்மாருக்கும் இடையில் அமைந்துள்ள மணிப்பூர் இ நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களை பாதுகாக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு ஆப்கானிஸ்தான் எல்லை ஓரத்தில் எழுச்சி பெற்றுள்ள ஆப்கானிய பாகிஸ்தானி கிளர்ச்சி குழுவை அழிக்கும் நோக்கத்தோடு தீவிர விமான தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் இராணுவத்தில் தீவிர விமான தாக்குதல் ஆப்கானிஸ்தான் உடைய இறைமையையும் தன்னாதிக்கத்தையும் மீறுகின்ற செயல் என்றும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஆப்கானிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதே நேரம் கிளர்ச்சிக்குழுக்களின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் பாகிஸ்தான் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. எதிரான கிளர்ச்சி குழுக்களை அழிக்கும் நோக்கத்தோடு தாக்குதல் நிகழ்த்தப்படுவதாகவும் கிளர்ச்சிக்குழுவை அழிக்கும் வரையில் தாக்குதல் நிகழும் எனவும் பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்களின் பிரதிபலிப்பையும் அது ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் ஆழமாக புரிந்து கொள்வது அவசியமாகிறது.
முதலாவது, பிராந்திய அடிப்படையில் மேற்காசியாவுக்கு அடுத்ததாக தென்னாசியாவில் கிளர்ச்சி குழுக்களின் எழுச்சி காணப்படுகின்றது. உலக அரசியல் ஒழுங்கில் கிளர்ச்சிக் குழுக்களின் யுகமாக சமகாலம் மாறி வருகின்றது. அத்தகைய கிளர்ச்சிக் குழுக்களை எல்லையோர நாடுகளும் பெருவல்லரசுகளும் பிராந்திய வல்லரசுகளும் இன்னொரு அரசுக்கு எதிராக ஊக்குவித்து வருகின்ற செய்முறை ஒன்றை பின்பற்றி வருகின்றன. இதன் பிரதிபலிப்பே பிராந்தியங்களுக்கு இடையில் நிகழ்ந்து வருகின்ற கிளர்ச்சிக் குழுக்களின் எழுச்சிக்கு அடிப்படையானது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளும் அவற்றிற்கு எதிரான சக்திகளும் எழுச்சி பெறுகின்ற சூழல் என்பது சர்வதேச மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கி உள்ளது .
இரண்டாவது, தென்னாசிய பிராந்தியம் ஒப்பபீட்டு அடிப்படையில் ஏனைய பிராந்தியங்களை விட அமைதியாகவும் பொருளாதார ரீதியான எழுச்சி பெற்று வருகின்ற பிராந்தியமாகவும் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சியும் அதன் அயல் நாடுகளில் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களும் இத்தகைய கிளர்ச்சி நகர்வுகளை அல்லது தாக்குதலை பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கிறது. பிராந்திய மட்டத்தில் பலவீனமான பொருளாதார சக்திகளாக அடையாளப்பட்டிருக்கும் நாடுகளும் அந்த நாடுகளுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதல்களும் பாரிய பொருளாதார நெருக்கடியை பிராந்திய மட்டத்தில் ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. முழுமையாக அவதானிக்கின்ற போது கிளர்ச்சி குழுக்களும் நாடுகளுக்கு எதிராக அவற்றினுடைய எழுச்சிகளும் அமைதி மற்றும் பொருளாதார இருப்பை அழிவுக்கு உள்ளாக்கி வருகிறது.
மூன்றாவது, கிளர்ச்சிக் குழுக்களின் எழுச்சியானது அடிப்படையில் இராணுவ கட்டமைப்பு முறைகளை தோற்கடிக்கும் விதத்திலும் புதிய அரசுகளை அமைப்பது பொறுத்தும் எல்லையோர நாடுகளின் பங்குகளை முதன்மைப்படுத்திக் கொண்டு புதிய அரசுகளை உருவாக்குவதற்கான எழுச்சியையும் கொண்டள்ளதாக அறிய முடிகிறது. ஏறக்குறைய பிராந்திய அடிப்படையில் எழுச்சி பெற்று வருகின்ற கிளர்ச்சிப் படைகள் ஏதோ ஒரு சக்தியால் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளால் கையாளப்படுகின்ற நிலையும் தென்னாசிய பிராந்தியத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு எதிராக எழுச்சி பெற்று வருகின்ற கிளர்ச்சிக் குழுக்களுக்கு சர்வதேச சக்திகளும் பிராந்திய சக்திகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மேற்காசியாவில் நிகழ்ந்து வரும் போர்களை இன்னொரு திசையில் கையாளுகின்ற விதத்திலும் இக்கிளர்ச்சிக் குழுக்களின் உடைய எழுச்சி நிகழ்ந்திருப்பதாக தெரிய வருகின்றது. இதனால் பிராந்திய அடிப்படையில் புவிசார் அரசியலை பங்கீடு செய்கின்ற பிராந்தியங்கள் கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையிலான உறவுகளையும் கிளர்ச்சிக் குழுக்களை ஊக்குவிக்கின்ற நாடுகளின் போக்குகளையும் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
நான்காவது, கிளச்சிக் குழுக்கள் பிராந்திய ரீதியான இருப்பை பலவீனப்படுத்துவதோடு பிராந்திய ரீதியான அரசுகள் மேற்கொள்ளுகின்ற இராணுவ நகர்வுகளை முற்றாக தோற்கடிப்பதற்கு முனைகின்றன. குறிப்பாக மியான்மார் இராணுவத்தின் உடைய எழுச்சியை முடிவுக்கு கொண்டு வரவும் ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றிருக்கின்ற கிளர்ச்சி குழுக்கள் பாகிஸ்தானுடைய இராணுவ நகர்வுகளை முற்றாக அழித்தொழிப்பதற்கும் முனைகின்றன. இவை பெரும் அளவுக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புக் கூடாக நிதி மற்றும் ஆயுதத்தளபாடங்களின் துணையுடன் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. இதனால் ஏற்படக்கூடிய இழப்பீடுகளும் அசௌகரியமும் பிராந்திய அமைதியை சீர்குலைப்பதோடு நாடுகளின் வளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் நகர்த்தப்படுகின்றது. தென்னாசியா வலுவான ஒரு பொருளாதார இருப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு எதிராக பாரிய கிளர்ச்சிக் குழுக்கள் தாக்குதல்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தி வரும்.
எனவே, மேற்கு ஆசியாவில் எழுச்சி பெற்ற கிளர்ச்சி குழுக்களின் தன்மைகளை பிரதிபலிக்கும் அணுகுமுறை தென்னாசியாவை நோக்கி நகரத் தொடங்கி இருக்கின்றது. இது ஆபத்தான ஒரு அரசியல் வடிவமாக நிலவுகிறது. இந்தியாவை எல்லையோரமாகக் கொண்ட அனைத்து நாடுகளிலும் கிளர்ச்சி குழுக்களின் தாக்குதல் நிகழ்ந்து வருகின்றது. இதனுடைய பிரதிபலிப்பு இந்திய எல்லையை போர் பதற்றத்துக்கும் கொதிநிலைக்குள்ளும் வைத்திருப்பதற்கான திட்டமிடலாகவே தெரிகின்றது. பரஸ்பரம் சீனாவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இரு சக்திகளும் கிளர்ச்சிக் குழுக்களை தூண்டுவதுடன் சர்வதேச மட்ட சக்திகளும் அத்தகைய கிளர்ச்சிக் குழுக்களை போருக்கான சூழலை நோக்கி நகர்ந்து வருகின்றனர.; ஒட்டுமொத்தத்தில் பிராந்தியங்களின் இருப்பு அல்லது ஆசிய பிராந்திய நாடுகளின் இருப்பு பாரிய போர்ச் சூழலுக்குள் அகப்பட்டு இருக்கின்றது. இதிலிருந்து விடுபடுதல் என்பதை விட இதற்கான பின்னணியையும் அடிப்படைகளையும் கண்டறிந்து அவற்றை கையாளுவது பிராந்திய அரசியல் உறுதிப்பாட்டுக்கும் அமைதிக்கும் அடிப்படையானதாக அமையும் எனலாம்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)