வடக்கு கடலை சுரண்டும் இந்தியாவின் செயற்பாடு குறித்து ‘மேலும் பேச்சுகள் இல்லை..! அரசாங்கம்

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வடக்கு மீனவர்களை திருப்திப்படுத்தும் நிலையான தீர்வு கிடைக்காத நிலையில், யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

“இதற்குப் பின்னர் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. அனைத்து பேச்சுக்களும் முடிந்துவிட்டன. இதன் பின்னர் எவருடனும் பேச்சுவார்த்தை இல்லை”

கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுகள் தொடரும் எனவும் தொழில்நுட்பம், தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அமைச்சர் கூறுகிறார்.

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டவிரோத இந்திய மீன்பிடி முறைகளால் கடனில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அச்சம் எழுந்துள்ளது.

டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லியில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும்  இடையிலான சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் கடற்றொழில் பிரச்சினையை ‘முக்கியமானது’ என அடையாளப்படுத்தியிருந்தனர்.

மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டும் என நாங்கள் கலந்துரையாடினோம் என இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடந்த வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

“எவ்வாறாயினும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதா அல்லது பெறுவதா என்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை.”

இலங்கை ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால், வடபகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்குமென கவலையடைந்திருந்தனர்.

எனவே தமிழ்நாட்டு முதலமைச்சருடன் இணைந்து அமைதியான தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் மீனவர் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்திய மீனவர்கள் வட கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை ‘ஆக்கிரமிப்பு’ என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு பேசாலையிலேயே இருக்கின்ற மீனவர்களை நாங்கள் சந்திக்கின்ற போது, வல்வெட்டித்துறையில் இருக்கின்ற மீனவர்களை சந்திக்கின்ற போது, ஏனைய பிரதேசங்களில் இருக்கின்ற மீனவர்களை சந்திக்கின்ற போது, மீனவர்கள் சொல்லுகின்றார்கள், “ஐயா எங்களுக்கு இந்திய மீனவர்களின் வருகையை தடுத்து நிறுத்துங்கள். அல்லது நாங்கள் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளப் போகின்றோம்.”

கடலைச் சுரண்டும் இழுவைமடி மீன்பிடி இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

“இதே வார்த்தையை இந்திய தூதுவருக்கும் கூட நான் சொன்னேன். அது மாத்திரம் அல்ல, இந்த இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவை இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள்.”

இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும் எனக் கூறிய அமைச்சர், கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தும் இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித்தொழிலாளர்களே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த படகுகளின் உரிமை இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

“அந்த செயற்பாடு என்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்த இழுவைமடியில் இழுவைப் படகுகளில் வருகின்றவர்கள் மீன் பிடிக்க வருகின்றவர்கள் அங்கிருக்கின்ற கூலித் தொழிலாளர்களாகும். அந்த படகு உரிமையாளர்களை எடுத்துப் பார்க்கின்ற போது, அங்கிருக்கின்ற அரசியல்வாதிகள் அல்லது பெரும் முதலைகளாகும். ஆகவே அந்த வகையிலே நிச்சியமாக நாளைக்கு அந்த படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்ற போது, கைது செய்யப்படுகின்ற போது, மனிதாபிமான அடிப்படையில் அதில் இருக்கின்ற கூலித் தொழிலாளர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது தான் மனிதாபிமான நடவடிக்கையே தவிர, அல்லது இந்தியா வந்து இங்கு என்ன செய்துகொண்டு போனாலும் சரி, அவர்கள் எங்களது கடலை நாசமாக்கினாலும் சரி… இப்ப எங்களுக்கு இறால் பிடிக்கின்ற காலம் இது. இறால் பிடிக்கின்ற காலத்திலே, உண்மையிலேயே எங்களுடைய கடல்களை அழித்துக்கொண்டு போகின்ற செயல்பாடுகளை இந்திய மீனவர்கள் செய்கின்றார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள். ”

இந்திய மீனவர்கள் நாட்டுக் கடற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து இந்தியாவின் அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அறிந்திருப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

“இது தொடர்பான செயற்பாடுகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தெரியும். தமிழ் நாட்டிலுள்ள புத்திஜீவிகளுக்கும் நன்றாகவே தெரியும். அது மாத்திரமின்றி டில்லியிலிருக்கின்ற மத்திய அரசாங்கத்திற்கும் தெரியும். அதில் இருக்கின்ற இது தொடர்பான அறிஞர்களுக்கும் நன்றாகவே தெரியும்.”

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அழிவுகரமான ஆக்கிரமிப்பினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்து குறித்தும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையும், எதிர்கால வாழ்க்கையும். அந்த வகையில் இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்கு பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போகின்ற கடல் பாலைவனமாக மாறுகின்ற ஒரு நிலை ஏற்படும் என்பது நாங்கள் மாத்திரமல்ல, சகல அறிஞர்களுக்கும் தெரிந்த விடயமாகும்.”

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கிலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews