வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்புபோல் இருக்கின்றது – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்!

வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்புபோல் இருக்கின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் சும்மா கத்திக்கொண்டிருப்பதைப்போல மாகாணசபை இருந்தாலும் அங்கும் கத்திக்கொண்டுதான் இருப்பார்கள். இப்போது அதிகாரிகளால் மாகாண சபை சிறப்பாக நடத்தப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடக்கு மாகாண சபையால் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 1984ஆம் ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் படித்த காலம் மிக நெருக்கடியானது. அதைப்போலத்தான் அவர் பணிக்குச் சேர்;ந்த 1991ஆம் ஆண்டு காலமும் நெருக்கடியானது. அவர்கள் நெருப்பாற்றை நீந்திக் கடந்துதான் பணியாற்றினார்கள்.
வடக்கு மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் கடமையுணர்வுமிக்கவர்கள். வடக்கு மாகாணத்தின் பலமே அவர்கள்தான். இப்போதுதான் வடக்கின் ஆளுநரைக்கூட யாழ்ப்பாணத்திலிருந்து கண்டுபிடித்திருக்கின்றார்கள். அரசியல்வாதிகளையும் கொழும்பிலிருந்து கொண்டுவரும் ஒரு காலம் இருந்தது. எங்களால் செய்ய முடியாது என்ற எண்ணம் இனியாவது மாற்றப்படவேண்டும்.
வடக்கு மாகாண ஆளுநராக வேதநாயகனை இந்த அரசாங்கம் தேர்ந்தெடுத்தன் ஊடாக வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின், தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு ஒரு படி மேலேகூடி விட்டது. வடக்கு ஆளுநரும் அவரது அணியும் இந்த மாகாணத்தில் சிறப்பாக வேலை செய்கின்றார்கள். அவர்களை அப்படியே சேவை செய்யவிட்டால் போதும் என நினைக்கின்றேன்.
மாகாண சபை இல்லாமல் இருப்பது நல்லம்தான். இல்லாவிடின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் சத்தம் போட்டுக்கொண்டிருப்பதைப்போல அங்கும் சத்தம்தான் போட்டுக்கொண்டிருப்பார்கள். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ‘மாஸ்ரர் பிளான்’ இருக்கா என்று கேட்பார்கள். ஆனால் இந்த அதிகாரிகள்தான் இங்கிருந்து எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கின்றார்கள், என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews