தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 100 நாட்களை கடந்துள்ளது. அவர்களின் தேர்தல் காலப் பிரச்சாரம் மற்றும் நடைமுறை அரசாங்க செயற்பாடுகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆரோக்கியமான விளைவுகளையோ அல்லது மாற்றங்களையோ அவதானிக்க முடியவில்லை. சமகாலத்திலும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் மிலேச்சத்தனமாக முடக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான விசாரணைகள் தொடர்கின்றது. அரச அதிகாரிகளின் அசண்டைகள் தொடரவே செய்கின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஜனரஞ்சக அரசியலின் பிரச்சாரங்களையே, தேர்தலுக்குப் பின்னரும் அரசாங்கமாகவும் காவிக்கொண்டு திரியும் நிலைமைகளே காணப்படுகின்றது. குறிப்பாக பாராளுமன்றத்தை புதியவர்களூடாக சுத்தம் செய்தல், கல்வி கற்றவர்கள் ஊடாக பாராளுமன்றத்தை நிரப்புதல், அநீதிகளை அம்பலப்படுத்தல் போன்ற மக்களை உணர்வுபூர்வமாக கவரக்கூடிய ஜனரஞ்சக பிரச்சாரங்களையே சமகாலத்திலும் முன்னெடுத்து வருகின்றார்கள். மாறாக ⅔ பெரும்பான்மையை பெற்று அரசாங்கமாக நிலையான மாற்றம் சார்ந்த செயற்பாடுகளை ஒப்பீட்டளவில் காண முடியவில்லை. இக்கட்டுரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 100 நாட்கள் செயற்பாட்டின் விளைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர்-21 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதிர்க்கட்சி என்ற நிலையில் ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதனை சீர்செய்வதாக அமைந்திருந்தது. வழங்கப்பட்ட வாக்குறுதிகளில், ‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொதுத் தேர்தலை விரைவாக நடாத்தும்’ என அளிக்கப்பட்ட வாக்குறுதியை மாத்திரமே கடந்த 100 நாட்களில் நிறைவேற்றியுள்ளது. அதுவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கான பொறிமுறையாகவே அமைந்திருந்தது. கடந்த பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி வெறுமனவே மூன்று ஆசனங்களை மாத்திரமே பெற்றிருந்த நிலையில், அரசாங்கத்தை பலப்படுத்தும் முனைப்புடனையே பொதுத்தேர்தலை எதிர்கொண்டிருந்தத. பொதுத்தேர்தலிலும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு கணிசமான ஆதரவை மக்கள் வழங்கியிருந்தார்கள். குறிப்பாக ‘மாற்றம்’ என்ற வாக்குறுதியை பலப்படுத்துவதற்காக ⅔ பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி-01(2025) அன்று ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, “புத்தாண்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சவால் அரசாங்கத்திடம் உள்ளது. தூய்மையான இலங்கை முயற்சியின் வெற்றியானது பொதுமக்களின் செயலூக்கமான பங்களிப்பிலேயே தங்கியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக மாற்றம் எனும் ஜனரஞ்சக வார்த்தையை பாதுகாத்து வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த 100 நாட்களில் ஏற்படுத்திய நிலையான மாற்றங்களை தேடவேண்டியுள்ளது.
நவீன தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி சர்வதேச அளவில் அரசியலில் ஜனரஞ்சக தலைவர்களின் செல்வாக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரொனால்ட் ட்ரம்பின் வளர்ச்சியும் ஜனரஞ்சக அரசியல் வளர்ச்சியாகவே அவதானிக்கப்படுகின்றது. இத்தகைய அரசியல் தலைவர்களின் வெற்றியில் கணிசமாக சமூகவலைத்தளங்களின் செல்வாக்கு உயர்வாக அடையாளம் காணப்படுகின்றது. தெளிவான அடிப்படையற்றவகையில் தேசியவாதம் போன்ற மக்கள் உணர்வுகளை இலகுவாக கவரக்கூடிய பிரச்சாரங்களை, கருத்து உருவாக்கங்களை சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளக்கூடியதாக அமைகின்றது. பேஸ்புக் யுகத்தில் ஆழமான தேடல்களை புறந்தள்ளி நொடிகளில் பார்த்துவிட்டு கடந்து செல்லும் மனநிலைகளிலேயே புதிய தலைமுறை வளர்கிறது. இத்தகைய தலைமுறையினை கவரக்கூடிய ஜனரஞ்சக தலைவர்களின் வெற்றி இலகுவாகிறது. இந்த பின்னணியிலேயே சமூக வலைத்தளமான எக்ஸ் (‘X’) தளத்தின் இயக்குனர் எலன் மஸ்க், ரொனால்ட் ட்ரம்பின் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பை பெற்றுள்ளார். சர்வதேச நடப்புக்குள்ளேயே அனுரகுமார திசநாயக்க மீதான ஜனரஞ்சக எழுச்சியும் அதுசார்ந்த தேசிய மக்கள் சக்தியின் வெற்றியும் அமைந்திருந்தது.
ஜனரஞ்சக அரசியலினூடாக வெற்றி பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, தொடர்ச்சியாக அரசாங்க செயற்பாட்டிலும் சமூக வலைத்தள ஜனரஞ்சக பிரச்சாரங்களை முன்னெடுப்பதிலேயே முனைப்பாக உள்ளது. கடந்த 100 நாட்களில் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றமாக, ‘ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் எளிமையான அரசியல் நடத்தையே’ சமுக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஆரம்ப கொள்கை பிரகடன உரைக்கு ஜனாதிபதியின் ஆடம்பரமற்ற வருகை; ஜனாதிபதி மாளிகையில் ஆடம்பர உணவு பராமரிப்பு இன்மை; ஜனாதிபதியின் பாதுகாப்பு செலவீனம் குறைக்கப்பட்டுள்ளமை; ஜனாதிபதியின் தாயார் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உள்ளமை; அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் மற்றும் சொகுசு பங்களாக்கள் இன்மை போன்றன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சாதனை மாற்றமாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் ஆரோக்கியமானவை ஆகும். மக்கள் சேவையை மையப்படுத்தி உள்ள அரசியலில், ஆட்சியாளர்களை மக்களிடமிருந்து விலத்தி அதிகார வர்க்கமாக மாற்றுவது அவர்களுக்கான சொகுசுகளாகும். இவ்அடிப்படையில் ஆட்சியாளர்களின் ஆடம்பர வாழ்க்கை குறைக்கப்பட்டு ஒப்பீட்டளவில் சாமானிய மக்களின் வாழ்க்கை உடன் பொருந்தி செல்வது ஆரோக்கியமான அரசியல் நாகரீகம் ஆகும். இவ்நாகரீகமான மாற்றம் வரவேற்கக் கூடியது.
எனினும் இம்மாற்றங்கள் இலங்கையின் நிலையான அரசியல் கலாச்சார மாற்றத்தை உருவாக்க போதுமானதா? இம்மாற்றங்கள் நிலையான மாற்றங்களுக்கு வழி ஏற்படுத்தி உள்ளதா என்பதற்கான தேடல்களின் பதில்கள் குழப்பகரமானதாகவே அமைகின்றது. இது வெறுமனவே அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நாகரிகமாகும். கடந்த காலங்களிலும் ஜனத விமுக்தி பெரமுன இத்தகைய அரசியல் நாகரீகத்தையே பின்பற்றி வருகின்றது. அவர்களது பாராளுமன்ற வருமானம், பாராளுமன்ற சலுகைகள் கட்சி நிதியாகவே பாரப்படுத்தப்பட்டு வருகிறது. இது அத்தகையதொரு அரசியல் கட்சியின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. மாறாக இலங்கை அரசியல் கலாசாரத்துக்குள் ஆழமான மாற்றத்தை விதைக்கவில்லை. தற்போதும் ஜனாதிபதி நிதியத்தில் வெளிநாட்டு மருத்துவத்தை பெற்றுக்கொண்டமையை நியாயப்படுத்தும் அரசியல்வாதிகளும் உள்ளனர். உறுதிப்படுத்த முடியாத கல்வித்தகைமைக்கு பொறுப்புக்கூறி பாராளுமன்ற பதவியை விலகாது சாக்கு போக்கு காரணங்களை முன்வைக்கும் அரசியல்வாதிகளும் உள்ளனர். இவ்அரசியல்வாதிகள் எதிர்த்தரப்பு மற்றும் ஆளுந்தரப்பு என பரவலாக காணப்படுகின்றார்கள். குறைந்தபட்சம் மலிவான அரசியல் மாயையைக் கொண்ட ஜனரஞ்சக அரசியல் செயற்பாடுகளை கூட, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இலங்கையின் நிலையான அரசியல் நாகரீகமாக மாற்ற முடியவில்லை. வெறுமனவே கட்சிக்குள் ஒரு சிலரின் முகப்பினிலேயே அரசியல் நாகரீக விம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஒருவகையில் மக்களை ஏமாற்றும் அரசியல் உத்தியாகவே அமைகின்றது. மக்களும் தமது ஏமாற்றத்தையே சமுக வலைத்தளங்களில் தேசிய மக்கள் சக்தியின் சாதனையாக பிரச்சாரம் செய்கின்றார்கள்.
மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இதுவரை தங்களை ஆளுந்தரப்பாக ஏற்றுக் கொள்ளாத மனநிலையினையையே அவர்களது ஊடக கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றது. தேர்தல் காலங்களில் ஆளும் தரப்பு மற்றும் முன்னைய அரசாங்கங்களின் ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்துவதுடன், அவர்களுக்கு எதிரான நீதி விசாரணைகளை ஆரம்பிப்பது தொடர்பாக பிரச்சாரம் செய்திருந்தார்கள். மேலும் பல ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகங்களை விமர்சித்து இருந்தார்கள். தற்போது ⅔ பலத்துடன் உறுதியான அரசாங்கத்தை அமைத்த பின்பும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த கால அரசாங்க உறுப்பினர்களின் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக உறுதியான நீதிப்பொறிமுறையை இதுவரை கட்டமைக்க தவறி உள்ளார்கள். முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சவால் விடும் நிலைமைகளையும் காணப்படுகின்றது. அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் விவாதப் பொருளாக அமைந்திருந்தது. அதில் ஆளுந்தரப்பு அமைச்சர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சாவின் சட்டத்தரணி பரீட்சை துஷ்பிரயோகமாக நடந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இது நீண்டகால வாதமாக காணப்படுகிறது. முறையற்ற விதத்தில் ஒருவர் பரீட்சை எழுதி உள்ளதாக ஆதாரங்கள் காணப்படின், அவருக்கு எதிராக நீதிப் பொறிமுறையை அணுகுவது அரசாங்கத்திற்கு பொருத்தமான செயற்பாடாகும். எனினும் தற்போது வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெறுமனவே குற்றச்சாட்டுகளையும், அம்பலப்படுத்துவோம் என்றவாறான பிரச்சாரங்களையே முன்னெடுத்து வருகின்றார்கள். உறுதியான நீதிப்பொறிமுறையை கட்டமைக்க தவறியுள்ளார்கள். கடந்த கால அரசாங்கங்கள் மீதான அவநம்பிக்கையே புதிய அரசாங்கத்தை மக்கள் தேர்வுசெய்துள்ளார்கள். இந்நிலையில் புதிய அரசாங்கம் கடந்த கால குற்றவாளிகளை தண்டிக்காது மீள மீள குற்றச்சாட்டுக்களை மாத்திரம் பிரச்சாரம் செய்வது ஒருவகையில் ஜனரஞ்சக நிலையை தக்க வைத்து மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே அமைகின்றது.
ஜனரஞ்சக அரசியல் இயல்பில் மடை மாற்றும் உத்தி முதன்மையான கருவியாகும். இலங்கையின் பொருளாதார நெருக்கடியோடு கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் விவசாயத்தை பெரிதும் பாதித்துள்ளது. அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. மக்களின் அடிப்படை தேவையான விவசாய பொருட்களின் விலைவாசி உயர்வடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரிசிச் சந்தைக் கையாளுதல்களின் பிரச்சினையை ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பினூடாக தீர்க்கும் உறுதிமொழியை வழங்கியது. ஆனால் அரிசி ஆலைகளின் கூட்டமைப்பு விவசாயிகளையும் நுகர்வோரையும் ஒரே மாதிரியாக சுரண்டுவதைத் தொடர்கிறது. மேலும் அரசாங்கம் வெட்கக்கேடான சரணாகதியைத் தேர்ந்தெடுத்துள்ளது. அரிசி இறக்குமதியை அது மீட்டெடுத்துள்ளது. கடந்த கால அரசாங்கங்களின் இவ்வாறான சரணாகதிகளை தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக கண்டித்துள்ளது. எனினும் நடைமுறையில் விலைவாசி உயர்வு சார்ந்து தீர்வினை வழங்காது, அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனத்தை மறைக்கும் வகையிலான செயல்களையே அரசாங்கம் முதன்மைப்படுத்துகிறது. பாராளுமன்ற விவாதத்திலும் மக்கள் பிரச்சினைகள் அருகி ஆளுந்தரப்பு-எதிர்த்தரப்பு கல்வி தகைமைகளும் அதிகார துஷ்பிரயோகங்களுமே பிரதான விவாதமாக மாறியுள்ளது. கல்வி சான்றிதழ் ஊழல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை, அரிசி-தேங்காய் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் தோல்வியில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கைகளே அரசாங்கத்தின் முதன்மை செயற்பாடாக உள்ளது. மோசடி செய்பவர்கள் பட்டியலை வெளியிடுவது வரவேற்கத்தக்கது. எனினும் மக்கள் பிரச்சினையை மறைப்பதற்கான உத்தியாக அரசியல் போட்டியை பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாகும்.
கடந்த 100 நாட்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் கணிசமான செல்வாக்கை பொருளாதாரமே நிரப்பியிருந்தது. எனினும் இப்ப பொருளாதார நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அமைவான சுயாதீனமான பொறிமுறையாக கருத முடியாது. மாறாக கடந்த ரணில்-பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் தொடர்ச்சித்தன்மை பேணப்பட்டு உள்ளமையையே அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் தேசிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தது. எனினும் ஆளுந்தரப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த 100 நாட்களும் சர்வதேச நாணயத்தின் ஒப்பந்தங்களை புதுப்பிப்பதும், தொடர்ச்சி பேணுவதும், அடுத்த கட்ட நிதியினை பெறுவதும் என்பவற்றுக்கான உரையாடல்களையும் சந்திப்புகளையுமே அதிகமாக முடக்கி விட்டிருந்தார்கள். சர்வதேச நாணயத்தின் நற்சான்றிதழ் பத்திரத்தை தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் அறிவித்துள்ள வருமான வரிக்குறைப்பு விகிதங்கள் மற்றும் இந்த ஆண்டு புதிய வாகனங்களுக்கான இறக்குமதி அனுமதியையும் கண்மூடித்தனமாக அரசாங்கத்தின் சாதனையாக கொண்டாட முடியாது. ஜனரஞ்ச பாணியில் இது சாதனையாக விளம்பரப்படுத்தப்படுகிறது. எனினும் மக்களின் அடிப்படை வாழ்க்கை செலவீனம் உயர்வடைந்துள்ளது என்பதே நிதர்சனமான பொருளாதார விளைவாகும். இதனை மறைக்கும் உத்தியாகவே வருமான வரி விகித வீழ்ச்சியை அரசாங்கம் முதன்மை செய்தியாக்கியது.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனரஞ்சக தேர்தல் பிரச்சாரத்தின் ஊடாக பெற்ற அறுவடையை, ஜனரஞ்சக அரசியல் ஊடாகவே கடந்த 100 நாட்களும் பாதுகாத்துள்ளார்கள். இதனையே இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமைகள் உறுதி செய்கின்றது. கவர்ச்சிகரமான மாற்றங்களே கடந்த 100 நாட்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவை இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் அடிப்படையான மாற்றங்களை உருவாக்க தவறியுள்ளது. இலங்கையின் அடிப்படையான அரசியல் கலாச்சார மாற்றம் என்பது இலங்கையில் ஆழமாக வேரூன்றி உள்ள பேரினவாத சிந்தனைகளை களைவதாகவும், ஏனைய தேசிய இனங்களின் உரிமையை ஏற்றுக் கொள்வதாகவும் அமைதல் வேண்டும். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ‘இனவாதம் அற்ற அரசியல் கலாச்சாரம்’ என்ற போர்வையில் மறைமுகமாக பேரினவாதத்தின் ‘ஒரு நாடு-ஒரு தேசம்’ அரசியல் பிரச்சாரத்தையே பாதுகாத்து வருகின்றார்கள். இதனை ‘மாற்றம்’, ‘விடியல்’ எனும் ஜனரஞ்சக வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுகின்றார்கள். இலங்கையின் வரலாறும் மக்களின் ஏமாற்றங்களை பதிவு செய்துள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கை மாவீரர்களைத் தேடி, ஏராளமான போலி மேசியாக்களின் சூழ்ச்சியில் விழுந்து, பல பொய்யான விடியல்களைக் கண்டுள்ளது. ஆட்சியாளர்கள் மாத்திரமின்றி விடியல் என்ற போர்வையில் சாதாரண மனிதர்களாலும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அண்மையில் கோவிட்-19க்கு மருந்தாகக் கூறப்பட்ட, தம்மிகா பேனியா எனப்படும், சோதிக்கப்படாத மூலிகை சிரப்பின் பின்னால் மக்கள் திரண்டார்கள். கோவிட்-19க்கான விடியல் மரணம் வரை இழுத்து சென்றது.