தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.
யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
தமிழரசுக் கட்சிக்குள் சிறீதரன் பிரிவு தாயக மைய அரசியலையும், சுமந்திரன் பிரிவு கொழும்பு மைய அரசியலையும் முன்னெடுத்து வருகின்றது. இதுவே இவ்விரண்டு பிரிவினருக்குமுள்ள கொள்கை முரண்பாடாகும். இந்த கொள்கை முரண்பாட்டை தெளிவாக புரிந்து கொள்ளாவிட்டால் முரண்பாட்டைத் தீர்ப்பது கடினமாக இருக்கும். சுமந்திரன் பிரிவு மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு தனது மேலாதிக்க நிலையை நகர்த்தி வருகின்றது. சிறீதரன் பிரிவுக்கு பொதுச் சபையில் தான் செல்வாக்கு உண்டு. மத்திய குழுவில் ஆதரவு குறைவு. ஆதரவு கொடுத்த பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அன்றாட கருமங்களோடு பொதுச்சபை பெரியளவிற்கு தொடர்புபடுவதில்லை. மத்திய குழுவே தொடர்பு படுகின்றது. இதனால் சுமந்திரன் பிரிவின் நகர்வுகளே கட்சியின் நகர்வுகளாக வெளியில் காட்சியளிக்கின்றன. பாராளுமன்ற குழுவிற்குள் சுமந்திரன் பிரிவுக்கு பெரிய செல்வாக்கு கிடையாது. சாணக்கியனும், சத்தியலிங்கமும் மட்டும் சுமந்திரன் பிரிவுக்கு ஆதரவாக உள்ளனர்.
இந்த இருதரப்புக்கும் இடையேயான கொள்கை முரண்பாட்டை புரிந்து கொள்வதற்கும் எத்தரப்பினுடைய கொள்கை சமகாலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்றது என்ற தீர்மானத்திற்கு வருவதற்கும் இரு கொள்கைகளினதும் சாதக, பாதகங்களை அறிந்து கொள்வது அவசியமாகும.; இந்தக் கொள்கை நிலைப்பாடுகள் தமிழ் அரசியலின் தலைவிதியை தீர்மானிப்பதில் பாரிய பங்கினை வகிக்கின்றன.
தாயகமைய அரசியல் தாயகத்தின் நலன்களை முதன்மைப்படுத்துவதாக இருக்கும். மாறாக கொழும்பு மைய அரசியல் கொழும்பு நலன்களை முதன்மைப்படுத்துவதாக இருக்கும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வரும் வரை எதிர்ப்பு அரசியல் அவசியமானது. அதுவே தமிழ்த் தேசிய அரசியலை தக்க வைக்க உதவும். 30 வருட காலம் அகிம்சா ரீதியான போராட்டங்களினூடாகவும், தொடர்ந்து 30 வருட காலம் ஆயுதப் போராட்ட அரசியல் ஊடாகவும் எதிர்ப்பு அரசியல் தக்கவைக்கப்பட்டது. இதன் வழி தமிழ்த் தேசிய அரசியல் பாதுகாக்கப்பட்டது. எதிர்ப்பு அரசியல் எப்போதும் தாயகத்தை முதன்மைப்படுத்தியதாக இருக்கும். மாறாக கொழும்பு மைய அரசியல் சமரசத்தை முதன்மைப்படுத்துவதாக இருக்கும். டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்படும் அரசியல் கொழும்பு மைய அரசியலே. அவரால் அரசியல் தீர்வையும் முன்னெடுக்க முடியவில்லை தமிழ்;த் தேசிய அரசியலை பாதுகாக்கவும் முடியவில்லை. இதன் படி பார்க்கும் போது தாயகமைய அரசியல் தமிழ்;த் தேசியத்தை வளர்க்கும் கொழும்பு மைய அரசியல் தமிழ் தேசியத்தை சிதைக்கும்.
மேலும் தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் தீர்வை பெறுவதற்கு தமிழ் மக்களுக்கான அரசியல் நியாயப்பாடுகளை பலப்படுத்துவது அவசியமானதாகும். கொழும்புடன் சமரச அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு அரசியல் நியாயப்பாடுகளை பலப்படுத்த முடியாது. இதன்வழி பார்க்கும்போதும் தாயக மைய அரசியல் தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை பலப்படுத்தும் மாறாக கொழும்பு மைய அரசியல் நியாயப் பாடுகளை பலவீனப்படுத்தும். தவிர தேசிய இனப் பிரச்சினை என்பது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகும். சர்வதேச அரசியல் தான் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தரக்கூடியதாக இருப்பதால் கொழும்பு மைய அரசியல் சர்வதேச ஈடுபாட்டை பலவீனப்படுத்தும். சமரச அரசியலுக்கு சென்றால் சர்வதேச தலையீடு தேவைப்படாது. சர்வதேச சக்திகளும் கையை விரித்து விடுவார்கள்.
இவற்றை விட கொழும்பு மைய அரசியல் சிங்களக் கட்சிகளின் ஊடுருவலை தமிழர் தாயகத்தில் அதிகரிக்கச் செய்யும். மக்களும் புறோக்கர் தேவையில்லை எனக் கருதி சிங்களக் கட்சிகளுடன் நேரடியாக ஊடாடத் தொடங்குவர். எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கொழும்பு மைய அரசியல் தமிழ் மக்களுக்கு தீங்கானது. தாயக மைய அரசியலே மிகவும் அவசியமானது. சுமந்திரன் தனது இருப்புக்காக கொழும்பு மைய அரசியலையையே முதன்மைப்படுத்துகின்றார். அவரது தனிப்பட்ட இருப்புக்காக ஒரு தேசிய இனத்தில் எதிர்காலத்தையே விலையாகக் கொடுக்க முடியாது.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுமந்திரன் கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்கென ஊடகப் பேச்சாளராக சிறீநேசன் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிலையில் இன்னோர் ஊடகப் பேச்சாளர் தேவைதானா? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. சுமந்திரனுக்கு கட்சியில் ஒரு பதவி கொடுக்கப்படல் வேண்டும் என்பதற்காக இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. சிறீநேசன் பாராளுமன்றப் பேச்சாளராக விளங்குவார் எனக் கூறப்படுகிறது. இது சிறீநேசனை மதிப்பிறக்கும் செய்வது போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றது.
தவிர ஊடகப் பேச்சாளர் என்பது முக்கிய பதவி. அதனை மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கலாமா? என்கின்ற விமர்சனமும் இங்கு எழுகின்றது. சுமந்திரனின் அரசியல் நிலைப்பாடுகளோடு முரண்படுபவர்கள் நிச்சயம் இது விடயத்தில் அவருடன் ஒத்துழைக்கப் போவதில்லை. சிறீதரன் பிரிவினர் இதற்கு பலத்த எதிர்ப்பைக் காட்டி யிருக்க வேண்டும். அவர்கள் எதிர்த்தாலும் மத்திய குழுவின் பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றுவர் என்பது தெரிந்த விடயமாயினும் எதிர்ப்பை பதிவு செய்வது இங்கு முக்கியமானது.
மத்திய குழுவின் தீர்மானத்திற்கு மாறாக செயல்பட்டார்கள் என்று கூறி பலர் நீக்கப்பட்டுள்ளனர். உள்;ராட்சி சபைக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது சுமந்திரன் கிளிநொச்சியில் தனியாக சுயேட்சைப் பட்டியலை இறக்கியிருந்தார். அவர் ஏன் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. கட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள் ஏன் நீக்கப்படவில்லை. இக்கேள்விகளுக்கெல்லாம் மத்திய குழுவினர் பதில் கூறியாக வேண்டும். ஒரு தனி நபர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மத்திய குழுவைக் கையாள்வதை எந்த வகையில் நியாயம் எனக் கூற முடியும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி சிதைந்து போவதை விரும்பவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவது ஒரு பாரம்பரிய வடக்கு – கிழக்கு முகம் கொண்ட கட்சி சிதைந்து போவதை மக்கள் ஏற்கவில்லை. தமிழரசுக் கட்சி சிதைந்தால் வடக்கு – கிழக்கு முகம் கொண்ட இன்னோர் கட்சியை குறுகிய காலத்தில் கட்டி யெழுப்புவது இலகுவான தொன்றல்ல. வடக்கு – கிழக்கு இணைந்த அரசியல் இல்லை யென்றால் தமிழர் தாயகம் என ஒன்று இருக்காது. தாயகம் இல்லையென்றால் தமிழ்த் தேசியம் இருக்காது. தமிழ்த் தேசியம்; இல்லையென்றால் தமிழ் அரசியலில் அர்த்தம் ஏதும் இருக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் கூட்டிருப்பை, கூட்டடையாளத்தை, கட்டுரிமையைப் பேணுவதற்கு தமிழர் தாயகம் இணைந்த அரசியல் அவசியமானது.
இரண்டாவது விரைவில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலும் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இரண்டு தேர்தல்களும் பாராளுமன்றத் தேர்தல் போல கொழும்பு மையத் தேர்தல் அல்ல. இவை தாயக மையத் தேர்தல்களாகும். இந்தத் தேர்தல்களின் தென்னிலங்கை கட்சிகளின் மேல் நிலைக்கு வந்தால் அதன் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் பற்றி நினைத்தே பார்க்க முடியாது.
இந்தத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போட்டியிட வேண்டும். இல்லையேல் உள்ளூராட்சிச் சபையில் பல சபைகள் தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற கூடிய நிலை ஏற்படலாம். அதேபோல வடமாகாண சபை, கிழக்கு மாகாண சபை என்பவற்றையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றலாம.; கிழக்கு மாகாண சபை தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்கு செல்வது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஒருங்கிணைந்த அரசியல் இல்லை யென்றால் வடமாகாண சபையும் பறிபோகும் நிலை உருவாகலாம். இந்த நிலை ஏற்பட்டால் பெருந்தேசியத்திற்குள் தமிழ்த் தேசியம் கரைந்து போகின்ற நிலையே ஏற்படும். அவ்வாறு கரைந்தால் மீண்டும் தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டி யெழுப்புவது கடினமானது.
மூன்றாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் புதிய அரசியல் யாப்பை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. இதன் போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து தீர்வு யோசனையை முன்வைக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்து தனித்து தீர்வு யோசனைகளை முன் வைத்தால் அவை ஒருபோதும் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது.
சுமந்திரன் இது விடயத்தில் அரசியல் யாப்புக் குழுவில் இரு தமிழ்ப் பிரதிநிதிகளை இணைப்பதில் முனைப்புக் காட்டி வருவதாகவே செய்திகள் வருகின்றன. சாணக்கியனையும், சத்தியலிங்கத்தையும் அரசியலமைப்புக் குழுவுக்கு அனுப்பி நல்லாட்சிக்கால “ஏக்கியராச்சிய” திட்டத்தை மேடை யேற்றவே அவர் முனைகின்றார். இந்த மோசமான சதி முயற்சியை அனைவரும் எதிர்க்க வேண்டும். சிங்களப் பெரும்பான்மையுள்ள குழுவில் தமிழர் இருவர் அங்கம் வகித்து எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழ்த் தரப்பு குழுவில் அங்கம் வகிப்பதை முன்னிறுத்தாமல் வெளியே நின்று கொண்டு தமிழ் மக்கள் சார்பில் தீர்வு யோசனையை முன்வைத்து பேரம் பேச வேண்டும். தமிழரசுக் கட்சி பலவீனமடைந்தால் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலமும் பலவீனமடையும். இந்த விவகாரத்தில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக பங்கு பெற்ற வேண்டுமே தவிர உதிரியாக பங்குபற்ற கூடாது. உதிரிகளாக பங்குபற்றுதல் பெருந் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்குள் மாட்டுப்படும் நிலையே உருவாக்கலாம்.
நான்காவது இனப்பிரச்சினை என்பது உள்நாட்டு பிரச்சினையல்ல. அது ஒரு சர்வதேசப் பிரச்சினை. இதற்கு உள்நாட்டுத் தீர்வு எதுவும் இல்லை. சர்வதேசத் தீர்வு தான் உண்டு. சர்வதேச மத்தியஸ்தத்தின்கீழ் தமிழ்த் தரப்பும் அரசதரப்பும் இரு தரப்புகளாக அமர்ந்து பேசும்போதே தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கி நகர முடியும். இத்தகைய ஒரு நிலைக்கு சர்வதேச சமூகத்தை தள்ளுவதற்கு ஒருங்கிணைந்த அரசியல் அவசியம். இதனூடாக சர்வதேச அரசியலை தமிழ் மக்களுக்கு சார்பாக திருப்ப வேண்டும். தமிழரசுக் கட்சி பலவீனப்பட்டால் சர்வதேசம் நோக்கிய ஒருங்கிணைந்த அரசியலை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது.
தமிழரசுக் கட்சியின் உட்பிரச்சினையால் தமிழ் மக்கள் மிகவும் நொந்து போயுள்ளனர். சாதாரண தமிழ் மக்களுக்கு இவைகளுக்கிடையேலான கொள்கை நிலைப்பாடுகள் எதுவும் விளங்காது. அவர்களது விருப்பமெல்லாம் கட்சிகள் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். தற்போது சாதாரண மக்கள் பொதுவெளியில் தமது கவலைகளை கூறத் தொடங்கியுள்ளனர். இக்கட்டுரையாளரை சாதாரண மக்கள் கேட்கும் ஒரே கேள்வி வருகின்ற தேர்தல்களிலாவது இவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்களா? என்பதே!
தமிழரசுக் கட்சியின் உட்பிரச்சினை தமிழ் மக்களின் மைய அரசியலை பாதிக்காத வரை தான் அது உட்கட்சிப்பிரச்சினை. பாதிப்பு அடையாளம் தெரியத் தொடங்கிய பின்னர் அது உட்கட்சிப் பிரச்சினை யல்ல. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை. தமிழ் அரசியலின் எதிர்காலத்தை பாதிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வதற்கு கட்சிக்காறர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. தேசியப் பிரச்சினை என்று வந்த பின்னர் சிவில் சமூகத்தின் தலையீடு தவிர்க்க முடியாதது. தற்போதைய நிலையில் கட்சியின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூட்டுத் தலைமை சிறந்த கருவியாக இருக்கும். இக்கூட்டுத் தலைமை யோசனையை இக்கட்டுரையாளர் முன்னரும் முன் வைத்திருந்தார். வீரகேசரிவார இதழில் அவை தொடர்பான கட்டுரைகளும் வெளிவந்திருந்தன. இது தொடர்பாக இக்கட்டுரையாளரை இயக்குனராக கொண்ட சமூக விஞ்ஞான ஆய்வு மையம் ஒரு மகஜரையே அப்போதைய தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவிடம் கையளித்திருந்தது. தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு இடம்பெற்றதற்கு முன்னரே இந்தக் கையளிப்பு நிகழ்ச்சி நிகழ்ந்திருந்தது. சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகிய மூவரையும் இணைத்து கூட்டுத் தலைமையை உருவாக்குங்கள் என கேட்டிருந்தது.
வாக்கெடுப்பு நடந்தால் கட்சி கட்டாயம் பிளவுபடும் என்பது இக்கட்டுரையாளரின் அசைக்க முடியாத கருத்தாக இருந்தது. தற்போது இடம்பெறும் பிரச்சினைகள் முன்னரே நடக்கும் என இக்கட்டுரையாளர் எதிர்வு கூறியிருந்தார். மாவை இது நல்ல யோசனை தான். இது தொடர்பாக முயற்சிகளை மேற்கொள்வதாக கூறியிருந்தார். ஆனால் பின்னர் எதுவும் நடக்கவில்லை. அதன் போக்கிலேயே விடப்பட்டதால் கட்சிக்கு இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டுத் தலைமையை உருவாக்குவதற்கு முன்னர் தாயகமைய அரசியலா? கொழும்பு மைய அரசியலா? என்பதில் உறுதியான தீர்மானம் எடுப்பது அவசியமானதாகும். கொழும்பு மைய அரசியல் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் சுமந்திரன் அதனை அடக்கி வாசிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அவர் அடக்கி வாசிப்பதற்கு சம்மதித்தால் தான் கூட்டுத் தலைமைக்குள் அவரையும் சேர்க்கலாம். அவர் அதற்கு தயாரில்லை யென்றால் மாற்று நடவடிக்கையையே மக்கள் எடுக்க வேண்டும். மாற்று நடவடிக்கை என்பது அவரை கைவிட்டு விட்டு செல்வதுதான்.
தமிழரசுக் கட்சியின் உட்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிவில் குழு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். அந்தக் குழுவில் கட்சி சாராத கல்வியாளர்கள், மதத் தலைவர்கள், சமூக முக்கியஸ்தர்கள் என்போரை சேர்க்க வேண்டும். அந்தக்குழு தனக்குள் கலந்துரையாடி உட்கட்சிப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வரைபடம் ஒன்றை உருவாக்க வேண்டும.; அந்த வரைபடம் பிரதானமாக இரண்டு விடயங்களை உள்ளடக்கியிருத்தல் அவசியம். ஒன்று கூட்டுத் தலைமையை உருவாக்குவதாகும். சிறீதரன், சுமந்திரனோடு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவரையும் சேர்த்து அந்த கூட்டத் தலைமையை உருவாக்கலாம்.
இரண்டாவது ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேறியவர்கள், வெளியேறப்பட்டவர்கள் அனைவரையும் கட்சியில் மீளவும் இணைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவர்களையும் சேர்க்கும் போது தான் கட்சி பழைய நிலைக்கு வரும். சிவில் குழுவின் தலைவராக திருகோணமலை ஆயரை நியமிக்கலாம். அவருக்கு ஏற்கனவே சமரசச் செயற்பாட்டில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. திருமலையில் கூட்டாக தமிழ்த் தேசியக் கட்சிகளை போட்டியிட வைத்தவரும் அவரே! அவருடன் தென்கயிலைஆதினம், ஆறுதிருமுருகன் போன்றோரையும் இணைக்கலாம். யாழ் பல்கலைக்கழக, கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் இணைத்துக் கொள்ளலாம். உட்கட்சிப் பிரச்சினை தீர்வுக்கு வந்த பின்னர் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இணைத்த ஒதுங்கிணைந்த அரசியலுக்கு முயற்சிக்கலாம்.
இப்பணி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணி. அக்கறையுள்ளவர்கள் தற்போது இதற்கு முயற்சிப்பது நல்லது