தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டு முயற்சியும் தோல்விகளிலிருந்து படிப்பினை பெறாத அரசியல் கட்சிகளும்! பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்க

ஈழத்தமிழர் அரசியலில் தமிழ் கட்சிகளின் கூட்டு பற்றிய உரையாடல் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அடைந்த தோல்விகளை அடுத்து அத்தகைய முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழரிடம் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒருமைப்பாடு ஏற்படுவது என்பது வரவேற்கப்பட வேண்டியதும் பலப்படுத்த வேண்டியதும் அவசியமானதாகும். ஆனால் அத்தகைய கூட்டுக்கள் எதற்கானது என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுகளின் போதும் அத்தகைய விடயம் அதிகம் பேச்சாளர்களாலும், வருகை தந்தவர்களின் அடையாளங்களாலும் முதன்மைப்படுத்தப்பட்டது. அவ்வாறே தனிப்பட்ட அழைப்புகளைக் கடந்து, பாராளுமன்றத்தில் நிகழ்ந்த சந்திப்புக்களையும் கடந்து, எதிர்வரும் 25ஆம் திகதி தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கம் முன்வைக்க போகும் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக உரையாட போவதாக தெரிவித்துள்ளது. அதே சந்தர்ப்பத்தில் வவுனியாவில் கூடிய தமிழரசு கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் சார்ந்தும் ஒன்றிணைவு சார்ந்தும் சில கருத்துக்களை முன் வைத்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்க் கட்சிகளின் கூட்டு சார்ந்து முன்வைக்கப்பட வேண்டிய அல்லது புரிந்து கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் பல காணப்படுகின்றன. இக்கட்டுரையும் அவ்விடயங்களை தெளிவுபடுத்த முனைகின்றது.

முதலாவது, தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் கூட்டின் அவசியப்பாடு பற்றிய அவர்களது விவாதிப்பின் மையவாத சிந்தனை, எதிர்வரும் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வது ஆகும். அவ்வாறானதொரு புரிதலோடே கட்சிகளிடையே இத்தகைய கூட்டு பற்றிய உரையாடலும் எழுகின்றது. அரசியல் கட்சிகள் என்பது தேர்தலுக்கானதே ஆகும். உலக வரலாறு முழுவதும் அத்தகைய அனுபவங்களோடும், கொள்கை நியாதிகளோடுமே அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. அதிலிருந்து விலகிச் செயல்படும் தமிழ் அரசியல் கட்சிகளை காண முடியாது. கடந்த கால அனுபவங்களும் அதனையே உணர்த்தி நிற்கின்றது. தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தேர்தல் ஆசனங்களை இலக்கு வைத்ததாகவே அமைந்துள்ளது. இவ்வாறான அனுபவ பின்னணியின் தொகுப்பின் தொடர்ச்சியாக, தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான அணி திரட்டலாகவே அவர்களது சமகால உரையாடல்களும் அழைப்புகளும் காணப்படுகிறது.

இரண்டாவது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் இழந்து போன ஆசனங்களை மீள எவ்வாறாவது தக்க வைத்தல் என்பது பற்றி எண்ணங்களே தமிழ் அரசியல் அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது. அதனடிப்படையிலேயே பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் பலவீனத்தை தமிழ்த் தேசியத்தின் தோல்வியாகவும், மக்கள் மீதான குற்றச்சாட்டுகளாகவும் முன்வைக்க முயல்கின்றனர். தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்துவதில் தமிழ் அரசியல் கட்சியின் பிரதான நபர்களே முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். அரசியல் கட்சிகளிடம் தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாப்பதற்கு முழுமையான செயற்றிட்டங்கள், குறைந்தபட்சம் இலக்கும் வரைபடமுமாவது காணப்படுகின்றதா என்பதை சிந்திக்க வேண்டும். இவ்வாறான தமது பலவீனமான பக்கங்களை மறைத்து கொள்வதற்காக தமிழ் மக்கள் மீது குற்றஞ்சாட்டுவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. தமிழ் மக்களின் திரட்சியை பலவீனப்படுத்தியவர்களாகவே தமிழ் அரசியல் கட்சிகளே காணப்படுகின்றது.

மூன்றாவது, தென்னிலங்கை முன்வைக்கப் போவதாக தெரியப்படுத்தும் அரசியல் யாப்புக்கான முயற்சி பற்றியது ஆகும். அத்தகைய முயற்சி தென்னிலங்கையின் ஆட்சி முறையிலும் அதன் போக்கிலும் இரண்டாவது ஆட்சி காலத்தை கட்டமைப்பதற்கான ஒரு வடிவமாகவே தெரிகின்றது. சாத்தியமற்ற ஒன்றுக்கான பொறிமுறை ஒன்றை தென்னிலங்கை கட்டமைக்க தொடங்கியுள்ளது. அத்தகைய சாத்தியமற்ற அரசியல் யாப்பு பற்றிய உரையாடல் சார்ந்து, ஈழத்தமிழர்களை பொறுத்தவரையில் கடந்த பல தசாப்தங்களில் அதிக அனுபவங்களை கொண்டவர்களாகவே காணப்படுகிறார்கள். அத்தகைய அனுபவங்களின் பிரதிபலிப்பாகவே சில கூட்டுக்களும் கட்சிகளும் காணாமல் போய் உள்ளன. அத்தகைய யாப்புகள் பற்றிய உரையாடலின் முன் ஈழத்தமிழருடைய ஐக்கியமும் ஒருமைப்பாடு புரிதலும் மிகப் பலவீனமானது என்பதை கடந்த காலம் முழுவதும் அனுபவித்துள்ளனர். அதிலிருந்து விடுபடுதல் என்பது அரசியல் கட்சிகளின் எண்ணமாக தென்படவில்லை. கடந்த காலங்களில் இருந்து எத்தகைய அனுபவத்தையும் பெறாததே கடந்த கால வரலாறு பற்றிய புரிதலாக உள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் விளங்காத ஒன்றையும், சாதாரண மக்கள் கவனத்தில் கொள்ளாத ஒன்றையும், சாத்தியப்பாடற்ற ஒன்றையும் விவாதித்து காலத்தை முடிவுறுத்துவதே அவர்களது பிரதான அரசியல் யுக்தியாக காணப்படுகிறது. மிகப் பெரிய புரிதல் ‘ஏக்கிய ராஜ்ஜிய ஆட்சி’ என்பதாகவே அடுத்து வரும் அரசியலமைப்பு பற்றிய விவாதம் தொடங்கப்பட்டுள்ளது.

நான்காவது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை இத்தகைய கூட்டுக்கள் எதனை உருவாக்குகின்றது என்பதை கடந்து உருவாக்கப்பட உள்ள அம்சங்கள் தமது அரசியல் பொருளாதார சமூக சேவைகளை மையப்படுத்த வேண்டும் எனக் கருதுகின்றனர். அதுவே அண்மைய பாராளுமன்றத் தேர்தலில் முடிவுகளின் புரிதலாக அமைகின்றது. அத்தகைய புரிதல் எதுவும் இன்றியே தமிழ் அரசியல் கட்சிகள் தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம் – யாப்பு உருவாக்கம் என்றெல்லாம் போலித்தனமாக விவாதிக்க முனைகின்றனர். இவை உரையாடலை கடந்து செல்லுமாயின் கூட பாராட்டத்தக்கது. எனினும் கடந்த காலங்களை போன்றே உரையாடலுடனேயே சுருக்கி மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் நிகழ்ச்சி நிரலையே வெளிப்படுத்துகின்றார்கள். மிகப் பிந்திய அனுபவத்தை கூட அவர்கள் கருத்தில் கொள்ளாதவர்களாக அரசியலை அசை போடுகிறார்கள். தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்களது இன்றைய எதிர்பார்க்கையில், தமது நாளாந்த நெருக்கடிகளை தீர்த்துக் கொள்வதில் ஏதாவது ஒரு அரசியல் கட்சி பங்கெடுக்கிறதா என்பதையே அவதானிக்கின்றனர். வறுமை, பொருளாதாரம் நெருக்கடி, நிர்வாக ரீதியான நெருக்கடி, கல்வி, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, ஆரோக்கியமான குடிநீர் போன்ற சாதாரண விடயங்களை நோக்கி அரசியல் கட்சிகள் நகர்கின்றனவா என்பதையும் அத்தகைய நெருக்கடிகளில் பங்கெடுப்பவர்களாக அரசியல் கட்சிகள் காணப்படுகின்றனவா என்பதையுமே முதன்மையாக அவதானிக்கின்றார்கள். சுண்ணக்கல் அகழ்வு என்பது தென்மராட்சியில் மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாக போர்க்காலம் முழுவதும் வலிகாமம் பகுதிகளிலும் பாரிய அகழ்வுகளை முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அது பற்றிய உரையாடல்களை அவ்வப்போது அதிகாரிகள் முன்வைக்கின்ற போது அவற்றை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை. அவ்வாறே நிர்வாக ரீதியான நெருக்கடிகளை மக்கள் முன்வைக்கின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் அந்த மக்களை அவர்களது கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளவில்லை. இதனையே இன்றைய தமிழ் அரசியல் கட்சிகள் மீது அதிக விமர்சனமாக மக்கள் முன்வைக்கின்றனர். தேசிய நன்மையும், தாயகம் பேசுதல் என்பது வடக்குக் கிழக்கில் இருக்கும் தமிழ் மக்களின் வாழ்வியலை பொருளாதாரத்தை சமூக பண்பாட்டிருப்பை பாதுகாப்பதற்கானது என்பதை தமிழ் அரசியல் கட்சிகள் எவையும் கருத்தில் கொள்ளவில்லை. இது பாராம்பரிய தமிழ் அரசியல் கட்சிகளை மக்களிடமிருந்து தொடர்ந்து விலத்தியே வைத்துள்ளது. இதனடிப்படையில் தமிழ் மக்களிடம் அவதானிப்புக்களையும் கேள்விகளையும் காணக்கூடியதாக அமைகின்றது.

ஒன்று, தமிழ் மக்கள் தங்களை நேசிக்கும் தங்கள் மீது கவனம் கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளைப் பற்றியும்; அதற்குரிய தலைமைகளை பற்றியும் தேடலை பல தசாப்தங்களாக ஆரம்பித்துள்ளனர். நிரப்பீடு செய்வதற்கான தலைமைகளோ அல்லது நிறுவனமயப்பட்ட அரசியல் கட்சிகளோ இல்லை என்ற எண்ணத்தோடு அவர்களது அரசியல் நகர்வுகள் மாறி வருகின்றன. கடந்த காலங்களிலும் அத்தகைய வாய்ப்புகளை சந்தர்ப்பங்களை தமிழ் மக்கள் வெளிப்படுத்தி இருந்தார்கள். 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் முதல் மாற்றுக்கான தேடலை தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியிருந்தார்கள். எனினும் அவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளக்கூடிய கட்சிகளையும் தலைமைகளையும் தேட முயலுகின்ற போது வெற்றிடமும் அதற்கான மறுமையும் அடையாளப்படுத்தப்படுகிறது.

இரண்டு, நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு உழைக்கக்கூடிய் அதற்காக போராடக்கூடிய் விட்டுக்கொடுப்புகளை வெளிப்படுத்தக்கூடிய் அர்ப்பணிப்பை கொண்டிருக்கக் கூடிய தலைமைகளை தமிழ் மக்கள் தேடுகிறார்கள். அதற்கு வலுவான ஒரு காரணமும் உண்டு. 2009களுக்கு முன்னர் விட்டு சென்ற தலைமையும் அமைப்பும் தமிழ் மக்களின் அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டு விடயங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய நிலையான தலைவர்கள் சமகாலத்தில் இல்லை என்பதையும், அமைப்புகள் இல்லை என்பதையும் தமிழ் மக்கள் நேரடியாக கண்டுகொள்கின்றார்கள். இதனால் அவர்கள் புதியவற்றை தேடுவது பற்றி உரையாட தொடங்கியுள்ளனர்.

மூன்று, தமிழ் மக்கள் தமது அரசியல் இருப்பை தமிழ் கட்சிகள் பாதுகாக்குமா என்ற கேள்வியை கேட்கத் தொடங்கியுள்ளனர். அந்த கேள்விக்கான பதிலை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலும் எதிர்காலத்தில் நடக்க இருக்கின்ற மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களும் வழங்கும் என்ற எதிர்பார்க்கை காணப்படுகிறது. தவிர்க்க முடியாமல் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆரோக்கியமான கூட்டு முயற்சி வரவேற்கக் கூடியது. ஆனால் அதன் போலி தன்மைகளும், இயலாமைகளும், வெற்று வார்த்தைகளும், நிகழ முடியாததை நிகழும் என்ற எதிர்பார்ப்பை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே தவறான அனுபவமாக மீண்டும் அமைய போகின்றது. அத்தகைய தவறான அனுபவங்களுக்குள் தமிழ் அரசியல் கட்சிகள் இயங்குவது என்பது சாதாரணமாக கண்டு கொள்ளக் கூடியதாக தெரிகின்றது. வர முடியாத ஒரு அரசியல் யாப்பு பற்றி, அவ்வாறு ஒரு அரசியல் அமைப்பு உருவானால் கூட அதில் ஈழத்தமிழருடைய பங்கு எத்தகையது என்பதை நிறுவ முடியாத போராட்டக் குணமற்ற போலி தேசியவாதிகளாவே தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பில் மக்களிடம் எண்ணங்கள் காணப்படுகின்றது.

எனவே, ஈழத்தமிழருடைய அரசியல் சரியான திசையில் பயணிக்க வேண்டுமாயின் புதிய தளத்தில் சிந்திக்க வேண்டிய தேவை எழுகின்றது. மீண்டும் பழையவற்றை கூட்டி கட்டுவதும்; அவற்றுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதும்; அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதும் அபாயமான விளைவுகளாகவே பொதுமக்களிடம் எண்ணக் குவிப்பு உருவாகியுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆகப்பெரிய கூட்டாக இருந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் கூட்டணிக் கட்சி வடக்கு-கிழக்கில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே பெற முடிந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலை கடந்து, பயணப்பட வேண்டும் என்ற விவாதம் ஒரு பக்கம் அமைகின்றது. மறுபக்கத்தில் தேர்தல் அரசியலுக்கு ஊடாகவே ஈழத் தமிழர்களுடைய அரசியலைக் கட்டமைக்க முடியும் என்பதே கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இதனை நோக்கி பயணிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் மக்களின் எண்ணங்களை நோக்கி செல்ல வேண்டியது அவசியமானதாகும். இதனூடாவே ஆரோக்கியமான விளைவுகளை ஈழத்தமிழர் அரசியலில் ஏற்படுத்த முடியும்.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)

Recommended For You

About the Author: Editor Elukainews