இலங்கையின் ஜனாதிபதி தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். சீன இலங்கை உறவு நீண்ட வரலாற்றை கொண்டது. ஏனைய ஜனாதிபதிகளையும் விட தற்போதைய ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க சீன சார்பு கொண்டு எழுச்சி பெற்ற தலைவராக அடையாளப்படுத்தப்படுகின்ற சூழலில் சீனாவுக்கும் இலங்கைக்குமான உறவு புதிய சுசகாப்த்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக தென்படுகின்றது. இலங்கை ஜனாதிபதிக்கு சீனா வழங்கிய இராணுவ மரியாதை உடனான வரவேற்பும் இராஜதந்திர ரீதியிலும் அரசியல் ரீதியிலும் உலகளாவிய தளத்தில் புதிய செய்தியை சொல்வதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். இக் கட்டுரையும் இலங்கை மீது சர்வதேச சக்திகளின் ஆதிக்கம் பலமடைகிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றது.
இலங்கையின் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது 15 க்கு மேற்பட்ட உடன்பாடுகள் இருநாட்டுக்கு இடையில் எட்டப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார ரீதியான நெருக்கடிக்குள் இருந்து மீண்டு எழுவதற்கு அதகைய உடன்பாடுகள் அவசியம் என்ற உரையாடல் நிலவுகின்ற போது மறுபக்கத்தில் அதிக உடன்பாடுகள் இலங்கைக்கு சீனாவுக்கும் இடையே நெருக்கமான அரசியல் பொருளாதாரம் இராணுவ உறவுகளை பலப்படுத்தும் என்பதே முக்கியமானது. இவை அனைத்தும் இலங்கை தீவுக்கு சீனா வழங்குகின்ற முக்கியத்துவத்தை அடையாளப்படுத்துவதாக தெரிகின்றது. இலங்கை இந்து சமுத்திரத்தின் மையத்திலும் இந்தியாவுக்கும் அருகாமையில் அமைந்திருக்கின்ற அரசியலானது சீனாவின் பிராந்திய போட்டியையும் சர்வதேச போட்டியையும் பலப்படுத்தும். இந்த உறவானது மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் மிக்க உறவாக கருதப்படுகிறது.
அதே நேரம் சீனாவோடு மட்டுமின்றி இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச ரீதியில் வலிமை பெற்ற அரசுகளோடு நெருக்கமான உறவை கொண்டுள்ளது. உலக நாடுகளுடனான நெருக்கத்திற்கான அடிப்படை இலங்கை எதிர் நோக்கிய வரும் பொருளாதார நெருக்கடியேயாகும். ஆனால் அத்தகைய நெருக்கடியின் பின்புலம் இலங்கை தீவின் நிலவும் இனப் பிரச்சனையும் அதனால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட போரும் அந்த போரின் விளைவாக எழுந்ததேயாகும். போர் முடிந்து கடந்த 15 ஆண்டுகளாக எந்த பங்களிப்புமின்றி விளங்கும் வடக்கு கிழக்கு பாரிய பொருளாதார சுமையாக தென் இலங்கைக்கு ஏற்படுத்தி வருகிறது. அன்னியச் செலாவணியும் மற்றும் சேவைத்துறையுமே பொருளாதார ரீதியான பங்களிப்பாக காணப்படுகிறது. அதன் அடிப்படையில் இலங்கையின் இன பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமானால் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வு இலகுவில் சாத்தியமாகும். வடக்கு கிழக்கு மீதான போருக்கு உலக நாடுகளிடம் தங்கி இருந்த நிலை போன்று பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு உலக நாடுகளில் தங்கியிருக்கின்ற சூழல் ஒன்றை புதிய ஆட்சியாளர்கள் வகுத்து வருவதோடு அதனை நியாயப்படுத்தவும் முயற்சிக்கின்றார். கடந்தகால ஆட்சியாளர் போன்று புதிய ஆட்சியாளர்களும் அதனையே பின்பற்றி வருகின்றனர் உள்நாட்டு கொள்கைகளிலும் பிராந்திய சர்வதேச அரசியல் கொள்கைகளும் ஒரே மாதிரியான இயல்புக்கங்களையே புதிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது இதனை விரிவாக விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது.
முதலாவது இலங்கை தீவு முக்கோண அரசியல் போட்டிக்குள் அகப்பட்டு உள்ளது சீன இந்தியா அமெரிக்கா என்ற முத்தரப்பும் இலங்கத்தீவை தமது நலங்களுக்கு ஏற்ற வகையில் கட்டமைக்க முயற்சிக்கின்றனர். அதில் மூன்று சக்திகளுக்கும் இடையில் பாரிய போட்டி நிலவுவது. இலங்கை அரசியலில் பொருளாதாரத்தில் மற்றும் இராணுவ ரீதியிலான ஆதிக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட விளைகின்றனர் இதற்கான உடன்படிக்கைகளையும் ஒத்துழைப்புக்களையும் மேற்கொள்வது அந்நாடுகளின் பிரதான உத்தியாகும். பொருளாதார நெருக்கடியை கையாளுகின்ற எண்ணத்தோடு அரசியல் இராணுவ தலையீடுகளை மேலாதிக்கம் செய்ய முயல்வதும் மரபாக மாறியுள்ளது. இதில் அயல் நாடான இந்தியா மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கதாக கருதப்படுகிறது. அதே நேரம் அரசியல் ரீதியிலும் இலங்கை இந்தியா உடன்படிக்கையின் மூலம் நெருக்கமான உறவையும் இனப் பிரச்சினை பொறுத்து கட்டி எழுப்பியுள்ளது. ஆனால் இலங்கையின் புதிய ஆட்சியாளரைப் பொறுத்தவரை இந்தியாவை ஏனைய நாடுகளுக்கு சமமான நாடாக கையாள முனைகிறதை காணமுடிகிறது. ஏனைய வல்லரசுகளை இலங்கை தீவில் தலையீடு செய்ய வாய்ப்பளிப்பதன் மூலம் இந்தியாவை சமமப்படுத்த முனைகிறது. இது இலங்கை ஆட்சியாளர்களின் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையாக காணப்படுகிறது. இது இலங்கை தீவின் அரசியலில் சமபலத்தோடு செயல்படுவதற்கான முறைமைக்கான தெரிகிறது. இந்தியாவில் தலையீட்டை இலங்கையின் அரசியலில் இருந்து முழுமையாகவே சமப்படுத்தி விட முடியும் என புதிய ஆட்சியாளர்கள் கருதுவது போன்று தெரிகின்றது. அதற்கான உத்திகளையே கடந்த காலத்தில் இருந்து முறைமை மாற்றம் என்ற வடிவத்திற்கூடாக நகர்த்துகின்றனர்
இரண்டாவது உலகளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டு இருக்கின்ற Great Powers நாடுகள் இலங்கை தீவின் ஏதோ ஒரு அடிப்படையில் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன. அமெரிக்கா இலங்கை அரசியலோடு பொருளாதார உதவிகளின் அடிப்படையில் நெருக்கமான உறவை கட்டமைத்து வருகிறது. அதிக பொருளாதாரம் உறவுகளை விஸ்தரிப்பதோடு இராணுவம் குறிப்பாக கடல்படை சார்ந்த அதிக புரிதலை ஏற்படுத்த முனைகின்றது. புதிய ஆட்சியை அமெரிக்க நலனுக்குட்பட்தாக கட்டமைத்து மீண்டும் கிடப்பில் போடப்பட்ட உடன்பாடுகளை மேற்கொள்ள நகர்த் தொடங்கியுள்ளது. சீனாவும் இந்தியாவும் பிராந்திய சக்திகளாக போட்டியிடுகின்ற போது அமெரிக்கா பூகோள சக்தியாக இலங்கை தீவை தனது பிடிக்குள் வைத்துக் கொள்ள முயலுகின்றது. ஏறக்குறைய மூன்று நாடுகளும் இலங்கை தீவை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு உடன்பாடுகளை மேற்கொண்டு வருவதோடு தூதுவர்களை தொடர்ச்சியாக அனுப்புவதோடு பொருளாதார உதவிகளையும் கையாண்டு வருகின்றது. இதன் விளைவு இலங்கையினுடைய இறைமை மூன்று பிரதான அரசுகளிடம் பங்கீடு செய்யப்பட்டிருப்பது உள்ளாட்டு அரசியலை எவ்வாறு நகர்த்த வேண்டும் என்பதை மூன்று சக்திகளதும் வரையறையும் திட்டமிடலும் அரங்கேறுவதற்கான வாய்ப்பினை அதிகம் கொண்டிருக்கும்.
மூன்றாவது இனப் பிரச்சனைக்குரிய தீர்வை முன்னெடுத்துச் செல்வதில் மூன்று பிரதான நாடுகளுக்கும் தனித்துவமான எண்ணங்கள் உண்டு. சீனாவை பொறுத்தவரை அரசின் இறைமையை அதிகம் முதன்மைப்படுத்தும் கொள்கைக்குள் இயங்குகின்ற அரசாக காணப்படுகிறது. இலங்கை தீவின் அரசியலில் தலையீடு செய்வதில்லை என்ற இலக்கோடு தனது கொள்கையை அடையாளப்படுத்திக் கொண்டாலும் இலங்கை அரசு பலவீனப்படும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும்; அரசியல் பொருளாதார இராணுவ உதவிகளை வழங்கி தனது தலையீட்டை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது. தாராண்மைவாத முகத்தோடு முன்னிறுத்தும் அமெரிக்கா இந்தியா போன்ற சக்திகள் மக்களிடமிருந்து ஜனநாயகம் என்ற போர்வைக்குள் செயல்பட முனைகின்ற சக்திகளாக விளங்குகிறன. ஆனால் அவை நடைமுறையில் ஜனநாயகத்துக்கு விரோதமான தமது நலனுக்கு பயன்படுத்துவதாக காணப்படுகின்றது. அதிலும் அமெரிக்கர் தராள ஜனநாயக முகத்தோடு மக்களின் நலன்களை முதன்மைப்படுத்துகின்ற நோக்கை காட்டிக் கொள்வதன் மூலம் அந்த மக்களை ஏமாற்றி நமக்கேற்ற வகையில் உலகில் உள்ள நாடுகளின் ஆட்சிகளை உருவாக்கி வருகின்றன. அதன் பிரகாரமே இலங்கை இனப் பிரச்சினைகுரிய தீர்வை அணுகுவதற்கு முனைகின்றன. இலங்கை தீவின் அரசியலை மாற்றிக்கொள்ளும் திறன் அமெரிக்காவுக்கு அதிகம் உண்டு என்பதை 2021 இலங்கைத் தீவின் அரசியலை அவதானிப்பவர்கள் கண்டுகொள்ள முடியும். அதனால் அமெரிக்கா மனித உரிமை சட்டத்தின் ஆட்சி ஜனநாயகம் என்பதன் ஊடாக புதிய அரசாங்கத்தின் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க முயலுகிறது.
நான்காவது இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை இந்திய ஒப்பந்தம் 13வது திருத்தச் சட்டம் என்பன இலங்கை தீவின் அரசியலோடு தலையீட்டை சாத்தியப்படுத்தியிருந்தது. இந்தியாவும் இனப் பிரச்சனை பொறுப்பான கடந்தகால தீர்மானங்களை விட்டுக் கொடுப்பை செய்வதற்கும் தனது நலனுக்கு உட்பட்ட விதத்தில் இலங்கை தீவை அணுகுவதையும் அதிகம் விரும்புகின்றது. ஆனால் இலங்கை தீவின் அரசியல் எதோ ஒரு வகையில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இந்தியா விலகிக் கொள்ளுதல் என்பது இனப்பிரச்சினை மட்டுமின்றி இலங்கை தீவின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்படுத்துவதோடு அமெரிக்கா சீனா தென்கொரியாக போன்ற நாடுகள் வழங்கப்படுகின்ற முக்கியத்துவமே இந்தியாவுக்கு உரியதாக அமையும். இந்தியா இலங்கை அரசியலில் புவிசார் ரீதியில் நெருக்கமானதாக காணப்பட்டாலும் அதன் பங்களிப்பு அமெரிக்கா போன்று தென்கொரியா போன்று அமையுமே அன்றி தனித்துவமான அடையாளத்தை கொண்ட அரசாக இந்தியாவை அணுக முடியாது. இதுவே புதிய அரசாங்கத்தின் உத்தியாக தெரிகின்றது. அதனை அடைகின்ற விதத்திலே சீன விஜயத்தை இராஜதந்திர ரீதியாக புதிய அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது. கட்சி அடிப்படையிலும் கொள்கை அடிப்படையிலும் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்ற ஜே.வி.பியும் சீன கம்யூனிஸக் கட்சியும் பிராந்தி அடிப்படையில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் புதிய திசைகளை நோக்கி அரசியலை கொண்டு செல்ல முயலுகிறது. இலங்கை தீவின் அரசியல் புதிய திசை நோக்கி பயணிப்பதற்கான நகர்வாகவே சீனாவுக்கான ஜனாதிபதி விஜயம் உணர்த்துகிறது.
எனவே இலங்கை தீவில் அரசியல் சர்வதேச சக்திகளின் அரசியல் களமாக மாறி உள்ளது இனப்பிரச்சினைக்குறிய தீPர்வு சர்வதேச சக்திகளின் இறைமைக்குள் நகருகின்ற சூழலை தோற்றுவித்திருக்கின்றது. உள்நாட்டு சக்திகள் அல்லது தமிழ் அரசியல் சக்திகள் எத்தகைய முனைப்பு எடுத்தாலும் அந்த முனைப்புகள் அனைத்தும் சர்வதேச சக்திகளின் நலன்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய விதத்தில் அமியக்கூடியதாக இல்லை என்பதே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சீன ஜனாதிபதி ஜின் பிங் இலங்கை தீவின் அரசியலில் புதிய சகாப்தத்தை தொடக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சர்வதேச சக்திகளும் பிராந்திய சக்திகளும் இதற்கு ஊடாக தமது நலன் நிறைவேற்றுவதாக இருந்தால் அதன் பின்னால் பயணிப்பதற்கு அனைத்து சக்திகளும் தயாராக உள்ளன. இந்தியாவை சீண்டுகின்ற விதத்தில் புதிய ஆட்சி அமையவில்லையே அன்றி ஏனைய அனைத்து அம்சங்களிலும் இந்தியாவை எவ்வாறு கையாளுதல் என்பதில் கரிசனையோடு நகருகின்றது. சீனாவும் தைய்வான் தீவை விட இலங்கை தீவை முதன்மையாக கருதுகின்ற சூழலில் அதுக்கான முக்கியத்துவத்தை இலங்கை ஜனாதிபதி சீன வருகையை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)