புதிய அரசியல் யாப்பு அனுரா அரசாங்கம் தெளிவான சமிக்கையை காட்டுவதில்லை…! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

புதிய அரசியல் யாப்பு அனுரா அரசாங்கம் தெளிவான சமிக்கையை காட்டுவதில்லை என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியுமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் முழு விபரமும் வருமாறு.
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக அனுரா அரசாங்கம் இன்னமும் தெளிவான சமிக்கையைக் காட்டவில்லை. இதற்கான பணிகள் ஜனவரியில் ஆரம்பமாகும் என நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். ஜனவரி மாதம் நடுப்பகுதியை கடந்து விட்ட நிலையிலும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. புதிய யாப்பு அனுரா அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையான முறைமை மாற்றத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் முறைமை மாற்றத்திற்கான காலம் இன்னமும் கனிந்து வரவில்லை. பணிகள் ஆரம்பமாகுவதை தாமதப்படுத்துவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கும்.
முறைமை மாற்றத்தை கொண்டு வர வேண்டுமாயின் பொது நிர்வாகக் கட்டமைப்பையும் படைக்கட்டமைப்பையும் சீராக்க வேண்டும். இந்தச் சீராக்கல் இல்லாமல் முறைமை மாற்றத்தை கிட்டவும் நெருங்க முடியாது. கிளீன் சிறீலங்கா திட்டமும் பெரியளவிற்கு நகர்வதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே அதற்கு எதிர்ப்புகள் வரத் தொடங்கி விட்டன. விழிப்புணர்வுப் பரப்புரையைத் தான் செய்கின்றோம் பணிகள் இன்னமும் தொடங்கவில்லையென அரசாங்கம் சமாளிப்பு செய்யப் பார்க்கின்றது. பொதுத்துறைக் கட்டமைப்பும் படைக் கட்டமைப்பும் அரசாங்கத்திற்கு வெளியில் தான் நிற்கின்றன.
பொதுத்துறைக் கட்டமைப்புக்குள் தற்போது மேல் நிலையில் உள்ளவர்கள் பதவி நீங்கினால் தான் சீராக்கல் இலகுவாக இருக்கும். இதற்கு சேவை மூப்பு பெற்று ஓய்வு பெறும் வரை சற்று பொறுமை காக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு உண்டு. மேல் நிலையில் உள்ள பலர் ஓய்வு பெறும் வயதுக்கு கிட்டவே நிற்கின்றனர். படைக் கட்டமைப்பிலும் இதே நிலைதான் படைக்கட்டமைப்பை முழுமையாக தங்களின் செல்வாக்கின் கீழ் கொண்டுவர தேசிய மக்கள் சக்தி பல வழிகளிலும் முயல்கின்றது.
படைக்கட்டமைப்பின் கீழடுக்கில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர.;  அது பெரியளவிற்கு தேசிய மக்கள் சக்தியின் நோக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்காது. மேல் கட்டமைப்பில் தான் மாற்றங்கள் தேவை. இது விடயத்தில் அதிரடி மாற்றங்கள் பெரிய பயனைத் தராது என்பதால் மேல் நிலையில் உள்ளவர்கள் ஓய்வு பெறும் வரை அனுர அரசாங்கம் பொறுமை காப்பதாக தெரிகின்றது. இதனால்தான் சேவை நீடிப்பில் அரசாங்கம் பெரிய அக்கறையைக் காட்டவில்லை. சவேந்திர சில்வாவிற்கும் சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை.
தற்போது மேல் நிலையில் உள்ளவர்கள் ஓய்வு பெறுவதற்கு 3 வருடங்களாவது பொறுத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. படைக் கட்டமைப்பை சீராக்கம் செய்யாமல்  முறைமை மாற்றம் தொடர்பாக ஒரு அடி கூட நகர முடியாது. கிளீன் சிறீலங்காவில் படையினரை இணைத்தமையும் தமிழ,; முஸ்லீம், மலையக தரப்புகளிலிருந்து எவரையும் நியமிக்காமையும் படையினரை தாஜா பண்ணத்தான். படைக் கட்டமைப்பில் பெருந்தேசிய வாதம் அடித்தளமாக இருப்பதால் அதில் கைவைக்க அரசாங்கம் தற்போது விரும்பவில்லைப்போல் தெரிகின்றது. படைக் கட்டமைப்பில் சீராக்கம் செய்தால் தான் ஏனையவற்றில் சீராக்கம் செய்யலாம் என்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும் தற்போதைய அதிகார ஒழுங்கில் படையினரும் தீர்மானகரமான அரசியல் சக்தியாக உள்ளனர.; படையினரை மீறி ஒரு அங்குலம் கூட அரசாங்கத்தினால் நகர முடியாது. இங்கு பாதுகாப்பு பிரச்சினையும் வேறு உள்ளது. படையினர் கைவிட்டால் கோத்தபாய ராஜபக்சவின் நிலைமை தான் அனுராவுக்கும் ஏற்படும். தீர்மானம் எடுக்கும் அரசியல் சக்தி என்ற விடயத்தில் படைத்தரப்பு பாகிஸ்தான் போல உயர்வானதாக இல்லாவிட்டாலும் அதன் ஆதிக்கத்தை ஒருபோதும் குறைத்து மதித்து விட முடியாது.
இந்தத் தடைகளினால் தான் அரசியல் யாப்பு செயன்முறை தொடங்க 3 வருடங்கள் அவகாசம் தேவைப்படும் என  அரசாங்க தரப்பினர் முன்னர் கூறியிருந்தனர். தற்போது அரசாங்கம் நடைமுறை நிலைமையை கற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்தக் கற்றல் நடவடிக்கைக்கு கூட சிறிது கால அவகாசம் தேவைப்படும். “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்ற நிலைக்கு செல்வதற்கு தற்போது அரசாங்கம் தயாராகவில்லை. எல்லாவற்றிற்கும் “ஈரடி முன்னால் ஓரடி பின்னால்” என்ற மசேதுங்கின் கோட்பாட்டை பின்பற்றவே முயல்கின்றது.
இவைத் தவிர புதிய யாப்பின் உள்ளடக்க பிரச்சினையும் அரசாங்கத்திற்கு உண்டு. உள்ளடக்க விடயத்தில் பிரதானமாக மூன்று விடயங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. ஜனாதிபதி முறை நீக்கம், தேர்தல் முறை மாற்றம், இனப்பிரச்சினைத் தீர்வு என்பனவே அவ் மூன்று மாகும். இந்த மூன்று விடயங்களும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் நலன்களுடனும் தொடர்புபட்டவை இன ஒடுக்குமுறை சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் முன்னரைப் போல தமிழ,; முஸ்லீம், மழலையக மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக அரசாங்கத்தினால் செயற்பட முடியாது. இது புவிசார் பூகோள அரசியல் போட்டிகாரர்களுக்கு தாங்களாகவே பிடி கொடுத்ததாகவும் அமைந்து விடும். இதைவிட தேசிய மக்கள் சக்திக்கு மூன்று சமூகத்தவர்களினதும் ஆதரவு கிடைத்தமையினால் முன்னரைப் போல அவர்களுக்கு எதிராக செயல்பட முடியாது. இது விடயத்தில் தேசிய மக்கள் சக்தி தனது மரபு ரீதியான இனவாத முகத்திற்கும் புதிய நல்லிணக்க முகத்திற்குமிடையே ஊசலாடுகிறது எனக் கூறலாம்.
ஜனாதிபதி முறைமையில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று ஜனாதிபதியிடமுள்ள அதிகாரங்கள் இரண்டாவது தமிழ், முஸ்லீம், மலையக மக்களும் ஜனாதிபதி தெரிவில் பாதிப்பு செலுத்தக் கூடியதாக இருக்கின்றமை. இந்த இரண்டும் புதிய அரசியல் யாப்புருவாக்கத்திலும் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கும். தற்போதைய அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு அளவு கடந்த அதிகாரங்களை வழங்குகின்றது. இந்த அதிகாரத்தில் ருசி கண்டவர்கள் அதனை நீக்கம் செய்வதை பெரியளவிற்கு விரும்ப மாட்டார்கள். சந்திரிகா, மைத்திரி போன்றவர்கள் ஜனாதிபதி முறை நீக்கம் என்ற கோ~த்துடனும் தான் ஆட்சிக்கு வந்தனர.; பதவி ஏற்ற பின் பதவி ருசி காரணமாக அதனை நீக்குவதற்கு பெரியளவிற்கு ஒத்துழைக்கவில்லை. மைத்திரி ஆரம்பத்தில் அதிகாரங்கள் தொடர்பான வரையறைக்கு இணங்கினாலும் பின்னர் பதவியைக் காப்பாற்றுவதிலேயே அக்கறையாக இருந்தார். இது விடயத்தில் 17வது திருத்தம், 19வது திருத்தம், 21வது திருத்தம் என்பன சில வரையறைகளைக் கொண்டிருந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரங்களை அவை பெரியளவிற்கு பலவீனப்படுத்தவில்லை. சில ஜனாதிபதிகள் வரையறையை மீறியும் செயற்;பட்டனர் வரையறைகளில் முக்கியமாக இருக்கின்ற அரசியலமைப்புப் பேரவை செயற்படுவதில் கூட பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. சில ஜனாதிபதிகள் யாப்பை மீறியும் செயற்பட்டனர். ரணில் விக்கிரமசிங்க இதில் குறிப்பிட்டு கூறக்கூடிய ஒருவராக உள்ளார்.
இது விடயத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்களையே அவர் உதாசீனம் செய்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல், பொலீஸ்மா அதிபர் நியமனம், என்பவற்றில் இந்த மீறல்கள் அப்பட்டமாகத் தெரிந்தன. இதற்கு முன்னர் தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களில் தான் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்பட்டன. குருந்தூர் மலை விவகாரத்தை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தப் பழக்க தோ~த்தில் பின்னர் தென்னிலங்கை விவகாரம் தொடர்பாகவும் மீறப்பட்டன. உள்;ராட்சி சபைத் தேர்தலை நடத்தாமை இதற்கு சிறந்த உதாரணமாகும். 13 வது திருத்த விவகாரத்தில் அரசியல் யாப்பே செயலற்றுக் கிடக்கின்றது என்பது வேறு கதை. எனவே தற்போதைய ஜனாதிபதி அனுராவும் பதவி தந்த அதிகாரங்களை துறக்க விரும்புவார் எனக் கூற முடியாது.
பெருந்தேசிய வாதிகளும் தேர்தல் முறையை மாற்றாமல் ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள். பலதடவை இந்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. அப்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தனி ஒரு கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவது கடினம். சில விதி விலக்குகள் நிகழ்ந்தன என்பது உண்மைதான். தேசிய மக்கள் சக்தி 2ஃ3 பெரும்பான்மையை பெற்றமை விதிவிலக்கே! ஆனால் பொதுப் போக்கில் பெரும்பான்மை  பெறுவது கடினம். இது கூட்டரசாங்கத்தை உருவாக்கப் பார்க்கும.; இந்த கூட்டரசாங்கத்தில் தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் பேரம் பேசும் சக்திகளாக விளங்குவர். இதனை தடுப்பதற்காகவே ஜனாதிபதி முறை நீக்கத்திற்கு முன்னர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தலை மாற்றி சார்பு ரீதியான பெரும்பான்மைத் தேர்தல் முறையை அதாவது தொகுதிவாரியான தேர்தல் முறையை கொண்டு வருமாறு வலியுறுத்துகின்றனர். இந்தப் பொதுப் போக்கை பயன்படுத்தி கடந்த காலத்தில் தொண்டமானும், அஸ்ரப்பும் தாம் சார்ந்த மக்களுக்கு சில அனுகூலங்களை பெற்றுக் கொடுத்தனர்.
இரண்டாவது ஜனாதிபதி முறை ஒரு சர்வாதிகார முறையாக இருந்தாலும் அவர் அனைத்து மக்களும் வாக்களித்து தெரிவு செய்யப்படுவதனால் அனைத்து மக்களினதும் பொதுக் குறியீடாக விளங்குகின்றார். பாராளுமன்ற முறையில் பிரதமர் இவ்வாறான பொதுக் குறியீடாக இல்லை. அவரை அனைத்து மக்களும் தெரிவு செய்வதில்லை. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையே அவரை தெரிவு செய்கின்றது. இங்கு ஜனாதிபதி தெரிவில் தமிழ், மலையக முஸ்லீம் மக்களுக்கு ஒரு பிடி காணப்படுகின்றது. அதுவும் சிங்களத் தரப்பில் கடும் போட்டி நிலவும் போது தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் வலிமையான பேரம் பேசும் சக்திகளாக எழுச்சி பெறுவர். 1988 தேர்தல், 2005 தேர்தல், 2015 தேர்தல், என்பவற்றில் இந்த நிலை காணப்பட்டது. தமிழ்த் தலைவர்கள் இதில் கோட்டை விட்டனர் என்பது உண்மையாயினும் மலையக, முஸ்லீம் மக்கள் பல அனுகூலங்களைப் பெற்றனர் என்பதை மறுக்க முடியாது. தொண்டமான் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை பெற்றுக் கொடுப்பதில் வெற்றி கண்டார். அஸ்ரப் ஒலுவில் துறைமுகம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம் என முஸ்லீம் மக்களுக்கு சில அனுகூலங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதன் காரணமாக எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ஜனாதிபதி முறை நீக்கப்படுவதை தமிழ், முஸ்லீம், மலையக மக்களும் பெரியளவிற்கு விரும்பவில்லை.
உள்ளடக்கத்தில் இரண்டாவது விடயம் தேர்தல் முறை மாற்றமாகும். தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை பல குறைபாடுகளைக் கொண்டது. ஒரு தேர்தல் மாவட்டத்திற்கு பல பிரதிநிதிகள் இருப்பதால் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை அடையாளம் காண முடியாத நிலை, மக்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்கின்றது. விருப்ப வாக்கு முறை ஒரு கட்சிக்குள்ளேயே மோதல்களை உருவாக்குகின்றது. இதனால் கட்சிகள் பிளவு பட்ட வரலாறும் உண்டு. அறுதிப் பெரும்பான்மையைத் தனி ஒரு கட்சி பெற்று ஆட்சி அமைப்பது கடினம். கூட்டரசாங்கம் அமைக்க வேண்டிய நிலை. கூட்டரசாங்கத்தின் நிச்சயமற்ற நிலை என்கின்ற முக்கிய குறைபாடுகளுடன் வேட்பாளர்களின் தேர்தல் செலவினம் அதிகரித்தல் , நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகமாக இருத்தல் தேசியப் பட்டியல் மூலம் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தெரிவு செய்யப்படக்கூடிய நிலை இருத்தல் என்பவற்றையும் கொண்டது. சிதறி வாழ்கின்ற மலையக, முஸ்லீம் மக்களுக்கு இத்தேர்தல் முறை பிரதிநிதித்துவத்தை வழங்குகின்றது. கண்டியில் மலையக மக்களுக்கும், வன்னியில் முஸ்லீம் மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்ததைக் குறிப்பிடலாம்.
சிங்களப் பிரதேசங்களில் செயற்படும் சிறிய கட்சிகளுக்கும் இத்தேர்தல் முறை வாய்ப்பாக உள்ளது. இன்று மரபு ரீதியான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி சிறீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பிரமுனை என்பனவும் சிறிய கட்சிகளாக உள்ள நிலையில் அவற்றுக்கும் பிரதிநிதித்துவம் இத்தேர்தல் முறை நீக்கின் கிடைக்காது போகலாம். 2020 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப் பட்டியல் மூலம் தான் ஒரு ஆசனம் கிடைத்தது. எனவே முஸ்லீம,; மலையக கட்சிகளும் தென்பகுதி சிறிய கட்சிகளும் தற்போதைய தேர்தல் முறை நீக்கத்தை கட்டாயம் எதிர்க்கும்.
பொதுவாக புதிய தேர்தல் முறை என வரும்போது விகிதாசாரமும,; தொகுதி வாரியும் கலந்த கலப்புத் தேர்தல் முறை பற்றியே அதிகம் பேசப்படுகின்றது. இந்த முறையின் கீழ் மலையக, முஸ்லீம் தமது பிரதித்துவத்தை அதிக அளவில் இழப்பர.; கண்டி, பதுளை போன்ற மாவட்டங்களில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காது போகும். இவ்வாறு கிடைக்காமல் போவது உரிமை ஒன்றை வழங்கி விட்டு பறிப்பது போல அமைந்து விடும் முன்னர் போல வழங்கியதை பறிப்பது எதிர்காலத்தில் இலகுவான ஒன்றல்ல. தொகுதிகள் பிரிக்கும் போதும் மலையக, முஸ்லீம் மக்கள் தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்களுக்கு கலப்பு தேர்தல் முறை பெரிய பாதிப்பை கொடுக்காது விட்டாலும் மலையக, முஸ்லீம் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களும் எதிர்ப்புக் குரலை காட்டவே முனைவர்.
உள்ளடக்கத்தில் மூன்றாவது விடயம் இனப் பிரச்சினைக்கான தீர்வாகும். இது இல்லாமல் புதிய அரசியல் யாப்பை உருவாக்க முடியாது. தமிழ் மக்கள் மட்டுமல்ல சர்வதேச, பிராந்திய சக்திகளும் தீர்வை எதிர்பார்த்து நிற்கின்றனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு கோட்பாட்டு ரீதியாக தேசிய இன அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுய நிர்ணய உரிமை அங்கீகாரம், சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சிப் பொறிமுறை என்பவற்றை எதிர்பார்க்கின்றனர். அந்த ஆட்சிப் பொறிமுறை சுயநிர்ணய முடைய சமஸ்டியாகவே இருக்கும.; சுய நிர்ணயமுடைய சமஸ்டி யாப்புச்சட்டரீதியாக தாயக ஒருமைப்பாடு, சுய நிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசமாக பங்கு கொள்வதற்கான பொறிமுறை, சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றை கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். இதனை அனுரா அரசாங்கம் பூர்த்தி செய்யுமா? என்பது சந்தேகமே!
அனுரா அரசாங்கம் குறைந்தபட்சம் 13வது திருத்தத்தை யாப்பில் சேர்க்க முயற்சிக்கும் அல்லது நல்லாட்சிக் கால  “ஏக்கிய ராச்சிய”  யோசனையை முன்வைக்கப் பார்க்கும.; எந்த வகையிலும் 13வது திருத்தத்திற்கு குறைவான ஒன்றை முன்மொழிய முடியாது. தவிர 13வது திருத்தம் இந்தியத் திணிப்பு என்ற கருத்து தேசிய மக்கள் சக்தியிடமும் உண்டு. சிங்கள மக்களிடமும் உண்டு. இதனால் 13 வது திருத்தத்தை இல்லாதொழிக்க அனுரா அரசாங்கம் முனையலாம். ஆனால் 13வது திருத்தம் இந்திய நலன்களோடு தொடர்புடைய ஒன்றாக உள்ளமையினால் இந்தியா இந்த நீக்கத்தை ஏற்றுக் கொள்ளாது. 13 வது திருத்தம் இல்லாமல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை இந்தியாவினால் பாதுகாக்க முடியாது. இந்தியாவிற்கு இலங்கை மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரேயொரு ஆவணம் இந்திய – இலங்கை ஒப்பந்தம் தான.;
எனவே புதிய அரசியல் யாப்பு சிக்கல்களை மொத்தமாக இணைத்து நோக்கும் போது புதிய அரசியல் யாப்பு அதிக தூரத்தில் உள்ளது என்றே கூறலாம்.

Recommended For You

About the Author: Editor Elukainews