இந்திய எஜமானித்துவத்தின் இன்னொரு வடிவமாக யாழ்ப்பாண கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம்? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

இந்திய-இலங்கை உறவு சுமூகமானது போன்று வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் அடிப்படையில் அதிக முரண்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தென்படுகிறது. அதேநேரம் ஈழத் தமிழர் இந்திய உறவு மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்னர் அந்த உறவின் விரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இதன் அடிப்படையில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா மேற்கொண்ட நடவடிக்கை வடக்கு கிழக்கு தமிழர்கள் மத்தியில் மேலும் ஒர் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. அதாவது யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தை திருவள்ளுவர் கலாச்சார நிலையமாக பெயர் மாற்றிய நிகழ்வு அதிக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரையும் அதன் முக்கியத்துவத்தையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் தேட முயற்சிக்கிறது.

திருவள்ளுவரை யாழ்ப்பாண தமிழ் சமூகம் அல்லது வடக்கு கிழக்கு தமிழர்கள் புலமைக்கும்; சிந்தனைக்கும் உட்படுத்தி அறிஞனாக கருதுவது மட்டுமின்றி வடக்கு கிழக்கில் அதிகமாக திருவுருவங்களை நிறுத்வி வள்ளுவரை வழிபாடு செய்யும் சமூகமாக காணப்படுகிறனர். அது மட்டுமன்றி பல்கலைக் கழகங்களிலும் பொதுமக்கள் தரிசிக்கக் கூடிய இடங்களில் வள்ளுவருடைய திருவுருவச் சிலைகளை அமைத்து வழிபாடுகளும் விழாக்களும் ஆய்வு மகா நாடுகளும் முன்னெடுத்து வருகின்றனர். சிலர் தங்கள் சொந்த வீடுகளிலேயே திருவள்ளுவரது சிலைகளை நிறுவி பூசித்து வருகின்றனர். திருவள்ளுவரை தெய்வமாக கருதும் வடக்கு கிழக்கு தமிழர்கள் வள்ளுவத்தின் மகிமையை புரியாதவர்கள்; இல்லை என்பதை விளங்கிக் கொள்வது அவசியமானது. ஆனாலும் இந்தியாவின் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண கலாச்சாரம் நிலையத்தை திருவள்ளுவர் கலாச்சார நிலையமாக மாற்றியது சமூக நோக்கு நிலையில் அதிக குழப்பத்தைத் தந்துள்ளது. இதனை அவசரமாகவும் யாழ்ப்பாண சமூகத்துக்கு தெரியாததென்றாகவும் கடந்த 18.01.2025 மாற்றப்பட்டுள்ளமை அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அடிப்படையை விளங்கிக் கொள்வது அவசியமானது.

முதலாவது யாழ்ப்பாண கலாசார நிலையத்தை பெயர் மாற்றம் செய்வதற்காக இலங்கைகான இந்திய தூதர் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தது முக்கியமான காலப்பகுதியில் என்பது கவனிக்கத்தக்கது. அத்தகைய நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாண சமூகத்தை சேர்ந்தவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் திரைநீக்கம் செய்யப்பட்ட போதே பெயர் மாற்றத்தை அறிந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல அது மக்களால் தேர்வு செய்யப்பட்ட வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து மூடிய அறையில் இலங்கைக்கான இந்திய தூதவர் உரையாடியுள்ளார். தூதுவர்கள் மூடிய அறையில் உரையாடுவது அவர்களது இராஜதந்திரத்திற்கும் விடயத்திற்குமான பரிபாசை என்பதில் குழப்பம் இல்லை. ஆனால் அதற்கான தகவல்களையும் அதிர்ச்சியான கருத்துக்களையும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்திமையே கவனத்திற்குரியதாக மாறியுள்ளது. இதனாலேயே பெயர் மாற்றத்துக்கு அப்பால் இதனை ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாக விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக எழுந்துள்ளது.

இரண்டாவது திறக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழ்மொழி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது இலங்கை அரசியலமைப்பை மீறுவதாகவே காணப்படுகிறது. வடக்கு கிழக்கில் தமிழ் மொழி பிரயோக மொழியாகவும் அதற்கு அமைவாகவே தமிழ் சிங்களம் ஆங்கிலம் வரிசைப்படி பெயர் பலகைகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்ற வழக்கம் ஒன்று வடக்கு கிழக்கு காணப்படுகிறது. அத்தகைய சட்டப்பிரமாணங்கள் எல்லாவற்றையும் நிராகரித்து விட்டு மொழிகளின் முக்கியத்துவத்துக்கான சட்ட ஏற்பாடுகளை புரிந்து கொள்ளாமல் அவ்வகை நடவடிக்கை அதன் பின்னால் உள்ள குழப்பங்களை மேலும் வலுப்படுத்துகிறது. இலங்கையின் சட்டத்தை இன்னோர் நாடு வறிதாக்குகிறது. அதனாலேயே இது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலோடு மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வியை எழுகிறது.

மூன்றாவது பெயர் மாற்றம் என்பதும் அவ்வகை நிகழ்வுகளை செழுமைப்படுத்துகின்ற போது அதன் எல்லைக்குட்பட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புகளும் நிர்வாகக் கட்டமைப்புகளும் பொது மக்களும் அபிப்பிராயத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது பொதுவழக்காகவே காணப்படுகிறது. இந்தியத் துணைத்தூதரகம் நிர்வகிக்கப்படுவது என்பதற்காக அதன் பாவனை பிரயோகமும் அதனை அனுபவிக்கின்ற மக்களும் பிரதேசத்தின் தனித்துவமான அடையாளங்களோடு காணப்படும் மக்களது எண்ணங்களையும் நிராகரித்துவிட முடியாது. அதனை அடியொற்றியே மாற்றங்களையும் மீள் அமைப்புகளையும் உருவாக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது. 1935 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தினால் தென் இலங்கையில் அமைக்கப்பட்ட பண்டாரநாயக்க நினைவு மண்டபம் இன்று வரை அதே பேரோடு அலங்கரிக்கப்படுகிறது. அதனை சீன அரசாங்கம் கென்பூசியஸ் நினைவு மண்டபம் என பெயர் மாற்றம் செய்யவில்லை. பல தசாப்தங்களாக அதனை பண்டாரநாயக்காவின் நினைவு மண்டபமாகவே பராமரித்து வருகிறது. இந்த அனுபவம் யாழ்ப்பாண கலாச்சாரம் மண்டபத்திற்கும் இருந்திருக்க வேண்டும் அல்லது அதனை உருவாக்குகின்ற போது திருவள்ளுவர் கலாச்சார நிலையம் என தொடங்கி இருக்க வேண்டும். பெயர் மாற்றம் செய்வதும் வரலாற்று நியதிகளை மாற்ற நினைப்பதும் ஒரு சமூகத்தின் இருப்பை கேள்விக்கு உட்படுத்துவது மட்டுமல்ல கேலிக்கு உட்படுத்துவதாகவும் காணப்படுகிறது.

நான்காவது இத்தகைய பெயர் மாற்றம் திருவள்ளுவரின் எண்ணத்தை மத அடையாளத்துக்குள்ளால் சிந்திப்பதற்கான எண்ணத்தை தருவதோடு யாழ்ப்பாண கலாச்சாரம் மண்டபம் மதத்தின் அடையாளமாக மாற்றப்படுகிறதா என்ற குழப்பத்தை தருகின்றது. வடக்கு கிழக்கு ஏதோ ஒரு அடிப்படையில் தனித்துவமான அரசியல் அடிப்படையை கொண்டது. அதன் நீண்ட வரலாறு யாழ்ப்பாண தீபகற்பத்தின் அமைவிடத்திலிருந்து தொடங்கப்பட்டது. யாழ்ப்பாண தீபகற்பம் தனக்கே உரித்தான வரலாற்று மரபுகளையும் பண்புகளையும் கொண்டிருக்கின்றது. மத வேறுபாடுகளைக் கடந்து முரண்பாடுகளை கடந்து ஒன்றிணைந்து செயல்படுவதற்கான இயல்பூக்கத்தைக் கொண்டது. இந்திய தூதுவர் நடவடிக்கை இவை எல்லாவற்றையும் நிராகரிப்பது போன்றே தென்படுகின்றது. வள்ளுவரை ஈழத் தமிழர்கள் மத அடையாளமாக கொண்டாடுகின்ற மனோநிலை ஒருபோதும் கொண்டவர்கள் அல்ல என்பது கடந்த காலத்தில் ஈழத் தமிழர்களுடைய அரசியல் கலாச்சார கொண்டு கண்டு கொள்ள முடியும். எனவே யாழ்ப்பாண கலாச்சாரம் நிலையத்தின் பெயர் மாற்றமானது மத அடையாளத்தின் வடிவமாக்கி சமூகங்களின் ஒருமைப்பாடுடைய நிலைப்பாட்டை சிதைப்பதற்கு முயல்வதாக தெரிகின்றது.

ஐந்தாவது இத்தகைய நடவடிக்கை தன்னிச்சையாக இந்திய தூதரகம் புதுடெல்லி அதன் அதிகார கட்டமைப்பு என்பன திட்டமிட்டது போன்று காணப்படுகின்றது. வடக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இந்தியாவின் நகர்வுகள் வடக்கு மக்களையும் அரசியல் சமூகத்தின் அவதானிப்புகளையும் கவனத்தில் கொள்ளாது தனித்து இயங்க முடியும் என்பதை காட்டுவதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் போன்றே தெரிகிறது. அதாவது வடக்கில் எத்தகைய நடவடிக்கையும் இந்தியா தனது விருப்பத்துக்கு உட்பட்ட விதத்தில் மேற்கொள்ள முடியும் என்பதை இத்தகைய நடவடிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளது. இது வடக்கின் அரசியல்வாதிகளின் பலவீனமான பக்கமாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஆறாவது இலங்கையின் ஜனாதிபதி அநுராகுமார திஸநாயகாவின் சீன விஜயம் நிறைவு பெற்ற தருணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இதற்கு ஒரு அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக தென்படுகிறது. சீனாவுக்கும் இலங்கைக்குமான நெருக்கம் பொருளாதார விடையங்களில் மட்டுமின்றி ஏனைய விடயங்களிலும் காணப்படுகிறது. வடக்கு மக்களின் அதிக ஆதரவுக்குரிய அடையாளங்களை மாற்றம்செய்வதன் மூலம் தென் இலங்கையில் அரசியலை திருப்திப்படுத்துவதற்கானதாகவே தெரிகிறது. அல்லது வடக்குக்கும் இந்தியாவுக்குமான உறவை காட்சிப்படுத்துவதாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குறித்த இரண்டு அர்த்தங்களிலும் இதன் உரையாடலை அவதானித்துக் கொள்ள முடியும் பாராளுமன்ற உறுப்பினர்களோடு மூடிய அறையில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் அதிகம் வெளிவராத நிலையில் தென்னிலங்கை பொறுத்து இலங்கைக்கான இந்திய தூதுவர் வெளிப்படுத்திய ராஜதந்திர நகர்வாக இதனை பார்க்க முடியுமா என்பதும் முக்கியமான அம்சமாகும். அதே நேரம் பிரதமர் நேரு முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை தென்னிலங்கையை திருப்திப்படுத்துவதில் கரிசனை கொண்டவர்களாக காணப்படுகின்ற போக்கு ஒன்று ஈழத்தமிழர் இந்தியா உறவில் அவதானிக்க முடியும.; இலங்கைத் தீவின் இந்தியா உறவு பற்றிய வரலாற்றை அவதானிக்கின்ற போது இந்திராகாந்தி மற்றும் வாஜ்பாய் காலத்தை விடுத்து நோக்கினால் தென் இலங்கையை திருப்திப்படுத்துவதில் இந்திய ஆட்சியாளர்கள் கரிசனை உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். மாறாக தென்னிலங்கை ஆட்சியாளர்களின் நகர்வுகளை ராஜேந்திர ரீதியாக அணுகிய தலைவர்களும் இந்திய இலங்கை உறவில் ஈழத்தமிழரை முழுமையாக அணுகாத போக்கினையும் கண்டு கொள்ள முடிகிறது. ஒரு நாட்டின் தூதுவர் ராஜதந்திரி என்பது அடிப்படையானது. அவர்கள் நேரடியாக ராஜதந்திரிகளாகவே விளங்குவர். இந்திய தேசத்தின் நலனுக்கு எது அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வதுடன் ஆட்சியாளருக்கு சார்பான விடயங்களை வெளிப்படுத்துவார்களாக தூதுவர்கள் காணப்படுவார்கள்.

எனவே யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தில் பெயர் மாற்றம் என்பது யாழ்ப்பாண சமூகத்தின் அல்லது தமிழ் சமூகத்தின் எண்ணங்களை அதிகம் உள்வாங்காதது மட்டுமின்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரங்கை தமது விருப்புக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் கையாளுகை செய்வதென்பது நாகரிகமான செய்முறையாக கொள்ள முடியாது. அது மட்டுமின்றி யாழ்ப்பாண சமூகத்தின் உணர்வுகளை மதிக்காத தன்மையை விளைவாக தந்துள்ளது. இது இந்திய-ஈழத்தமிழர் அரசியல் உறவிலும் கடந்த காலத்தில் நிலைபெற்றிருந்தது. தற்போது தமிழ் மக்களின் இருப்பிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய எஜமானிய தனத்தின் விளைவுகளாலேயே ஏனைய நாடுகளின் செல்வாக்கு வடக்கில் மேலெழுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)

Recommended For You

About the Author: Editor Elukainews