
ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) அதிகாரிகள் தம்மை விசாரிக்க வேண்டுமெனக் கூறியதாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியிலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறிய அனுர அரசாங்கம் என்ன செய்கிறது? முன்னையை அரசாங்கங்கள் செய்த அதே வேலையைதான் செய்கிறது. நான் ஒரு அரச உத்தியோகத்தர். என்னை விசாரிப்பதற்கு ஒரு முறை இருக்க வேண்டும். பாடசாலைக்குள் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எவ்வித அனுமதியும் இன்றி எப்படி வர முடியும்? முறைப்பாடு, வழக்கு எதுவும் இல்லை. குற்றவாளிகளைப்போல் எங்களை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த அரசாங்கம் வந்தாலும் எமது மக்களுக்கான (தமிழ் மக்களுக்கான) நெருக்கடிகள் தொடரும்.”
கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலய ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பரந்தன் பிரிவின் இரண்டு அதிகாரிகள் ஜனவரி 20ஆம் திகதி பாடசாலையின் அதிபருக்கு அறிவிக்காமல் வகுப்பறைக்குள் நுழைந்து விசாரணை நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கடந்த காலத்தில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பல தடவைகள் அழைத்த பயங்கரவாத பொலிஸார் இதுத் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு தன்னை அழைத்த அதிகாரிகள் 10 மணிநேரம் விசாரணை நடத்தியதாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் சுட்டிக்காட்டுகின்றார்.
விசாரணையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றீர்களா? என கேள்வி எழுப்பிய பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின்போது இலங்கையின் வரைபடத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் வகையில் இல்லத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் பெயர் விபரங்களை வழங்குமாறு கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறெனினும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வழங்க அவர் கடுமையாக மறுத்துள்ளார்.
தனக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடோ, வழக்கோ இல்லாத நிலையில், கடந்த ஜனவரி 20ஆம் திகதி, வலயக் கல்வி அதிகாரிகளுக்கோ, பாடசாலை அதிபருக்கோ அறிவிக்காமல், தனது வகுப்பறைக்கு நேரடியாக வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் தவறை புரிய வைத்ததாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் வலியுறுத்துகிறார். .
அங்கிருந்து வெளியேறி அதிபரைச் சந்திக்கச் சென்ற அதிகாரிகள், அதிபருடன் சுமார் அரை மணி நேரம் கலந்துரையாடிவிட்டு மீண்டும் அவரது வகுப்பறைக்கு அருகில் வந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“கொழும்பிற்கு உங்களை மீண்டும் அழைக்க வேண்டியேற்படும். நீங்கள் எங்களுக்கு நாம் கோரும் தகவல்களை தர வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையேல் உங்களை கைது செய்ய வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டனர். நான் எந்த குற்றமும் செய்யவில்லை எனக் கூறினேன். நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் என்னுடைய அடிப்படை உரிமை மீறப்படும் என முறைப்பாடுகளை செய்ய வேண்டியேற்படும். என்னை பாதுகாக்க சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியேற்படலாம் எனச் சொன்னேன்.”
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க 2025 ஜனவரி 21ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
“அதேபோல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்கள் இலட்சியமோ கொள்கையோ அல்ல, ஆனால் புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை நாட்டின் சட்டங்களை நாங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் சட்ட மூலத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்.”