விபத்துக்களுடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
கட்டுகஸ்தோட்டை, அம்பலங்கொட, ஹலாவத்த, மொனராகலை, கந்தளாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (17) இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில் ஐவர் மரணமடைந்தனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று (18) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி-குருநாகல் வீதி, செனரத்கம பிரதேசத்தில், ஓட்டோவொன்று பாதசாரி பெண்ணொருவர் மீது மோதி வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பாதசாரி பெண் மரணமடைந்துள்ளதுடன் ஓட்டோவின் சாரதியும் ஓட்டோவில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் வெருல்லகம பிரதேசத்தை சேர்ந்த 54 வயது பெண்ணே மரணமடைந்தார்.
இதேவேளை காலி, அம்பலங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – காலி வீதியில், டிப்பர் ரக வாகனமொன்று காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த காரின் சாரதி உட்பட காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது காரின் சாரதியும் மற்றுமொருவரும் மரணமடைந்தனர்.
பரகஹதொட்ட, வடுமுல்ல பிரதேசங்களை சேர்ந்த இருவரே மரணமடைந்தனர்.
டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருநாகல்- சிலாபம் வீதி, முன்னேஸ்வரம் பிரதேசத்தில் லொறியொன்று எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஆகியோர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும்போது முச்சக்கர வண்டி சாரதி மரணமடைந்தார்.
முஹூனுவட்டவன, சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயது நபரே மரணமடைந்தார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
முச்சக்கரவண்டியின் சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகல வீதி, போப்பிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதசாரி பெண்ணொருவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாதசாரி பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது பெண் மரணமடைந்தார்.
மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 70 வயது பெண்ணே இவ்வாறு மரணமடைந்தார்.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவு, 91ஆம் மைல்கல் பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது மரணமடைந்தார்.
இந்த விபத்தில் கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.