
தர்மம் நிறுவனத்தின் மாதாந்த ஒன்று கூடல் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாஸ்டர் ஒப் எடியுகேசன் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விசேட கல்வி தேவை பற்றிய முன்வைப்புக்களை மேற்கொண்டனர்.




இதன் போது, குறித்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் சைகை மொழி ஆற்றல் கொண்ட உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கான முன்பள்ளி ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் குறித்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்களுக்கான சுய தொழில் வழிகாட்டல்களும் முக்னெடுக்கப்பட்டது.
அத்துடன், செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்கள் சுகாதாரத் துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கிளிநொச்சி மாவட்ட மகப்பேற்று வைத்திய அதிகாரியுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதன் போது, முதல் கட்டமாக, கர்ப்பவதிகள், 5 வயதுக்குப்பட்ட பிள்ளைகளின் தாய்மார், திருமணம் முடித்து குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ள மற்றும் திருமணத்திற்கு தயாராக உள்ள செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
சமூகத்தில் செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன், அவர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பரந்தன் – குமரபுரம் பகுதியில் உள்ள தர்மம் நிறுவன மண்டபத்தில் பிள்ளைகளுக்கான முன்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.