
இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.





கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (16.02.2025) சென்றிருந்தார். அங்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோருடன், ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் அதிபர் மற்றும் பணியாளர்கள் பிரதமரை வரவேற்றனர். இதன் பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு இளையோர் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் இணைய முடியாத நிலைமை காணப்படுவதாக மாவட்டச் செயலர் மற்றும் ஆளுநர் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
ஆங்கிலமொழி மூலமாக பயிற்சிகள் வழங்கப்படுதல் மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் சித்தியடைந்திருத்தல் என்பன தகைமையாகக் காணப்படுவதால் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பலர் இணைய முடியாத நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டனர். இதனையடுத்து கருத்துத் தெரிவித்த பிரதமர், தமிழ் மொழி மூலமான பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தையும் பிரதமர், ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் சுற்றிப் பார்வையிட்டனர்.