
வடமாகாண 18, 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர் கோவிட்-19 தடுப்பூசியானது நாடளாவியரீதியில் ஓக்டோபர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது. அந்தவகையில் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்பட உள்ளது.
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கும் அவர்களது பாடசாலைகளிலேயே இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் பாடசாலையைவிட்டு விலகிய 18, 19 வயதுடையவர்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்படும்.
இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு 18, 19 வயதுடைய அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையினை அன்றைய தினத்தில் தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதினை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 23, 30ஆம் திகதி சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு 18, 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கலானது முடிவுக்குவரும் நிலையில் அதனைத் தொடர்ந்து 17, 16, 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்