கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை – தமிழாக்கம் 

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடயதானத்தில் இன்று 04.02.2025  நடைபெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் ஆற்றிய உரை –
தமிழாக்கம்
கௌரவ உறுப்பினரே!.
நான் மூன்று பிரச்சினைகளை எழுப்ப விரும்புகிறேன். முதலாவதாக, கட்டிட அனுமதியின் பெயர் மாற்றம், தலைப்பு மாற்ற சான்றிதழ், நிலங்களின் உப பிரிப்புக்கள், நிலங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தெருக் கோடு சான்றிதழ்கள் என்பன அனைத்தும் உள்ளூராட்சி அமைப்புகளின் உப அலுவலர்களால் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்ற உப உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் வடக்கு மாகாண சபையின் திறன் குறைபாடு காரணமாக.  இந்த ஆறு வேலைகளும் உள்ளூராட்சி அமைப்பின் பிரதான அலுவலகத்தால் செய்யப்படும் என்று ஒரு சுற்றறிக்கை மூலம் கேட்டுள்ளனர்.
கௌரவ அமைச்சர் அவர்களே,
இந்த நடைமுறையால் தற்போது மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.  எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன், உப அதிகாரிகள் இந்தப் பணிகளைச் செய்வதை உறுதிசெய்ய தேவையான அனைத்துத் வசதிகளையும் வழங்கவும். இல்லையேல் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும். முடிந்தவரை அடித்தட்டு மக்களுக்கு வசதிகளை கொண்டு செல்லவதே உங்கள் அரசின் நிலைப்பாடு என்றால் இந்த விடயத்திலும் நீங்கள் தலையிட வேண்டும்.
கௌரவ அமைச்சர் மற்றும் கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினரே!.
மற்றய விடயம், சாவகச்சேரி பிரதேச செயலகம், நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் செயலகமாகும், குறித்த பிரதேச செயலகம் உள்ளடக்கியதாக கருதப்படும் நிலப்பரப்பு மிகவும் பெரியது.  எனவே நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அந்த பிரதேச செயலகத்தை இரண்டு புவியியல் பிரதேசங்களாக பிரிக்குமாறு அரச நிர்வாக அமைச்சிடம் எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைத்திருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது.   தற்போது உள்ள நிலையில் சாவகச்சேரியை அடிப்படையாக வைத்து கொடிகாமத்தை மையமாக கொண்டு கொடிகாமம் பிரதேசத்தில் இருந்து புதிய பிரதேச செயலகத்தை உருவாக்குதல் வேண்டும்.
எனக்கு முன் பேசிய சக கௌரவ உறுப்பினர் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை விடயத்தை எழுப்பியிருந்தார். இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலகம் 1989 முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 17/ 3/ 1993 அமைச்சரவைப் பத்திரம் 31/3/ 1993 ஆம் திகதிய குறிப்பாணை மூலம் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக்கப்பட்டது. 09.07.1993 தேதியிட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் பொது நிர்வாக அமைச்சு இதனை இரண்டு பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தியது.
கௌரவ அமைச்சர் அவர்களே!
இன்று துரதிஸ்டவசமாக, அரசியல் காரணங்களால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாகச் செயற்படுத்த முடியாத வகையில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கணக்காளர் இல்லாமைக்கு அரசியல் தலையீடே காரணமாக அமைந்துள்ளது. இதனால் செயலகத்தின் பல பகுதிகள் செயல்பட முடியாமல் உள்ளது.
படிப்படியாக கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கு மாற்றுவதற்கு தற்போது முயற்சிகள் நடைபெறுகின்றன. கடந்த அரசாங்கத்தில் இதனை உப அலுவலகமாக தரம் இறக்கப்போவதாக பேச்சுக்கள் இடம்பெற்றன.
கௌரவ அமைச்சர் அவர்களே!
இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் தரம் இறக்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் . 1989 இல் எடுக்கப்பட்ட முடிவு இது. அரசியல் தலையீடு காரணமாக இந்த பிரசச்சினை நீடித்து வருகிறது. எனவே எனக்கு முன் பேசிய கௌரவ உறுப்பினரின் கருத்துடன் உடன்படுகிறேன். வடக்கு கிழக்கை, குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பார்கள் என நினைக்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையாக இயங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்றிருந்த அரசியல் தலையீட்டை இந்த அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்றால் நீங்கள் இந்த விடயத்தை செய்யவேண்டும். எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். இந்த விடயத்துக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

Recommended For You

About the Author: Editor Elukainews