
ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்ச்சியாக ஏதொவொரு சம்பவ அடிப்படையிலான கொதிநிலை அரசியலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு வருகிறது. தீர்வுகளற்ற நிலையிலேயே போராட்டங்களும் திசைமாற்றப்படுகிறது. ஈழத்தமிழர்களின் போராட்டங்களை நீர்க்குமிழியுடன் ஒப்பிடும் தன்மை காணப்படுகின்றது. நீர்க்குமிழி போன்று விரைவாக பெருத்து எவ்வித நிலையாமை மற்றும் தொடர்ச்சி தன்மையற்று சிதறடிக்கப்படும் நிலைமைகளே காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நாளாந்த பிரச்சினைகளுக்குள் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் இவ்வாறே நகர்த்தப்பட்டு வந்துள்ளது. கேப்பாபிலவு போன்ற காணி மீட்பு போராட்டங்கள் பகுதியளவில் தீர்வை பெற்ற போதிலும், எப்போராட்டங்களும் முழுமையான தீர்வற்று சிதறடிக்கப்பட்டு கிடப்பில் போடுவதாகவும் அல்லது திசை மாற்றப்படுவதுமாகவே அமைந்துள்ளது. சமகாலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலி வடக்கில் தையிட்டி கிராமத்தில் இராணுவம் எதேச்சதிகாரமாக மக்கள் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக்கோரிய போராட்டம் விரிவாக்கம் பெற்றுள்ளது. எனினும் சமதளத்தில் நல்லிணக்கம் மற்றும் பேரினவாத அச்சுறுத்தல்களை முன்னிறுத்திய எதிரான விமர்சனங்களையும் பொதுவெளியில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இக்கட்டுரை தையிட்டி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னிலைப்படுத்தி எழுந்துள்ள எதிர் விமர்சனங்களை களைவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வலிவடக்கு பிரதேசத்தில் இன்றும் பல ஏக்கர் மக்களின் காணிகள் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் காணப்படுகின்றது. ஏறத்தாழ நான்கு தசாப்தங்களை கடக்கின்றது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புக்களை நிலைபெறச்செய்வது இயல்பாக காணப்படுகின்றது. அவ்வாறானதொரு பொறிமுறையின் தொடர்ச்சியாகவே தையிட்டியில் மக்களின் வாழ்விடத்தில் அடாத்தாக இராணுவத்தின் பராமரிப்பில் பௌத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் 2018, ஆகஸ்ட்-22அன்று பாதகட விமலஞான தேரர் தலைமையில் நடைபெற்றது. அன்றைய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் வடக்கின் அரச உயர் அதிகாரிகள், பிரதேச கிராம செயலாளர் என அரச சிவில் அதிகாரிகளும் இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. செய்திகளின் பிரகாரம் பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டல், ஏற்கனவே பௌத்த விகாரைக்கு தானமாக வழங்கப்பட்ட இருபத்திரண்டு பரப்பு காணியிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் விகாரை நிர்மாணம் மக்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை ஆக்கிரமித்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பௌத்த விகாரைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருபத்திரண்டு பரப்பு காணியும் 1947ஆம் ஆண்டு வெளிப்படுத்தல் உறுதியின் மூலமே சிங்கள நபர் காணியை உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிர்மாண காலப்பகுதிகளில் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விடயம் உரையாடப்பட்டு, விகாரை கட்டுமானப் பணி நிறுத்தப்பட தீர்மானிக்கப்பட்ட போதிலும், இராணுவ பாதுகாப்பில் விகாரைப்பணி முழுமை பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு அதிகமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில், மக்கள் காணியை ஆக்கிரமித்து நிர்மானிக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக்கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வந்துள்ளார்கள். எனினும் போதிய அரசியல் கவனிப்பை ஈர்த்திருக்கவில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தலைமையிலான யாழ்ப்பாண அபிவிருத்தி குழு கூட்டத்திலும், தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தையிட்டி விவகாரம் உரையாடப்பட்டிருந்தது. குறித்த கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிக்கு உரித்தானவர்கள் மாற்று காணிகளை பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். இது தையிட்டி விவகாரத்தை மீண்டும் கொதிநிலை அரசியலிற்கு இழுத்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆளுநரின் கருத்தை நிராகரித்து போராட்டத்திற்கான அழைப்பு விடுத்திருந்தார்கள். தமிழ் அரசியல் கட்சிகளும் விகாரை அகற்றப்பட வேண்டுமென தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்கள். கடந்த காலங்களில் விகாரை நிர்மாணிப்பு காலத்தில் அரசாங்க பிரதிநிதிகளாக செயற்பட்டிருந்த அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கூட விகாரை அகற்றப்பட வேண்டுமென மக்கள் போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.

சமதளத்தில் பௌத்த சம்மேளனம் கிட்டத்தட்ட 14 ஏக்கர் தனக்கு சொந்தமானது என எந்த வித பொறுப்பும் இல்லாமல், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய நல்லிணக்கவாதிகள் மக்கள் காணியை ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை அகற்றப்படுவதை மத நல்லிணக்கத்திற்கு குந்தகமானதாகவும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை பேரினவாதத்தை தூண்டக்கூடியதெனவும் எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தையிட்டி விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள எதிர்விமர்சனங்களை ஆழமாக அணுகவேண்டியது அவசியமாகும்.

முதலாவது, தையிட்டியில் மக்கள் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிரான போராட்டத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் போராட்டமாக, ஓர் தரப்பு சித்தரிக்கவும் நிராகரிக்கவும் முயலுகின்றனர். இது அபத்தமான அரசியல் வெளிப்பாடாகும். தையிட்டியில் வாழ்விடத்தை இழந்து அநாதையாக்கப்பட்ட மக்களின் குரலுக்கு வலுச்சேர்க்கும் ஓர் கருவியாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அணுக வேண்டியுள்ளது. இது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமாகும். தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு, தமிழ் மக்கள் மீதான பண்பாட்டு யுத்தத்திற்கான கருவியாக பயன்படுத்துகையில், அதனை எதிர்ப்பது தமிழ் மக்களின் கூட்டுப்பொறுப்பாக அமைகின்றது. வெறுமனவே காணிகளை இழந்துள்ள எட்டு தமிழ் குடும்பத்திற்குரியதாக கணிக்க முடியாது. இந்நிலையிலேயே மக்களின் காணி மீட்புக்கோரிக்கைக்கான அரசியல் முக்கியத்துவம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாலேயே வழங்கப்பட்டுள்ளமை நிராகரிக்க முடியாதாதாகும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளில் விமர்சனங்கள் காணப்படலாம். குறிப்பாக தையிட்டி விகாரைக்கு எதிரான முன்னைய போராட்டமொன்றில் கலந்து கொண்டிருந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சியினரை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் வசைபாடியதாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. எனினும் முன்னணியின் மீது சீற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய களமாக தையிட்டி விவகாரம் அமையப் பெறவில்லை. இது தமிழ் மக்களின் இறைமையை சவாலுக்குட்படுத்துவதாகும். இன்று தையிட்டியில் எட்டு குடும்பத்தின் காணி தானேனு தவிர்த்து செல்வது, நாளை வடக்கு-கிழக்கில் ஒவ்வொரு வீடுகள் மீதான ஆக்கிரமிப்புக்கும் வழிகோலக்கூடியதாகும். தையிட்டி விவகாரத்தினை அரசியல் கட்சி நலன்களுக்குள் அணுகாது, தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் ஒரு பகுதியாக அணுகுகையில், அனைவரும் முதன்மையான ஈடுபாட்டுடன் போராட்டத்தை நகர்த்துகையில் போராட்டம் வலுப்பெறக்கூடியதாக அமையும்.

இரண்டாவது, தமிழ் அரசியல் கட்சிகள் மீதான விரோத மனப்பாங்கில் கடந்த காலங்களில் தையிட்டி விகாரை நிர்மானிப்பு காலப்பகுதியில், அரசியல் கட்சிகளின் மெத்தனப்போக்கை முன்னிறுத்தும் உரையாடல் போராட்டத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது. காலந்தாழ்த்தியே தையிட்டி விவாகரம் விவாதப்பொருளாகியுள்ளமை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும். எனினும் காலந்தாழ்த்திய செயலை, செய்யவே கூடாதென மறுதலிப்பது எந்தவகையில் ஏற்புடையதென புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமன்றி, அரசியல் கட்சிகளிடம் மாத்திரம் எதனையும் பாரப்படுத்தி தமிழ் மக்கள் புறமொதுங்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்திலும் தையிட்டி விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஒழுங்கமைத்து வருகின்றார்கள். சமுகவலைத்தளங்களிலும், அச்சு ஊடகங்களிலும் செய்தியாக அவதானிக்கக்கூடியதாக அமைகின்றது. எனினும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிலேயே காணப்படுவதுண்டு. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவு தொடர்பில் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையாளர்கள் மத்தியில் விமர்சனமாக காணப்படுகின்றது. விமர்சிப்பவர்கள் தகவல் அறிந்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது அவர்களின் மெத்தனமான நிலைமையையே வெளிப்படுத்துள்ளது. தையிட்டி விகாரை நிர்மானிப்புக்கு பின்னால் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் மெத்தனப்போக்கும் காணப்படுகின்றது. ஒருவரை ஒருவர் கைநீட்டுவதற்கு அப்பால் விழித்துக்கொண்ட பின்னராவது, ஒன்றாக அபகரிக்ப்பட்ட காணி மீட்புக்கு எதிராக போராடுவதே உசிதமானதாகும்.

மூன்றாவது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை என்ற அடிப்படையில் போராட்டத்தை தவிர்த்து இலங்கை சட்டத்துக்கு உட்பட்டு வழக்கு தொடுப்பது தொடர்பில் ஒரு தொகுதியினர் கருத்துரைத்து வருகின்றனர். இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு சட்டப்பாதுகாப்பு காணப்படுகின்றதா என்ற அடிப்படையிலேயே நீதிமன்றத்தை நாடுவதற்கான நம்பிக்கை உருவாகுகின்றது. இத்தகைய வாதங்களுக்கு பின்னால் தமிழ் அரசியல் கட்சிகளின் தவறான வழிநடத்தல்களும் காரணமாகவே அமைகின்றது. குறிப்பாக இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திக்கொண்டே தமிழ் அரசியல் கட்சிகள் தமது உள்ளக பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தையே நாடியுள்ளார்கள். குறிப்பாக தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவ இழுபறி நீதிமன்ற நிலுவையிலேயே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் குறிப்பாக 2009க்கு பின்னரான சமகால அரசியல் சூழலிலேயே வடக்கு-கிழக்கில் பல ஆக்கிரமிப்புக்கள் நீதிமன்ற தீர்ப்பை மீறியதாகவே அமைகின்றது. நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற தீர்ப்பை மீறியே பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் எரிக்கப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பொதுபலசேன அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் மற்றும் சம்பவத்தில் தொடர்புற்ற பௌத்த பிக்குகள் எவர் மீதும் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவ்வாறே முல்லைத்தீவு குருந்தூர் மலையில் எவ்வித நிர்மானப்பணிகளையும் மேற்கொள்ள இலங்கை நீதிமன்றம் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவல்துறையின் பாதுகாப்புடன் இலங்கை தொல்லியல் திணைக்களம் இலங்கை பௌத்த விவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் துணையுடன் விகாரை கட்டுமாணத்தை நிறைவு செய்திருந்தார்கள். நீதிமன்றத்தால் உயர்ந்த பட்சம் கண்டனங்களையே வெளியிட முடிந்தது. இலங்கை நீதிமன்றத்தின் இயலாமையின் வெளிப்பாடே முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். இத்தகைய பின்னணியிலே தையிட்டி விவகாரத்தை இலங்கை சட்டத்துக்குள் வழக்குத்தொடுக்காமையை குறையாக விமர்சிப்பவர்களின் எண்ணங்களை ஆராய வேண்டியுள்ளது. இதுவொரு வகையில் தையிட்டி விவகாரத்தை மையப்படுத்தி எழுச்சி பெறும் மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்க செய்யும் யுக்தியாகவே அமைகின்றது.

நான்காவது, தமிழ் மக்களின் இருப்பு சார்ந்த உரிமைக்கான போராட்டம் சிங்கள பௌத்த பேரினவாதத்தை குறிப்பாக ராஜபக்சாக்களுக்கு புத்துணர்வை வழங்கக்கூடியதெனும் விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. இதுவொரு வகையில் தமிழ் மக்களை அச்சமூட்டுவதனூடாக தமிழ் மக்களின் எழுச்சிகளை முடக்கும் செயலாகும். தமிழ் மக்கள் தமது சொந்த காணியில் வாழக்கோருவது பேரினவாதத்தை தூண்டுமாயின், தமிழ் மக்கள் இலங்கையில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதாகவே அமைகின்றது. பேரினவாதத்தை வெறுமனவே ராஜபக்சாக்களுக்குள் சுருக்குவது, தென்னிலங்கை தம்மை பாதுகாத்துக்கொள்ள சாதகமாகின்றது. இந்தப்பின்னணியிலேயே இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாதம் சர்வதேச ரீதியான நெருக்கடியை உருவாக்குகையில் 2015-2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தையும், தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் திரைக்கு முன் அனுப்பியுள்ளார்கள். எனினும் மறைகரமாக இலங்கை ஆழமான சிங்கள பௌத்த பேரினவாதத்தை முதன்மைப்படுத்திய அரசியலமைப்பினாலேயே ஆளப்படுகின்றது. இலங்கை அரச கட்டமைப்பானது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நீட்சியாகவே அமைகின்றது. இங்கு ஆட்சியாளர்களின் முகமூடியையே தென்னிலங்கை மாற்றிக்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமது புதிய அரசாங்கத்தை இனவாதமற்ற நாட்டின் ஆட்சியாளர்களாக பிரச்சாரம் செய்கின்றார்கள். எனினும் தையிட்டியில் பொதுமக்களின் காணியை பலாத்காரமாக கைப்பற்றி இராணுவ பாதுகாப்பில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை தொடர்பில், தமிழ் மக்களின் எண்ணங்களை உள்வாங்கி தீர்மானிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் பொதுமக்களின் காணியை ஆக்கிரமித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டது தவறு என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளாத நிலைமைகளே காணப்படுகின்றது. தமிழ் மக்கள் தமது காணியை கோரும் சமகாலத்திலேயே பௌத்த சம்மேளனம் என்ற பெயரில் தையிட்டி விகாரையை சுற்றியுள்ள கிட்டத்தட்ட 14 ஏக்கர் தமக்கு சொந்தமானதென யாழ் மாவட்ட செயலாளர், ஆளுநர் மற்றும் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் சந்திரசேகரம் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பேரினவாதத்தை புத்துணர்ச்சி அளிக்கும் எனும் விசமத்தன பிரச்சாரம் தமிழ் மக்களின் இறைமையை சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் பலிகொடுப்பதாகவே அமையக்கூடியதாகும். தையிட்டி விவகாரம் ஒருவகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இனவாதத்தை தோலுரிக்கக்கூடியதாகும்.

எனவே, தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் தமிழ் மக்களின் எதிரி யார் என்பதை திசை திருப்புவதாகவே அமைகின்றது. தமிழ் மக்களின் நிலங்களை அரச இயந்திரத்தினூடாக ஆக்கிரமிப்பு செய்து பண்பாட்டு யுத்தத்தை மேற்கொள்ளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளை தவிர்த்து தமிழ் மக்கள் தமக்குள் மோதிக்கொள்வது அபத்தமானதாகும். ஈழத்தமிழரசியலின் அண்மைய நடத்தைகள் பெருமளவில் உள்ளக பிணக்குகளாகவே அமைகின்றது. அரசியல் கட்சிக்குள்ளும், கட்சிகளுக்குள்ளும், சமுகத்திற்குள்ளும் உள்ளக முரண்பாடுகளே அதிகரித்து வருகின்றது. இது பொது எதிரிக்கு சேவகம் செய்வதாக அமைந்து விடுகின்றது. தையிட்டி விவகாரம் மீதான விமர்சனம் பொது எதிரியை குளிர்விப்பதாகவே அமைகின்றது. இலங்கை அரசு இயந்திரமும் தமது பேரினவாத அரசியலை தமிழ் முகமூடி அணியப்பட்ட அரச இயந்திரத்தினூடாகவே செயற்படுத்துகின்றது. வடமாகாண ஆளுநரின் கருத்தும் அதன் பிரதிபலிப்பாகவே அமைகின்றது. தையிட்டி விவகாரம் தெளிவாக சிங்கள மக்களுக்கோ அல்லது பௌத்த மதத்துக்கோ எதிரானது அல்ல என்பதை போராட்டக்களம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும், விகாரைக்கு ஒதுக்கப்பட்ட காணியை சுட்டிக்காட்டியதுடன், மக்களின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து கட்டியெழுப்பப்பட்டுள்ள சட்டவிரோத நிர்மானத்தையே சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ் மக்களின் எண்ணங்களும் அவ்வாறானதாகவே அமைகின்றது. தையிட்டி விகாரை ஆக்கிரமிப்பு கருவியாகவும் சட்டவிரோத நிர்மானமாகவுமே எதிர்க்கப்படுகின்றது.