தமிழீழ விடுதலைப் புலிகளை நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரட்னம் விமர்சித்தது மட்டுமல்லாமல், தற்போதைய இலங்கை ஜனாதிபதியையும், அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டு வருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம் எழுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009இற்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர்.
அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தலைமையில் பேச்சுவார்த்தை குழு ஐரோப்பா சென்று வந்த 2002ஆம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில், அங்கு அரசியலில் இளம் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பங்கேற்பதை ஊக்குவித்து வந்தார்.
அந்தக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பரப்பை விரிவாக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்த புலம்பெயர் இளைய தமிழ்ச் செயற்பாட்டாளரே கம்சி.
இன அழிப்புப் போர் நடந்த போது பொது வெளியில் போராட்டங்களில் இவர் பங்குபற்றியதும், பகிரங்கமாகக் குரல் கொடுத்ததும், செய்திகளை துல்லியமாகப் பின்பற்றியவர்களுக்கு தெரியும். ஆனால், இவரது அரசியல் வாழ்க்கை பின்னர் ஒரு திசைதிருப்பத்தைக் கண்டிருக்கிறது. பலரும் இந்தத் திருப்பத்தை காணத் தவறிவிட்டனர். இந்தத் திருப்பத்தின் பின்னர் தற்போது இவர் ஈழத்தமிழர் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவில்லை. மாறாக, ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து, தான் வேறுபட்டவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி வருகிறார்.
கம்சி சில வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து முன்னாள் ஜனாதிபதி சிறிசேன போன்றவர்களைச் சந்தித்துவிட்டு விடுதலைப் புலிகளை விமர்சித்தது மட்டுமல்ல, தற்போது இலங்கை அரசின் தற்போதைய ஜனாதிபதியையும் அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டு வருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. ஏற்கனவே விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை அணியில் பெண்களுக்குச் சமபங்கு கொடுக்கவில்லை என்று தவறான காரணத்தைத் தேடிப்பிடித்துக் கூறியிருந்தார்.
இதனால், உலகளாவிய தமிழர் சமூகத்திடம் இருந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஏனெனில், பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் பல வேலைத் திட்டங்களில் அதிகளவு பெண்கள் பங்குபற்றியதைச் சர்வதேசமே அறியும்.
அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் அரசியற்குழுவின் வெளிநாட்டுப் பயணங்களிலும் சந்திப்புகளிலும் பெண்கள் நேரடியாக பங்கேற்றிருந்தார்கள் என்பது நான் மட்டுமல்ல முழு உலகுமே அறிந்த உண்மை.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, நோர்வேயில் தமிழர் ஆதரவுக்கு அப்பால் அரசியலுக்கு வரக்கூடிய ஓர் அரசியல்வாதியாக இவர் உருவெடுத்திருக்கிறார். ஒஸ்லோ நகரின் துணைமேயராக இருந்த இவர் தற்போது நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார்.
இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியே நோர்வேயின் ஆளும் தரப்பாக தற்போது அரசாங்கத்தை அமைக்கவுள்ளது. எரிக் சொல்கைம் முன்னர் சொல்லிவந்ததற்கும் கம்சி தற்போது சொல்லத் தலைப்பட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இது தொடர்பாக, கடுமையான அதிருப்தியை அவருக்கும், அவர் சார்ந்த தமிழர் குழாத்தினர் எவரும் இருந்தால் அவர்களுக்கும், பதிவுசெய்யவேண்டிய கடமை ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக எனக்கு இருக்கிறது.
தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
ஜி.எஸ்.பி.பிளஸ் போன்ற சலுகைகளை ஐரோப்பா இலங்கை அரசுக்கு வழங்குவது சரியல்ல, இலங் கை அரசு மீது புறக்கணிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்திவரும் இந்தக் காலத்தில், கம்சி இலங்கை அரசுமீது புறக்கணிப்புகளை நோர்வே மேற்கொள்ளக் கூடாது என்பதைத் தனது கருத்தாகவும் தனது அரசியற் கட்சியின் கருத்தாகவும் முன்வைத்து வருகிறார்.
இதையே நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கையாகவும் இவர் எதிர்பார்க்கிறார். அதேவேளை இலங்கைத் தீவில் போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற குற்றங்களைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவது எதிர்கால நல்லிணக்கத்துக்கு நல்லது என்ற மட்டுப்படுத்தப்பட்ட கருத்தையும் முன்வைத்திருக்கிறார்.
ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணாக, இன அழிப்புக்கு உட்பட்ட ஈழத்தமிழரின் புலம் பெயர் முனைப்பின் காரணமாக அரசியலுக்குள் நுழைந்த இவர், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோருவதற்குப் பதிலாக, இங்கே நடைபெற்ற போரை விசாரிக்க வேண்டும், போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று ஐ. நா. மட்டுப்படுத்தி முன்வைக்கும் கருத்து நிலையை மட்டுமே தானும் முன்வைக்கிறார்.
இந்த அடிப்படையில் மட்டுமே இவர் சர்வதேச விசாரணை நல்லதென்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறாரே அன்றி, இத்தீவில் நடைபெற்றது இன அழிப்பு, அதற்கும் மேலாக, இன அழிப்புப் போராக அது முன்னெடுக்கப்பட்டது என்ற கருத்தை ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தின் சார்பாக 2009 இல் தான் எடுத்திருந்த கருத்துநிலையில் மடைமாற்றம் கண்டு தற்போது பின்னடித்திருக்கிறார்.
அதாவது ஈழத்தமிழரின் கோரிக்கைக்குப் பதிலாக, சர்வதேசம் மட்டுப்படுத்தி முன்வைக்கும் இணக்க அரசியலுக்கே இவர் குரல்கொடுக்கிறார்.
புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக, அதுவும் ஈழத்தமிழர் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட இவர், ஈழத்தமிழர்களுக்கான நீதியான நிலைப்பாட்டை முன்னெடுக்காதுவிட்டாலும், எதிர்மறையான கருத்தியலை ஈழத்தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் முன் வைக்காது விட்டாலே போதுமானது.
குறிப்பாக, இலங்கையர்களாக ஒருங்கிணையுங்கள் என்று அவர் எம்மைப்பார்த்துச் சொல்லத் தலைப்பட்டிருக்கிறார். இலங்கை அரசோடு பேசவும் தயார் என்று இவர் சொன்னதாக சில செய்திகள் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.
இந்த வார்த்தையை வேறு சில புலம்பெயர் அமைப்புகளும் சொல்வதாக சர்வதேச சக்திகள் ஊக்குவித்து வருவதும் தெரிகிறது.
ஈழத்தமிழர்கள் ஒரு மக்களாகத் திரட்சியடைந்தவர்கள். ஒரு தேசிய இனமாக எழுந்து நிற்பவர்கள். முதுகெலும்பு முறிக்கப்பட்டாலும் எமது தேசியத் தன்மையை உடைய விடமாட்டோம் என்ற அரசியலை ஜனநாயக வழியில், சர்வதேச நீதிகோரி முன்னெடுத்து வருபவர்கள்.
அவர்களின் வாரிசாக கம்சி மாறவேண்டும். அதற்கு அவருக்கு அறிவு தேவையென்றால் அதை வழங்க ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக நான் தயாராக உள்ளேன்.
இந்த நேரத்தில் தான், நோர்வேயின் தற்போதைய பெண் பிரதமரான ஆர்ணா சூல்பேர்க்கிற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வலது சாரிக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாமல் அவர் தனது நிலைப்பாட்டை இதுவரை முன்னெடுத்துவந்திருக்கிறார்.
ஆனால், ஆட்சிக்கு வரவுள்ள தொழிலாளர் கட்சி, தான் எடுத்திருக்கவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக ஓர் இணக்க அரசியலை முன்னெடுப்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு குந்தகமான காரணி இருப்பதாக எனக்குப்படுகிறது.
அப்படி ஏதாயினும் இருக்கிறதா என்பதை நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர் அரசியல் அமைப்புகள், அவர்களது ஊடகங்கள், ஆராய்ந்து விரைவாகத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கு முன்வைக்கிறேன்.
இந்த அடிப்படையில், பெண் அரசியல் ஆர்வத்தோடும் ஈழத்தமிழர் நிலைப்பாடு குறித்தும் மிகுந்த ஆர்வமெடுத்து கமசியின் மடைமாற்றம் கண்ட அரசியற் பின்னணி குறித்து நான் ஓர் ஆய்வை மேற் கொண்டுவருகிறேன்.
அதிலே கிடைக்கும் தரவுகளை அனைவருக்கும் பொது விளக்கத்திற்காக முன்வைக்கவும் தயாராக இருக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.