வடக்கில் உள்ள 4 சிகிச்சை நிலையங்களை வினைத்திறனுடன் இயங்க வைப்பது குறித்து ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல்!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (17.03.2025) இடம்பெற்றது.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில் விசேட சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்டாலும் அவற்றின் தேவைப்பாடுகள் முழுமைப்படுத்தப்படாமையால் வினைத்திறனுடன் செயற்படமுடியாத நிலைமை காணப்படுகின்றது.
ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சவாலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றை எவ்வாறு தீர்த்து இவற்றை இயங்க வைக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
3 தசாப்தங்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை என்றும், இதனைக் கருத்தில்கொண்டு ஆளணி மறுசீரமைப்பு, வெற்றிடமாகவுள்ள ஆளணிகளை நிரப்புவதற்கு மத்திய சுகாதார அமைச்சைக் கோருவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்புக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தை இயங்கச் செய்வதற்கான நிதிக்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கிக்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், வவுனியா மற்றும் மாங்குளம் மருத்துவமனைகளில் பொறுப்பு மருத்துவ அத்தியட்சகர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி, முன்னாள் மருத்துவபீடாதிபதி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews