
நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதற் தொகுதி, இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இன்று (20) அதிகாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான யுஎல் – 1156 என்ற விமானம் மூலம், இன்று அதிகாலை 00.25க்கு, இந்தப் பசளை கொண்டுவரப்பட்டது.
அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான சசீந்திர ராஜபகஸ, டீ.வீ.சாணக்க உள்ளிட்ட தரப்பினர், பசளை தொகையை, கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றனர்.
இந்த திரவப் பசளையை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பெரும்போக நெற் செய்கையை ஆரம்பித்துள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி, கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க தெரிவித்தார்.