புலம் பெயரிகளின் யுகத்தில் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது..! சமூக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் தன் கவிதை ஒன்றில் எழுதியதுபோல, முதலாவது தலைமுறைப்  புலம் பெயரிகளிடம் நிலம் அதாவது தாயகத்தைப் பற்றிய நினைவு உண்டு. தாய் மொழியாக தமிழ் உண்டு.தமிழ்ப் பண்பாடு உண்டு.ஆனால் இரண்டாம் தலைமுறைப் புலம் பெயரிகளுக்கு அதாவது கனடாவில் பிறந்து வளரும் பிள்ளைக்கு தாயகம் அதாவது நிலம் வேறு. மொழியும் வீட்டில் ஒரு மொழி; சமூகத்தில் வேறொரு மொழி. பண்பாடும் அப்படித்தான். வீட்டில் ஒரு பண்பாடு வீட்டுக்கு வெளியே மற்றொரு பண்பாடு.தலைமுறைகள் தோறும் அவ்வாறு மொழி இழக்கப்படும்; பண்பாடு  இழக்கப்படும்; நிலத்தைப் பற்றிய நினைவுகளும் மங்கிக்கொண்டு செல்லும் என்ற பொருள்பட சேரன் எழுதுகிறார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதலாம் தலைமுறைப்  புலம் பெயரிகளை நான் ஈரூடக வாசிகள் ”அம்பிபியன்ஸ்”  என்று அழைப்பதுண்டு. ஏனென்றால் அவர்கள் தாயகத்துக்கும் புலம்பெயர்ந்து வந்த நாட்டுக்கும் இடையே ஈருடகமாகக் கிழிபடும் ஒரு தலைமுறை.புலம் பெயர்ந்த நாட்டில் “செற்றில்ட் “ ஆன பின்னும் தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு தவிக்கும் ஒரு தலைமுறை. குறிப்பாக, தாயகம் தொடர்பான தமது நினைவுகளுக்கும்  தமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும் இடையே ஈரூடாகமாகக் கிழிபடும் ஒரு தலைமுறை.

அதிலும் குறிப்பாக வயது செல்லச் செல்ல தனது வேர்களை நோக்கிய தவிப்பும் அதேசமயம் புலம்பெயர்ந்த நாட்டில் அவர்கள் அனுபவிக்கும் வசதி, பாதுகாப்பு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு போன்றவற்றை விட்டு வர முடியாத தவிப்பும் என்று இரண்டு தவிப்புக்களுக்கு இடையே அவர்கள் கிழிபடுகிறார்கள்.

ஆனால் இந்த அவஸ்தை அல்லது துயரம் அல்லது தவிப்பு அல்லது ஒருவித ‘அண் செற்றில்ட்’ ஆன மனோநிலை அல்லது வேர் கொள்ளாத மனோநிலை என்பது இரண்டாவது தலைமுறைக்கு அல்லது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அநேகமாக இல்லை.

அவ்வாறு தனது இனம் சார்ந்த பண்பாடு சார்ந்த வேரிலிருந்து படிப்படியாக விலகிச் செல்கின்ற அல்லது தூரமாகிச் செல்கின்ற அடுத்தடுத்த தலைமுறையை எப்படித் தாயகத்தை நோக்கி ஈர்த்து வைத்திருப்பது என்று தவிக்கும் முதலாம் தலைமுறையானது புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரு சமூகமாகக் கூடக்கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் உச்சமாகப் பயன்படுத்த முயற்சிக்கும். குறிப்பாக நல்ல நாட்கள் பெருநாட்கள்,சுப காரியங்கள்,அபகாரியங்கள்,விழாக்கள்,ஒன்றுகூடல்கள்… என்று கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் ஒன்றுவிடாமல் பயன்படுத்தும். தாயகத்துக்கு வெளியே தன்னை ஒரு சமூகமாகத்  கட்டிக்காக்க முயற்சிக்கும்.

எனது ஐரோப்பிய,அமெரிக்கப் பயணங்களின்போது அதை நான் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அவதானித்துள்ளேன்.அவர்களில் அநேகமானவர்களின் வீடுகளில் தமிழ்ச் சுவை தலைமுறைகள் தோறும் கடத்தப்படுகிறது. குறிப்பாக உறைப்புச் சுவை தலைமுறைகள் தோறும் கடத்தப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் மிளகாய்த் தூள் உண்டு. சுவை என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டுத் தனித்துவங்களில் ஒன்று. இந்த அடிப்படையில் கூறின், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உறைப்புச் சுவையை தலைமுறைகள் தோறும் கடத்த முயற்சிக்கின்றார்கள். அதில் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி மரபுரிமை தொடர்ச்சி பேணப்படுகிறது.

அதுபோலவே இரண்டாம் தலைமுறைப் புலம்பெயரிகள் வளரத் தொடங்க அவர்களைத் தமது பாரம்பரியக் கலைகளை நோக்கி முதலாந் தலைமுறைப் புலம் பெயரிகள் ஊக்குவிக்கிறார்கள்.தமிழ் டயஸ்பெராவில் தொடக்கத்தில் இருந்தே காணப்பட்ட ஒரு போக்கு இது.இதனால்,பல நடன ஆசிரியைகள் அங்கே நிதி ரீதியாக எழுச்சி பெற்றார்கள்.தமிழ் மொழி,நடனம், சங்கீதம் ஆகிய துறைகளை நோக்கி தமது அடுத்த தலைமுறைகளை ஊக்குவிக்கும் பல தமிழ்ப் பெற்றோர் அங்கு உண்டு.அதாவது நாட்டுக்கு வெளியே தங்களை ஒரு பண்பாட்டுச் சமூகமாக கட்டியெழுப்பும் விடயத்தில் தமிழ் டயாஸ்பொராவானது தொடக்கத்திலிருந்து சமூக அரசியல் பண்பாட்டுப் பிரக்ஞையோடு காணப்பட்டது.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எனது பயணங்களில்போது நான் கண்டு ரசித்த ஒரு விடயம் உண்டு. அங்கெல்லாம் ஒரு சமூகமாகக் கூடக்  கிடைக்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்களை அவர்கள் அதிகம் ஆர்வத்தோடு பயன்படுத்துகிறார்கள். நாட்டுக்கு வெளியே ஒரு சமூகமாகத் திரள்வதற்கு அவர்களுக்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த ஒன்றுகூடல்களில் அதிகம் உயிர்ப்பிருக்கும்.

ஆனால் தாயகத்தில் ஒப்பீட்டளவில் அவ்வாறு இல்லை. கல்யாண மண்டபக் கலாச்சாரம் பரவிவரும் வரும் ஒரு சமூகப் பொருளாதாரப் பின்னணியில் தாயகத்தில் கல்யாண மண்டபங்களில் நிகழும் சமூக ஒன்றுகூடல்கள் அதிகம்  சடங்கார்த்தமானவைகளாக மாறி வருகின்றன.நிகழ்வில் முகூர்த்த நேரத்தில் கலந்து கொள்வது;வரிசையாக நின்று மணமக்களை ஆசீர்வதிப்பது; படம் எடுப்பது ;சாப்பிடுவது; பின்னர் கலைந்துசெல்வது… எல்லாமே சடங்காகி வருகின்றன. ஆனால் புலம்பெயர்ந்த பரப்பில் ஒப்பீட்டுளவில் அந்த ஒன்று கூடல்களில் அதிகம் உயிர்ப்பிிருக்கும்.

அவ்வாறான ஒன்றுகூடல்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் தங்களுடைய இளமைக் காலத்தில் தங்களைக் கவர்ந்த கலை நிகழ்ச்சிகளை எல்லாம் மீளுருவாக்கி அரங்கேற்றுவார்கள். நாட்டில் நாங்கள் மறந்து போன அல்லது வழக்கொழிந்து போன அல்லது போரால் அள்ளிச் செல்லப்பட்ட பல கலை நிகழ்ச்சிகளை மீண்டும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நான் பார்த்திருக்கிறேன். சில விமர்சகர்கள் கூறுவதுபோல அது தங்களுடைய இறந்த காலத்தை அப்படியே “ஊறுகாய் போட்டு வைத்திருக்கும்” ஒரு பண்பாகக்கூட இருக்கலாம். ஆனாலும் அங்கே ஒரு மரபுரிமைத் தொடர்ச்சியை, பண்பாட்டுத் தொடர்ச்சியைப் பேண விளையும் தேசிய வேட்கையைக் காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு தாயகத்துக்கு வெளியே தம்மை ஒரு பண்பாட்டுச் சமூகமாக கட்டிக் காக்கும் விடயத்தில் தமிழ் டயஸ்பெராவை பொறுத்தவரை யுத்தம்  ஒரு முக்கிய பங்கை வகித்தது.போரால் சிதைக்கப்பட்ட தாயகத்தை நோக்கிய பிரிவேக்கத்தோடு தமிழ் மக்கள் ஒரு சமூகமாகத் திரட்டக்கூடிய வாய்ப்புகளை ஆயுதப் போராட்டம் அதிகம் உருவாக்கியது.குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ் மொழிப் பள்ளிகளையும் கலாசாரத் தொடர்ச்சியையும் பேண வேண்டும் என்ற பெரு விருப்பம் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்தது.தாயகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த கருநிலை அரசிடம் டயஸ்போராவை தாயகத்துக்கு வெளியே ஒரு அரசியல் பண்பாட்டுச் சமூகமாகத் திரட்டுவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்தது.

ஆனால் 2009க்குப் பின்னரான தமிழ்ச் சமூகம் படிப்படியாகத் தூர்ந்து போகின்றது.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் ஆயிரம் பிளவுகள். அவற்றில் பெரும்பாலானவை அரசியல் பிளவுகள். ஆனால் ஒரு பண்பாட்டுச் சமூகமாக அவர்கள் ஒன்றாகத் திரள முடியும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் கனடாவில் கட்டியெழுப்பப்படவுள்ள சமூக மையமானது தமிழ் மக்களை தலைமுறைகள் தோறும் ஒரு பண்பாட்டுச் சமூகமாக நிறுவனமயப்படுத்த உதவுமா?

இவ்வாறு உருவாக்கப்படும் கொம்யூனிட்டி சென்டர்களை- சமூக மையங்களை- முதலாம் தலைமுறைப் புலம் பெயரிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கும், இரண்டாம் மூன்றாம்,அடுத்தடுத்த தலைமுறையினர் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதற்கும் இடையே ஒரு இடைவெளி அல்லது வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.அது தலைமுறை சார்ந்த வேறுபாடு மட்டுமல்ல அதைவிட ஆழமானது.

 

 

மனித குல வரலாறு என்பது அவ்வாறு வேர்களை அறுத்துக் கொண்டு புலம் பெயர்ந்த சமூகக் கூட்டங்களின் வரலாறுதான். மனித குலம் தோன்றிய பொழுதே ஒரு புலம் பெயரிதான்.மனித குல வரலாறு என்பது புலப்பெயர்ச்சியின் வரலாறுதான். எனவே புலப்பெயர்ச்சியின் துயரமும் தவிப்பும் ஈருடகத் தன்மையும் முழு மனித குலத்துக்கும் பொதுவானவை.சர்வ வியாபகமானவை.சாசுவதமானவை.

இப்படிப்பட்டதோர் உலகளாவிய அனுபவத்தின் பின்னணியில் நவஜீவன், என்னிடம் கனடாவில் கட்டியெழுப்பப்படவிருக்கும் கொம்யூனிட்டி சென்டரைக் குறித்து எழுதுமாறு கேட்டார்.வழமையாக புலம்பெயர்ந்த சமூகத்தை தாயகத்தின் நோக்குக் கோணத்தில் இருந்து பார்த்துப் பேசியும் எழுதியும் வந்த எனக்கு இது சற்று வித்தியாசமானது.

நான் தாயகத்தின் நோக்கு நிலையில் இருந்துதான் பார்ப்பேன்; சிந்திப்பேன்.அதுதான் என்னுடைய இயற்கை.அப்படிதான் முதலாம் தலைமுறைப் புலம்பெயரிகள் தமது ஈரூடக நோக்கு நிலையில் இருந்துதான்  சிந்திப்பார்கள். இந்த அடிப்படையில்தான் முதலாம் தலைமுறை புலம் பெயரிகள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் கட்டியெழுப்பும்  சமூக மையங்களையும் பார்க்கின்றார்கள். எப்படி இரண்டாம் மூன்றாம் அடுத்தடுத்த தலைமுறைகளை தாயகத்தை நோக்கிப் பிணைத்து வைத்திருப்பது? என்றுதான் அவர்கள் அதிகமாகச் சிந்திப்பார்கள்.

உலகின் மிக நீண்ட டயஸ்பொராக்களில் ஒன்று ஆகிய யூத சமூகத்தைப் பொறுத்தவரை அவர்களுடைய வரலாறும், அவர்களுடைய மதமும், இரண்டாம் உலக மகா யுத்தம் வரையிலும் அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இன அழிப்பும் அவர்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு இன விழிப்போடும் தாயகத்தை நோக்கிய தவிப்போடும் தேசிய வேட்கையோடும் ஒரு சமூகமாகத் திரட்டி வைத்திருந்தன.

ஆனால் ஈழத் தமிழர்களின் நிலை அவ்வாறு இல்லை. போர்க்காலங்களில் இன அழிப்புக்கு உள்ளாகிய தமது தாயக உறவுகளை நோக்கித் தமிழ் டயஸ்போரா ஈர்க்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அந்த ஈர்ப்பு விசை குறையத் தொடங்கிவிட்டது.

என்னுடைய நண்பர்,பேராசிரியர் ஜெயசங்கர் ஒரு முறை என்னிடம் கேட்டார், “உன்னுடைய சகோதரன் உனக்கு உதவுவதைப் போல உன்னுடைய சகோதரத்தின் பிள்ளை உன்னுடைய பிள்ளைக்கு உதவுமா?” என்று. இந்தக் கேள்வியை வேறு விதமாக ஸ்கன்டினேவிய நாடு ஒன்றின் கொழும்புக்கான தூதுவர் என்னிடம் கேட்டார். முதலாம் தலைமுறை படிப்படியாக இறந்து போனால், அடுத்தடுத்த தலைமுறைகள் தாயகத்தை நோக்கிய ஏக்கத்தோடும் தவிப்போடும் தாயகத்தின்  சமூகப் பொருளாதார அரசியல் விவகாரங்களோடு பிணைக்கப்பட்டிருக்குமா? என்று.

இலங்கை அரசாங்கமும் உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் அவ்வாறுதான் சிந்திக்கின்றன. முதலாவது தலைமுறை புலம் பெயரிகள் வயதாகி இறந்து செல்லும்பொழுது காலப்போக்கில் டயஸ்பொறாவுக்கும் தாயகத்துக்கும் இடையிலான பிணைப்புகளின் வீரியம், தொடர்ச்சி குறைந்து விடும் என்று.

அவ்வாறு தாயகத்துக்கும் தமது சந்ததியினருக்கும் இடையிலான பிணைப்பின் வீரியம் குறையக்கூடாது என்று கருதும் முதலாம் தலைமுறைப் புலம் பெயரிகள்  தாங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் கட்டி எழுப்பப்படும் சமூக மையங்களை அந்த நோக்கு நிலையில் இருந்தே கட்டியெழுப்ப முயற்சிக்கின்றார்கள்.

அவர்களுடைய ஈரூடக வாழ்க்கை நிலையைப் பொறுத்தவரை அவர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள்.ஆனால் இரண்டாம், மூன்றாம், அடுத்தடுத்த தலைமுறைகள் அவ்வாறுதான் சிந்திக்கும் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

முதலாம் தலைமுறைப் புலம் பெயரிகள் கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அல்லது உடல் வலு உள்ளவரை தாயகத்தை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 2009க்குப் பின்னர் பலர் தமது சொந்தக் கிராமங்களில் தமக்கு விரும்பிய இடத்தில் ஒரு காணியை வாங்கி விரும்பிய சைஸில் வீடுகளைக் கட்டி வருகிறார்கள். முன்பு தமது ஊரில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு காணியை வாங்குவது என்பதனை கற்பனை செய்ய முடியாத சமூகப் பின்னணியை அல்லது நிதிப் பின்னணியைக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது புலப் பெயர்ச்சியின் விளைவாகத்  தேடிய தேட்டத்தை வைத்து அவ்வாறு விரும்பிய இடத்தில் காணியை வாங்கி,விரும்பிய சைசில் வீட்டைக் கட்டும் ஒரு வளர்ச்சிக்கு வந்திருப்பது பெருமைக்குரியது.

ஆனால் அந்த வீடுகளில் அவர்கள் பருவ காலப் பறவைகளைப் போலவே வருகிறார்கள்.பெரும்பாலான காலங்களில் அந்த வீடுகள் சிசிரிவி கமராக்களால் கண்காணிக்கப்படுகின்றன.அல்லது செக்யூரிட்டி நிறுவனங்களால் பாதுகாக்கப்படுகின்றன.தொண்டைமானாரிலிருந்து பருத்தித்துறை நோக்கி செல்லும் கடற்கரைச் சாலையில் அவ்வாறு பிரமாண்டமான வீடுகளைக் காணலாம். நான் இருக்கும் பகுதியில் மட்டும் அவ்வாறு மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உண்டு.இப்படி எல்லாக் கிராமங்களிலும் பெரிய, பெரிய ஆளில்லாத வீடுகளைக் காண முடியும். கடந்த 15 ஆண்டுகளாக எழுச்சி பெற்று வரும் ஒரு புதிய போக்கு இது. இதற்குள் இருக்கிறது முதலாம் தலைமுறை புலம்பெயரியின் ஏக்கமும் தவிப்பும் நிராசையும்.

இப்புதிய போக்கின் பின்னணியில், மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் புலம்பெயரும் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள்,முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள்,துறைசார் நிபுணத்துவத்தைக் கொண்டவர்கள். எனினும் இவ்வாறு புலம்பெயரும் ஒரு பகுதியினர் அங்கே செற்றிலாக முடியாமல் மீண்டும் தாயகத்தை நோக்கி வருகிறார்கள். இது மூன்றாவது புலப்பெயர்ச்சி அலைக்குரிய வித்தியாசமான பண்புகளில் ஒன்று.

இவ்வாறு ஒரு புறம் முதலாம் தலைமுறைப் புலம் பெயரிகள் தாயகத்தில் பெரிய சொகுசான வீடுகளைக் கட்டி வருகிறார்கள். இன்னொருபுறம் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதாவது போக்கும் வரவும்.

இப்படிப்பட்டதோர் போக்கும் வரவுமான சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் தங்களை ஒரு பண்பாட்டுக் குழுமமாக கட்டியெழுப்புவது எப்படி?

தேசம் என்ற அரசியல் பரிமாணத்தின் அடிப்படையில் அவர்கள் தங்களைக் கட்டியெழுப்புவதில் அடிப்படையான பௌதிக வரையறைகள் உண்டு. தாயகத்துக்கு வெளியே ஒரு தாயகத்தை கட்டியெழுப்புவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. ஆனால் தாயகத்துக்கு வெளியே ஒரு பண்பாட்டுக் குழுமமாக தமிழ் மக்கள் தங்களை கட்டியெழுப்ப முடியும். 2009க்கு முன்பு வரை போர் அவ்வாறு தமிழ் மக்களை ஒரு திரட்சியாக்கியது. 2009க்குப் பின் அதை எந்தெந்தத் தளங்களில் செய்வது ?

தங்கள் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் தமது தாயகத்துக்கும் இடையிலான பிணைப்பைப் பலப்படுத்த யோசிக்கும் எல்லாப் புலம்பெயர்ந்த சமூகங்களும் அரசியல்,பொருளாதாரம்,பண்பாடு ஆகிய தளங்களில்தான் அந்த பிணைப்பைப் பலப்படுத்தலாம்.

அரசியல் ரீதியாக அந்த பிணைப்பு இப்பொழுதும் உண்டு. ஆனால் அதே அரசியல்தான் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை பல துண்டுகளாகப் பிரித்தும் வைத்திருக்கின்றது.பொருளாதாரத் தளத்தில் இது தொடர்பாக ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறைவு. என்றாலும், உதிரிகளாக முதலீட்டாளர்கள் தாயகத்தை நோக்கி வருகிறார்கள்.ஆனால் அது போதாது.

பண்பாட்டுத் தளத்தில் மரபுரிமை மாதங்களையும் நாட்களையும் பிரகடனப்படுத்துவதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தன்னை ஒரு திரட்சியாக கட்டமைக்க முயற்சிக்கின்றது.

அவ்வாறு பண்பாட்டுத்தளத்தில் எந்தெந்த விடயங்களில் தமிழ் மக்கள் தங்களுடைய அடையாளங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தலாம் என்று சிந்திக்கலாம்.உணவுப் பெருவிழாக்கள்; பாரம்பரிய விளையாட்டு விழாக்கள்; மூத்த தலைமுறையினரை போற்றி மதித்துக் கொண்டாடுவது; புதிய தலைமுறைக்குள் துருத்திக் கொண்டு மேலெழும் ஆளுமைகளைக் கௌரவிப்பது; மரபுரிமைச் சுற்றுலாக்கள்… போன்ற பல்வேறு விடயங்களிலும் கவனம் செலுத்தலாம். இதை ஒரு கட்டுரைக்குள் மட்டும் கூறிவிட முடியாது. இது தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்கள் தாயகத்திலும் டயஸ்போராவிலும் ஒன்றுகூடி எந்தெந்த விடயப் பரப்புகளில் தமிழ் மக்களை ஒரு பண்பாட்டுக் குழுமமாகப் பலப்படுத்துவது என்று திட்டமிட வேண்டும்.

மேலும் கொம்யூனிட்டி சென்டர் என்பது ஒரு இடையூடாட்டப் பரப்பாக மட்டும் இல்லாமல், மரபுரிமை தொடர்ச்சியை,வரலாற்றுத் தொடர்ச்சியை,பண்பாட்டுத் தொடர்ச்சியைப் பேணும் காட்சிக் கூடமாகவும் கட்டமைக்கப்பட வேண்டும்.

தாயகத்துக்கு டயஸ்பொறாவுக்கும் இடையிலான ஸ்திரமான தொடர்ச்சியான இடையூடாட்டத் தளங்களை (collaborative corridors) ஸ்தாபிக்க வேண்டும்.தாயகத்துக்கும் டயஸ்பொராவுக்கும் இடையிலே எந்தெந்த துறைகளில் இடை யூடாட்டங்களை ஏற்படுத்தலாம் என்றும் சிந்திக்க வேண்டும். தாயகத்தை நோக்கிய மரபுரிமைச் சுற்றுலாக்களை ஒழுங்குபடுத்தலாம்.சுற்றுலாப் பயணிகளாக மட்டும் தாயகத்துக்கு வரும் ஒரு நிலைமையை மாற்றி விடுமுறை காலங்களில் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு தாயகத்தில் தங்கி நின்று தேச நிர்மாணத்தில் எப்படிப் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தனக்குரிய துறை சார்ந்த பங்களிப்பைச் செய்யலாம் என்று சிந்திக்கலாம்.அதாவது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ் மக்கள் கட்டியெழுப்பும் சமூக இடையூடாட்ட மையங்களானவை தாயகத்தில் தேசத்தை நிமாணிக்கும் நிகழ்ச்சிநிரலின் பிரிக்கப்படவியலாத பகுதிகளாக இணைத்துச் சிந்திக்கப்பட வேண்டும். ஏனென்றால் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை.

 

Recommended For You

About the Author: Editor Elukainews