மன்னார் மடு கோயில் மோட்டை காணியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் பாராளுமன்றப் பகுதியில் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை முதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த விவசாயிகள் தாம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் கோயில் மோட்டை காணிகளை பறிக்க முற்படும் பங்குத்தந்தைகளை கண்டித்தும், குறித்த காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியிலுள்ள தியவன்னா ஓயா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு உரிய காணி அதிகாரம் இருக்கையில், அதன் பிரகாரம் தாம் தங்களுடடைய வாழ்வாதார விடயங்களை மையப்படுத்திய விவசாய நடவடிக்கைகளை குறித்த காணியில் முன்னெடுத்து வந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.
மன்னாரில் புதிதாக மத அரசியல் செய்யாதீர். 85 வீதம் கிறிஸ்தவர்கள் இருக்கும் கோயில் மோட்டை விவசாயிகளின் பிரச்சினையை மத பிரச்சினையாக மாற்றாதே,உங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட கேலிக்கூத்து போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, காணிக்கான எங்களின் போராட்டம் உயிர் மூச்சு வரை தொடரும். போன்ற பதாகைகளை குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அதே இடத்தில் இந்த மாதம் (அக்டோபர்) கடந்த 06-ஆம் திகதி மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கோயில் மோட்டை விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த மையும் குறிப்பிடத்தக்கது.