மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு (25) பட்டா ரக வாகனத்தில் வந்த மூவர் மாதகல் கடலில் உள்ள நங்கூரங்களை திருடுவதற்கு முயன்றனர்.
இதை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் அவர்களை துரத்திப் பிடித்தனர்.
நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று மீனவர்கள் கேட்டவேளை ” இரண்டாயிரம் கிலோ இரும்பு தருவதாக கூறினர். எனவே அந்த இரும்பினை எடுத்துச் செல்வதற்கே நாங்கள் இங்கு வந்தோம். நங்கூரம் என்றால் என்ன என்றே எமக்கு தெரியாது.” என்று தெரிவித்ததாக மீனவர்கள் கூறினர்.
இதனையடுத்து மீனவர்கள் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் மூவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இரும்பு வாங்க சென்றவர்களை காணவில்லை என உறவினர்கள் அவர்களை தேடி மாதகல் பகுதிக்கு குழந்தைகள் பெண்களுடன் வானில் அப்பகுதிக்கு வந்தனர். இதனை அவதானித்த மீனவர்கள் அவர்களை திருப்பி அனுப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக மீனவர்கள் தெரிவிக்கையில்,
நாங்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான எமது உடமைகள் அனைத்தையும் கடலிலேயே விட்டுச் செல்கின்றோம். வேறுபகுதியில் இருப்பவர்கள் வந்து இப்படி எமது கடலில் உள்ள உடமைகளை திருடிச் சென்றால் நாங்கள் என்ன செய்வது?
ஒவ்வொரு நங்கூரமும் ரூபா ஐயாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் பெறுமதியுடையவை. நாங்கள் கடன்பட்டுத்தான் எமது தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வாங்குகின்றோம். இது இவ்வாறு இருக்க உடமைகள் திருடப்பட்டால் நாங்கள் கடன் வாழங்கியவர்களுக்கு என்ன பதில் சொல்வது?
எமக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டியவர்களே எமது சொத்துக்களை திருடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கின்றது என்றால் எதற்கு இங்கு இருக்கவேண்டும்?
எங்களுக்கு தொடர்ந்து இவ்வாறு அட்டூழியங்கள் நடக்குமானால் நாங்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.