திருகோணமலை கடலில் எண்ணெய்க் கசிவை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தொடரப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (26) இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி கல்ப் ஏஜென்சி மற்றும் ELS கன்றாக்சன் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு கம்பெனிகளுக்கு சொந்தமான பாச் என்று அழைக்கப்படும் இயந்திரத்திலிருந்து கடலுக்குள் எண்ணைக் கசிவை ஏற்படுத்தியமை தொடர்பில் கடல்வள பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த முறைப்பாடுகள் குறித்து இரண்டு கம்பெனிகளுக்கு சொந்தமான இருவரையும் திருகோணமலை நீதிமன்றில் இன்று முன்னிறுத்திய போது கடல் எல்லையில் கடலை மாசுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் 10 இலட்சம் ரூபாய் பிணையில் செல்ல திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்தார்.
அத்துடன் கடலை மாசு படுத்தியமை தொடர்பில் இதுவரை காலமும் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்துள்ள நிலையில், முதல் தடவையாகக் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மேல் நீதிமன்றில் கடலை மாசு படுத்திய குற்றச்சாட்டின் கீழான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த இரண்டு நபர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.