கொழும்பு முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹவத்தையில், நேற்று (26) காலை சுமார் 6.15 மணியளவில், வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில், தகவல் வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் இன்று (27) அறிவித்துள்ளது.
மீகஹவத்தையில் பொலிஸாரை போன்று வேடமணிந்து நேற்றைய தினம் (26) வீடொன்றுக்குள் புகுந்த இருவர் அங்கிருந்தோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில், பிரதான சந்தேக நபர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸ் திணைக்களம், அவரை கைதுசெய்வதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
பொன்னம்பெரும ஆராச்சிகே தொன் தனுஸ் புத்திக நொஹான் ஜிலே என்ற 320 வயதுடைய நபரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.
அவரது அடையாள அட்டை இலக்கம் 911854481ஏ என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சந்தேக நபர், முல்லேரியா, உடுமுல்ல, மாலபே ஆகிய பகுதிகளில் வசித்து வந்துள்ளார்
சந்தேக நபர், இரு கைகளிலும் தோற்பட்டை முதல் மணிக்கட்டுவரை பச்சைக்குத்தியுள்ளார்.
மேலும் அங்கொடை, ஹிம்புட்டான, முல்லேரியா, வெலிகம, மிதிகம, ஹிக்கடுவ, காலி ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருபவர் எனவும் தெரிவித்துள்ளது.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் 0718591727, 0777370360, 0718592279 ஆகிய இலக்கங்களுடன் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளர், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளரை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.