வவுனியா மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்றலில் அரசுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மதவாச்சி பிரதேசத்தைச்சேர்ந்த 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரதேசத்துடன் இணைக்கும் செயற்பாட்டினை இரகசியமாக அரசு அரங்கேற்றி வருகின்றது.
இந்த குடியேற்றம் நடை பெற்றால்…
எமக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும்..
எமது மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் வீதம் குறைவடையும்..
எமது இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் குறைவடையும்..
எமது மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் சூறையாடப்படும்..
எமது மக்களின் குடித்தொகை பரம்பல் குறைக்கப்படும்..
இவ்வாறான நிலையில் இந்த விடயத்தை அனுமதித்தால் அது எமது இருப்புக்கு மிக மிக ஆபத்தானது.
நல்லாட்சியில் சலுகைகளுக்காக வவுனியா வடக்கு தமிழர் தேசத்தில் போகஸ்வெவ சிங்கள குடியேற்றத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து அனுமதித்ததன் மூலம் தமிழர் செறிவை குறைக்கும் இந்த நடவடிக்கை அரங்கேறுகின்றது.
இதனை எதிர்த்து வவுனியா மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஒழுங்குபடுத்தலில் 29/10/2021 (நாளை) காலை 10.30 மணிக்கு பழைய பேருந்து நிலையம் முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது
ஆசிரியர்கள் சம்பள பிரச்சினைக்காக போராடுகின்றார்கள்..
விவசாயிகள் உரத்திற்காக போராடுகிறார்கள்..
நாம் எமது இனத்தின் இருப்புக்காக போராடுகிறோம்.. போராடினால் தான் எமது வாழ்க்கை என்றாகிவிட்டது..
இது எமது மக்களின் உரிமைக்கான போராட்டம்.
இந்த போராட்டத்தில் கட்சி பேரம் பாராது இன உணர்வுடன் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தேசத்துக்கான பயணத்தில் தேசியத்திற்காக அனைவரும் வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.