ஆப்கானிஸ்தானில் இன்னும் 439 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்நாட்டு ராணுவத் தலைமையான பென்டகன் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்தது முதலே தலிபான்கள் தங்களின் ஆதிக்கத்தைத் தொடங்கினர். கடந்த ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறின. குறுகிய காலத்தில் அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தான் நாட்டவர் உள்ளிட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை அமெரிக்கா பத்திரமாக அப்புறப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்னும் 439 அமெரிக்கர்கள் இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தலைமையான பென்டகன் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜோ பைடன் கூறும்போது, ஆப்கனில் 200க்கும் குறைவான அமெரிக்கர்கள் மட்டுமே இருப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ துணைச் செயலர் கோலின் கால் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் இன்னும் 439 அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களில் 176 பேர் ஏற்கெனவே எப்படியாவது எங்களை மீட்டுக் கொள்ளுங்கள் என்று கோரியுள்ளனர். எஞ்சியுள்ள 243 பேரில் சிலர் இப்போதைக்கு அங்கிருந்து வெளியேறத் தயாராக இல்லை, சிலர் எப்போதுமே வெளியேற விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்” என்றார்.