தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு பயிற்சி மருத்துவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு வைத்திய அத்தியட்சகர் திலீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனனும், சிறப்பு விருந்தினர்களாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனும், வலி.வடக்கு பிரதேச செயலர் சிவஸ்ரீயும், யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா, வடக்கு மாகாண அரச வைத்தியர்கள் சங்கத் தலைவர் வைத்தியர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விருந்தினர் உரைகளோடு வாழ்த்துரைகளை சிரேஷ்ட வைத்திய நிபுணரும் உளநல மருத்துவ நிபுணருமாகிய வைத்திய கலாநிதி எஸ்.சிவயோகன், வைத்தியசாலை குழந்தை மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி ஜெயபாலன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அரச வைத்தியர் சங்கத் தலைவர் வைத்தியர் சுஜந்தன் ஆகியோர் வழங்கினர். நன்றியுரையை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருமாகிய லயன் சி.ஹரிகரன் வழங்கினார்
.
இந்த நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகரும் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுமாகிய வைத்தியர் ஆ.ஜெயக்குமார், சாவகச்சேரி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், வைத்தியநிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டு பயிற்சி மருத்துவர்களை வரவேற்றனர்.
வடக்கு மாகாண அரசின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கே முதன்முறையாக பயிற்சி வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 6 வருடங்களாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு பயிற்சி மருத்துவர்களை உள்வாங்குவது தொடர்பாக இந்தக் காலங்களில் செயற்பட்ட வைத்திய அத்தியட்சகர்களும், வைத்திய நிபுணர்களும், வைத்தியர்களும், வைத்தியசாலை சமுகத்தினரும் தொடர்ந்து பாடுபட்டதன் பயனாக அரச மருத்துவ சங்கத் தலைவர் பாதீனியவின் முயற்சியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.