
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்து A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11.15 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்த ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த 75 வயதான பொன்னம்பலம் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த முதியவர் ஏ9 வீதியை கடக்க முற்பட்டுள்ளதாகவும், இதன்போது பாதசாரி கடவையை பயன்படுத்தாது அதற்கு அண்மித்த பகுதியின் ஊடாக கடக்க முற்பட்டதாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் பரந்தன் திசை நோக்கி பயணித்த காரினை அவதானித்த குறித்த முதியவர் வேகமாக கடக்க முற்பட்டுள்ளதாகவும், அதன் பின் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த முதியவரை மோதியுள்ளதாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் குறித்த முதியவரின் கால் துண்டாடப்பட்டுள்ளதுடன், தலைப்பகுதியிலும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலயைில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை இடம்பெற்ற வந்த நிலயைில், ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.