கோப் 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக – ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரை நேற்று (30.10.2021)பிற்பகல் ஜனாதிபதி சென்றடைந்தார்.
ஜனாதிபதியும் அவரது குழுவினரும், ஐரோப்பிய நேரம் நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு, கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை வந்து அடைந்தனர்.
அவர்களை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அம்மையார் வரவேற்றார். காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, இன்று (31) தொடக்கம் நவம்பர் 12 வரை, க்லாஸ்கோ நகரில் நடைபெறும். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.