அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு, இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகளாவிய பொருளாதாரம், சுகாதாரம் எனும் தலைப்பில் நடைபெற்ற அமர்வில் பேசிய பிரதமர் மோடி ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்ற பார்வை, கொரோனா மட்டுமின்றி எதிர்காலத்தில் நேரிடும் சுகாதார பிரச்னைகளை எதிர்கொள்ள உதவும் என்றார்.
கொரோனாவை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு இடையே கூட்டு அணுகுமுறை அவசியம் எனவும் மோடி குறிப்பிட்டார். சவால்கள் நிறைந்த நோய்த் தொற்று காலத்தில், விநியோக சங்கிலியின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளியாக இந்தியா செயல்பட்டு, 150 நாடுகளுக்கு மருந்துகள் உள்ளிட்டவற்றை விநியோகித்ததாக பெருமிதம் தெரிவித்தார்.