உலக நாடுகளில் தற்போது பரவலடைந்து வரும் புதிய கொரோனா திரிபு இலங்கைக்குள் வந்திருக்காது என்ற நம்பிக்கையில் செயற்படக்கூடாது என்றும், அவ்வாறு அந்த தொற்று எமது நாட்டிலும் பரவலடைந்தால் கடுமையான எச்சரிக்கை நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பல நாடுகளில் கொரோனா தொற்றின் புதிய திரிபு பரவலடைந்துள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், எமது நாட்டில் இந்த புதிய தொற்றின் தாக்கம் ஏற்படாது என்று எந்தவொரு நம்பிக்கையும் வைக்கக் கூடாது. காரணம், கடந்த காலங்களில் உருவாக ஒவ்வொரு புதிய திரிபுகளினதும் தாக்கம் எமது நாட்டிலும் ஏற்பட்டமை அதற்கு சிறந்த உதாரணமாகும்.
தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தமக்கு முழு பாதுகாப்பு கிடைத்துவிடும் என சிலர் கருதுகிறார்கள். ஆனால், புதிதாக அடையாளம் காணப்படும் சகல திரிபுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடமிருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதை மறந்தவிடக் கூடாது. அதனால், இதுவரையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கும் புதிய திரிபு தொற்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மக்களால் மாத்திரமே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும். எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றல் மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுதல் அவசியமாகும்.
அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் எச்சரிக்கை நிலைமை உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.