1980 ஆம் ஆண்டு விவசாயிகளின் போராட்டத்தின் போது கழுத்தில் சவப்பெட்டிகளை தூக்கிச் சென்றேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விவசாயிகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான முடிவையும் நான் எடுத்ததும் இல்லை. எடுக்கப்போவதுமில்லை.அரசாங்கம் என் அறிவுரைகளை கேட்பதில்லை.அதன் பிரதி பலன்களை இன்று அனுபவிக்கின்றது.
1980 களில் விவசாயிகளின் போராட்டத்தின் போது எனது கழுத்தில் சவப்பெட்டிகளை தூக்கி சென்று போராட்டம் செய்தேன்.இப்போது இந்த அரசாங்கம் எனது அறிவுரைகளைக் கேட்பது இல்லை.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஆசைக்கு கூட வயல் வரம்புகளில் நடந்து செல்ல தெரியாதவர். இவ்வாறானவர்களால் எவ்வாறு விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்து தீர்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவிவரும் உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கொடும்பாவியை எரித்து பல பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.