லண்டனில் கிறிஸ்மஸுக்கு முன்னர் தீவிரவாத தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும், ஆகையினால் லண்டன் வாசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில, சந்தேகத்திற்கிடமான நடத்தை தொடர்பில் பொதுமக்கள் துணிச்சலாக செயற்பட வேண்டியது இன்றியமையாதது என்றும், பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“சமீபத்தில் எசெக்ஸில் சர் டேவிட் அமெஸ் எம்.பி.யின் கொடூரமான கொலையின் மூலமாக மற்றொரு பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டோம். இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் மிகவும் உண்மையானது என்பதை நினைவுப்படுத்துகிறது.
எனவே லண்டன்வாசிகள் தொடர்ந்து எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். சந்தேகத்திற்கிடமான எதையும் நீங்கள் பார்த்தாலோ அல்லது கேட்டாலோ அது குறித்து எங்களுக்கு தகவல் வழங்குங்கள்.
துணிச்சலுக்கு பல வடிவங்கள் உள்ளன, எங்களுக்குத் தவறாக உணரக்கூடிய அல்லது சந்தேகத்திற்குரியதாகத் தோன்றும் ஒன்றை தெரிவிக்க மக்களுக்கு தைரியமும் நம்பிக்கையும் தேவை,” என்று அவர் கூறினார்.