சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்த வழக்கு நெதர்லாந்தின் ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை செய்யப்படவுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை முடிவுக்கு கொண்டு வரும் சர்வதேச தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில் லசந்த படுகொலை தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கீ உள்ளிட்ட சில ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணை நடாத்தப்பட உள்ளது. லசந்த கொலை குறித்த வழக்கு முதலாவதாக ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளின் போது லசந்தவின் புதல்வி அமீசா சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வேச குற்றவியல் நீதிமன்றமும் ஹேக்கில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் லசந்த படுகொலை செய்யப்பட்டிருந்தார்.