
செப்டம்பர் – மாதம் 19ம் திகதி வட்டுக்போட்டை முதலிக்குளம் என்னும் இடத்தில் ஒரு வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அனைவரும் கவனத்தை திருப்பவேண்டிய தேவை உண்டு என்பதை பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன் என திரு. ச.செ.சி. இளங்கோவன் தெரிவித்தார்.
ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இன்னொரு சமூகத்தை சேர்ந்த ஒருவரையும் அவருடைய வீடு மற்றும் சொத்துக்களையும் அதற்கு பிறகு அந்த நபரின் சமூகத்தை சேர்ந்தவர்களினுடைய சொத்துக்களையும், வீடுகள் கடைகள் போன்றவற்றின் சொத்துக்களை சேதாரப்படுத்தியதாகவும் நாங்கள் அறிகின்றோம். இதுதொடர்பாக பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இது ஒரு சாதாரண வன்முறைச் சம்பவம் என்று கூறும் அதேவேளை எமது சமூகத்தில் புற்றுநோயாக இருந்து பலரின் முயற்சியால் இல்லாதொழிக்கப்பட்ட சாதி காரணமாக ஏற்பட்ட வன்முறைச் சம்பவமாக இது கூறப்படுகின்றது. மதமாக இருக்கலாம். சாதியாக இருக்கலாம். மொழியாக இருக்கலாம். இனமாக இருக்கலாம். இதன் காரணமாக ஏற்படுத்தப்படும் அடக்குமுறைகளை நாம் எவரும் ஏற்கமுடியாது. இந்த அடக்குமுறை வன்முறையை பயன்படுத்தி மேற்கொள்ளபடுமாயின் இதனை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வன்முறையினை சிலர் சாதாரணமாக கூறியிருந்தாலும் ஆய்வாளர்கள் இதன் அடிப்படையில் சாதி இருப்பதாக அதாவது சாதி ஒடுக்குமுறை இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்த விடயம் மிகவும் கவலைக்கு ஒரு இடமாக இருக்கிறது அத்துடன் இந்த வன்முறைச் சம்பவம் நடைபெற்றவுடன் பொலிசாரால் எந்த வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் திரு. ச.செ.ச. இளங்கோவன் கவலை தெரிவித்தார்.