இலங்கை-இந்திய அரசியல் பரப்பில் இரு நாட்டுக்குமான உறவினை சரிசெய்யும் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இலங்கைக்கான இந்திய தூதுவர் மிலிந்த மொறகொட நியமிக்கப்பட்டதிலிருந்த இரு நாடுகளும் உறவுகளை சரிசெய்வதில் நெருக்கமடைந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கொலம்பகேயின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவரது விஜயம் தமிழ் அரசியல் பரப்பில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த போதும் தமிழ் அரசியல் தலைமைகளிடையேயான ஐக்கியத்தை வலியுறுத்தும் செய்தியினை அவர்கள் விட்டுச்சென்றுள்ளனர். 13வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்ற ஒரு விடயத்திலாவது தமிழ்த்தரப்புகள் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இக்கட்டுரை இந்தியா ஐக்கியத்தை வலியுறுத்துவதற்கான அவசியத்தை உரையாடுவதாக உள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் 13ஆம் சட்ட திருத்த மூலத்துக்கு அப்பால் உரையாடுவதை தவிர்த்திருந்தார். 1987ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை-இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் தமிழர்களுடைய அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட 13வது திருத்த சட்ட மூலத்தினை 34 வருடங்களுக்கு பின்னரும் அதனையே இந்தியா வலியுறுத்துவதனை அவதானிக்க முடிகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாண சந்திப்பிலும், கொழும்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பிலும், இலங்கை ஜனாதிபதியுடனான உரையாடலின் போதும் 13ஆம் திருத்த சட்ட மூலம் முழுமையான அமுலாக்கம் பற்றிய உரையாடல்களையே வெளிப்படுத்தி உள்ளார். 1987ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை தமிழர்கள் அரசியல் விடயத்தில் இந்திய தரப்பின் தீர்மானங்கள் 13ஆம் திருத்த சட்டமூலம் பற்றியதாகவே உள்ளது. எனவே இந்தியா இதனை கடந்து இலங்கை தமிழர்களின் நெருக்கடிக்கு தீர்வை முன்வைக்குமா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. அதனைக் கடந்து இந்தியா செயற்படுவதற்குரிய வாய்ப்புக்கள் இல்லை என்றும் அத்தகைய 13 பேரளவிலானதாக மட்டுமே உள்ளது என்றும் அதிகாரமற்ற ஒரு சபையாகவே மாகாண சபை காணப்படுகின்றது எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனை மீளமைத்து முழுமைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதே இந்தியாவின் தற்போதைய நோக்கு என்றும் கருத முடியும். இந்த சந்தர்ப்பத்தில்தான் இந்திய வெளிவிவகார செயலாளர் தீர்வு என்ற விடயத்திலாவது தமிழ் தரப்பின் ஐக்கியத்தை வலியுறுத்தி சென்றுள்ளார். அதிலும் 13ஐ அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்படும் அனைத்து தீர்வுக்கும் ஐக்கியப்பட்டு கோரிக்கை வைக்குமாறு வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, தீர்வு விடயத்திலாவது தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டுமென்பது இந்தியாவின் வெளிப்பாடாகும். இதே கருத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கைக்கான இந்திய தூதுவரும் பல சந்தர்ப்பங்கள் இலங்கை தமிழ் தரப்புக்கு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அத்தகைய ஐக்கியத்தை வலியுறுத்தும் இந்திய தரப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தனித்தும் ஏனைய கட்சிகளை பொது அமைப்புக்களோடு இணைத்து சந்திக்க கரிசனை கொண்டதன் நோக்கம் மட்டுமே நெருடலாக உள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளரின் தமிழ்மக்களின் ஐக்கியப்படுத்தல் தொடர்பான உரையாடல் இந்தியாவுக்கான பலத்தையும் அதன்மூலமான பேரம்பேசலையும் வலுப்படுத்தவதற்கான சூழலை உருவாக்குவதே நோக்கமாக தெரிகிறது. அதாவது, வடக்கு-கிழக்கு அரசியல் தலைமைகளினால் அவர்கள் சார்ந்த மக்களினால் ஒன்றிணைக்கின்ற போது இலகுவாக அவர்களால் கையாளவும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கவும் அத்தகைய ஐக்கியம் தவிர்க்க முடியாதது என்பதை இந்திய தரப்பு உணர்ந்துள்ளது. தமிழ்த்தேசியத்தை மையப்படுத்தி இருக்கும் தமிழ்க்கட்சிகள் தமக்குள்ளே ஒரு இணைவை அல்லது ஐக்கியத்தை அல்லது ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க முடியாது என்பது வேடிக்கையான விடயம். தமிழ்த்தரப்புக்கள் தமிழ் மக்களை விட தமிழ் மக்களின் அபிலாசைகளை விட தமது கட்சிகளின் கொள்கைகளையும் தேர்தல் வெற்றிகளையும் அதன் மூலமான அரசியல் இருப்பினை மேற்குறித்த ஐக்கியம் இன்மைக்கு அடிப்படை காரணமாகும். ஆனால் இந்தியா எதிர்பார்ப்பது போல் அரசியல் தலைமைகள் ஒருங்கிணைந்த தலைமை இந்தியா இலங்கையில் செல்வாக்கு செலுத்தவும் தென்னிலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவும் வழிவகுக்கும் என கருதுகின்றது.
இவற்றைவிட தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைக்கப்படுகின்ற போது பிறசக்திகளின் ஊடுருவல் அதன் ஆதிக்கம் வடக்கு-கிழக்கு நோக்கி சாத்தியப்பட முடியாத அளவுக்கு பாதுகாக்க முடியுமென இந்தியா கருதுகிறது. இலங்கை எப்போதும் இந்தியா எதிர்ப்பு வாதத்தையும் இந்தியாவை கையாளுகின்ற தன்மையையும் கொண்டிருக்கின்ற போது தமிழ்த்தரப்பு இந்தியாவுடன் சேர்ந்து பயணிப்பதுவும் தொடர்ச்சியான அனுபவங்களை வெளிப்படுத்தி கொண்டுள்ளது 1962ஆம் ஆண்டு சீன-இந்திய யுத்தம் நிகழுகின்ற போது சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்கு ஆதரவாக செயற்படும் இளைஞரணியை திரட்டி இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிட்டதும் அக்காலப்பகுதியிலிருந்து தற்போது வரை இந்திய எதிர்ப்புவாதத்தை வெளிப்படுத்தாத போக்கினை தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றனர். அத்தகைய தமிழ் மக்களிடமிருந்து எழுகின்ற அரசியல் தலைமைகள் அவ்வப்போது இந்தியாவின் கொள்கைகள் பொறுத்து முரண்பாடான முடிவுகளை முன்வைத்துள்ளனர். ஆகவே இந்திய தரப்பின் தமிழ் அரசியல் தலைமைகளின் ஐக்கியம் பற்றிய வாதம் இலங்கையின் வடக்கு-கிழக்கை கடந்து இலங்கை தீவுக்கான அரசியலாகவும், இந்திய-இலங்கை உறவுக்கான அரசியலாகவும் கருதுகிறது. வடக்கு-கிழக்கு அரசியல் தலைமைகள் ஐக்கியப்படுவதென்பது இந்தியாவிற்கெதிரான பிறசக்திகளை தடுத்து நிறுத்துவதற்கான அடிப்படையேயாகும். குறிப்பாக தென்னிலங்கையின் அனுசரணையோடு சீனாவின் செல்வாக்கு வடக்கு-கிழக்கில் அதிகரிப்பானது இந்தியாவுக்கு புவியியல் ரீதியிலான ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு இந்தியாவுக்கான நிரந்தர வாய்ப்புக்கள் இல்லாமல் போகவும் இலங்கை தீவு முழுமையாக இந்தியாவை விட்டு விலகவும் வழிவகுத்துவிடுமென்ற சந்தேகம் இந்திய தரப்புக்கு உண்டு. எனவே தான் ஐக்கியத்தை வலியுறுத்தி பிரச்சினைக்கான தீர்வை முதன்மைப்படுத்தி அதன்வழியொரு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவது இந்தியாவின் நோக்கமாகும்.
இவற்றைவிட கடந்த காலத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் மீதான அதிருப்தி கொண்ட அரசியல் தரப்புக்கள் சீனா சார்பு மனநிலை கொண்ட அரசியல் தலைமைகளும் வடக்கு-கிழக்கில் காணப்படுகிறது. எனவே அத்தகைய சக்திகள் முழுமையாக சீன சார்பு நிலைப்பாட்டை எடுக்குமாயின் இந்தியா பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசியல் கட்சி அல்லது தமிழ்த்தேசியத்தை அடிப்படையாய் கொண்ட ஒரு அரசியல் கட்சி சீனாவை அங்கீகரிக்க முயலுமாயின் அதன் விளைவுகள் இந்தியாவிற்கு ஆபத்தானதானதாகவே அமைந்துவிடும். தற்போது கூட தென்னிலங்கையின் சீனா சார்பு போக்கினை முறியடிப்பதில் தமிழர் தரப்பு இந்தியாவிற்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளது. தங்களது அரசியல் பிரச்சினையை அதற்கான 13 தீர்வு, 1987 உடன்படிக்கையென வடக்கு-கிழக்குடனான இந்திய அரசியல் உறவு வலுவானதாக கட்டுப்படுவதற்கும் அடிப்படையாக விளங்குகிறது. எனவே தென்னிலங்கையின் சீன சார்பு நகர்வுகள் ஒவ்வொன்றுக்கும் எதிராக தமிழரசியல் தலைமைகளின் வெளிப்பாடுகள் இந்தியாவை எச்சரிக்கைக்கு உட்படுத்தி இலங்கை தொடர்பான கரிசனையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
எனவே, இந்திய வெளிவிவகார செயலாளர் உட்பட இந்திய தரப்பு தமிழர்களின் அரசியல் தலைமையின் ஐக்கியம் பற்றியும் 13வது திருத்த சட்ட மூலம் இலங்கை தமிழர்களின் தீர்வின் அடிப்படையெனவும் விவாதித்ததன் எண்ணங்கள் வடக்கு-கிழக்கு தமிழர்களின் அரசியல் இருப்பில் மாற்றத்தை கொடுக்கும் அம்சமாகவே நோக்கப்பட வேண்டும். இந்தியாவை மீறி தென்னிலங்கை செயற்படும் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றிலும் இந்தியா வடக்கு-கிழக்கு தமிழர்களின் இருப்பை முதன்மைப்படுத்திக்கொண்டே இலங்கை தீவை தமது செல்வாக்குக்குள் வைத்திருக்க முயன்று வெற்றி பெற்று வருகிறது. இந்திய வெளிவிவகார செயலாளரின் விஜயமும் அத்தகைய முயற்சியின் பிரதிபலிப்பாகும். ஆனால் இலங்கை தமிழ் அரசியல் தலைமைகள் தமது முரண்பாட்டை கைவிட்டு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி ஐக்கியப்படுவதும் ஐக்கியப்படுவதற்கான அமைப்புக்களை கட்டி வளர்ப்பதுவும் அவற்றையொரு ஆரோக்கியமான கட்டமைப்பாக உருவாக்குவதும் அவசியமானதாகும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்