சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷ்வை என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் வருவது இதுவே முதல் முறை.
முன்னாள் துணை பிரதமர் ஜாங் கவ்லீ அவருடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொள்ளுமாறு தம்மைத் துன்புறுத்தினார் என்று ஷ்வை தெரிவித்துள்ளார்.
ஜாங் கவ்லீ இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. அதிபர் ஷி ஜின்பிங் உடன் நெருக்கமானவராக இவர் அறியப்படுகிறார்.
தற்போது 75 வயதாகும் ஜாங் கவ்லீ 2013-2018 காலகட்டத்தில் சீன துணைப் பிரதமராக இருந்தார்.
பெங் ஷ்வை பொது வெளியில் குற்றம்சாட்டிய பின்னர் அவர் குறித்த இணையத் தேடல்களை சீன அரசு கட்டுப்படுத்தியுள்ளது.
ஜாங் கவ்லீயின் வீட்டுக்குச் சென்றபோது இந்த நிகழ்வு நடந்ததாகவும், அதை நிரூபிக்கத் தம்மிடம் ஆதாரங்கள் இல்லை என்றும் பெங் ஷ்வை கூறியுள்ளார்.