வடகிழக்கு பருவமழைத் தொடங்கியதையொட்டி, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நேற்று (06/11/2021) இரவு முதல் பெய்து கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள மூன்று மாவட்டங்களிலும் மீட்பு பணிக்கு உதவிட பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் இருந்து நான்கு குழுக்கள் விரைந்துள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா 1 குழுவும், மதுரைக்கு இரண்டு குழுக்களும் என மொத்தம் 100 வீரர்கள் விரைந்துள்ளன.