தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத்துறைக்குச் சென்று அங்கிருந்து படகின் மூலம் முல்லை பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரும் சென்றனர். அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டத் தேவையில்லை. கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிக் காலத்திலேயே முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்
இந்நிலையில், (05.11.2021) பிற்பகல் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கடந்த எட்டு ஆண்டுகளாக நானும், தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் அப்போஸும் 678 கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு, 10 லட்சம் மக்களைத் திரட்டி கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க தீட்டிய திட்டத்தை முறியடித்தோம். கரிகாலன் கட்டிய கல்லணையைவிட முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலை குறித்து புதிய ஆளுநரிடம் முயற்சி செய்துவருகிறோம்” என்று தெரிவித்தார்.