
லண்டனில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர்களாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லண்டனில் இளம் பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு தனது நண்பரை பார்க்கச் சென்ற ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர், லண்டனில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லண்டனில் கடந்த மாதம் 17ம் திகதி 28 வயதான ஷபினா நெஸ்ஸா என்ற ஆசிரியை இரவு 8.30 மணியளவில் தனது நண்பரை பார்க்ன வெளியில் சென்றார்.
இதன்போது அவர் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். 24 மணி நேர தேடுதலின் பின்னர் பூங்கா ஒன்றிலிருந்து அவரது உடல் கண்டுக்கப்பட்டது. இலைகளால் மூடப்பட்ட நிலையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷபினா நெஸ்ஸாவின் உடல் மத வழிபாடுகளின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட குடும்பத்தினர்,
“இன்று எமக்கு மிகவும் துக்கமான நாளாகும். இந்த இழப்பு அளவிட முடியாத ஒன்றாகும். எங்கள் குடும்பத்தினரால் இதனை தாங்கிக்கொள்ள முடியாது. வாழ்வில் என்றும் நீங்காத சம்பவமாக இது எங்கள் மனதில் இருக்கும்.
இது போன்ற நிலைமை வேறெந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. இதற்காக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.