13வது திருத்தம் அரசியல் தீர்வும் அல்ல! ஆரம்பப்புள்ளியுமல்ல. (சி.அ.யோதிலிங்கம்)

நம்பிக்கை இழந்த இந்தியா

தமிழ் அரசியலில் மூத்த கட்சியான அகில இலங்கைத் தமிழரசுக்
கட்சியில் நம்பிக்கை இழந்த இந்தியா தனது நிகழ்ச்சி நிரலை
நகர்த்துவதற்கு செல்வம் அடைக்கலநாதனையும், மனோ கணேசனையும்,ராவூப்
ஹக்கீமையும் அணுகத் தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் திண்ணை விடுதியில் கடந்த 2ம் திகதி இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டமாகும்.

பின்னணியில் இருந்து இயக்கிய இந்தியா

ரெலோ இயக்கம் இக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும்
ஆலோசனைக் கூட்டத்தை பிரபல்யப்படுத்தியவர்கள் மனோகணேசனும்
ரவூப்ஹக்கீமும் தான். 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்
எனக் கூட்டாக இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதை இலக்காகக் கொண்டு
கூட்டம் ஆரம்பிக்கப் பட்டாலும் இறுதியில் தமிழ்- முஸ்லீம் மக்கள்
சந்திக்கின்ற பிரதான விவகாரங்களுக்கு கூட்டாக குரல் கொடுப்பது என்பதாக
கூட்டம் முடிவடைந்திருக்கின்றது.

13வது திருத்தத்திற்காக உருவாக்கப்பட்ட
கூட்டம் பலகோரிக்கைகளில் ஒன்றாக மட்டும் அதனை மாற்றியிருந்தது.
தமிழ்-முஸ்லீம் கட்சிகளின் சார்பில் அதன் தலைவர்களான செல்வம்
அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஸ்பிரேமச்சந்திரன்,
சிறீகாந்தா, ரவூப்ஹக்கீம், மனோகணேசன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் கூட்டத்தில்
கலந்து கொள்ளவில்லை அவரின் சார்பில் கட்சியின் பொருளாளர்
பேராசிரியர் சிவநாதன் கலந்து கொண்டார்.
பிரதான தமிழ்த்தேசியக்கட்சிகளான அகில இலங்கை
தமிழரசுக்கட்சியும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இதில் கலந்து
கொள்ளவில்லை. விக்கினேஸ்வரனின் கூட்டணியிலுள்ள அனந்தி சசீதரனின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகமும் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாதது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாதது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.
அக்கட்சி வெளிப்படையாகவே 13 வது திருத்தம் அரசியல் தீர்வின்
ஆரம்பப் புள்ளியாகக் கூட இருக்க மாட்டாது எனக் கூறி வருகின்றது.
இதனால் ரெலோ இயக்கம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. தற்போது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13வது திருத்தத்தை எதிர்த்து
கிராமங்களில் மக்கள் சந்திப்பை நடாத்த இருப்பதாக ஒரு தகவல். ஆனால் 13
வது திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாக இருக்கும் அது
முழுமையாக நிறைவேற்றப்படல் வேண்டும் எனக்கூறிவரும் தமிழரசுக்கட்சி
கட்சி இதில் கலந்து கொள்ளாதது தான் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அனந்தி தான் ஒரு தளபதியின் துணைவியாக இருந்து கொண்டு 13 வது திருத்தத்தை
எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

ரெலோ ஒழுங்கு செய்த கூட்டத்தில் மூத்த கட்சியான தமிழரசுக்கட்சி
எவ்வாறு கலந்து கொள்வது என்ற பிரச்சினை அதற்கு காரணமாக
இருக்கலாம்.

சுமந்திரனின் திருகுதாளம்.

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீமை கலந்து கொள்ள
வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேட்டதாகவும் ஒரு
தகவல் வந்திருக்கின்றது. இந்தியா பெரிதாக எதுவும் செய்யப் போவதில்லை
இந்தியாவை நம்பி ஆட்சியாளர்களைப் பகைப்பது ஆரோக்கியமற்றது என
சம்பந்தன் கருதியிருக்கலாம்; என்ற ஒரு கருத்தும் உள்ளது.
ஆலோசனைக் கூட்டம் முடிவுற்று சில நாட்களின் பின்னர்
மனோகணேசனும் ரவூப்ஹக்கீமும் சம்பந்தனைச் சந்தித்து எதிர்வரும்
காலங்களில் இடம்பெறும் கூட்டங்களில் தமிழரசுக் கட்சியும் கலந்து கொள்ள
வேண்டும் என்றும் கூட்டங்களுக்கு சம்பந்தன் ஐயாவே தலைமை தாங்க வேண்டும்
என்றும் கேட்டுக்கொண்டனர். சம்பந்தனும் அதற்கு பச்சைக் கொடி
காட்டியுள்ளார். எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்கள் சந்திக்கின்ற
அனைத்து பிரச்சினைகளுக்கும் கூட்டாக குரல் கொடுக்க முன்வர வேண்டும்
என்றும் அவர் கேட்டிருக்கின்றார்.

விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி

விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி 13 வது திருத்தத்தை
அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக ஏற்றுக் கொள்ளலாம்
ஆனால் அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல்
தீர்வு இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் சுயநிர்ணயமுடைய சமஸ்டியாக இருக்க
வேண்டும் என்று சாரப்பட ஒரு அறிக்கையை கூட்டத்தில் சமர்ப்பித்ததாகவும்
செய்திகள் வந்திருக்கின்றன.

பேராசிரியர் சிவநாதனை கூட்டத்தின்
இடையில் வெளியேறுங்கள் என புலம் பெயர் நாட்டில் இருந்து
கோரப்பட்டதாவும் இன்னோர் செய்தி உள்ளது.

முஸ்லீம் கட்சிகள்

முஸ்லீம் கட்சிகளில் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மட்டுமே
கலந்துகொண்டது. ரீசாத்பதியுதீனின் கட்சியோ ஹசன் அலியின்
கட்சியோ அதாவுல்லாவின் கட்சியோ இதில் கலந்துகொள்ளவில்லை.
அதாவுல்லாவின் கட்சி மொட்டு அரசாங்கத்திற்கு சார்பான கட்சி. அதனைத்
தவிர்த்தாலும்கூட ரிசாத் பதியுதீனின் கட்சிக்கும் ஹசன் அலியின்
கட்சிக்கும் அழைப்பு விடுத்திருக்கலாம். கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த
ரெலோ இயக்கமோ  அதற்கு பின்னால் நின்று வழிநடாத்திய
இந்தியாவோ இதனைக் கவனத்தில் எடுக்கவில்லை. ஹசன் அலியும்,
பசீர்சேகுதாவூத்தும் தமிழ்-முஸ்லீம் ஐக்கியத்தை தொடர்ச்சியாக
வலியுறுத்தி வருபவர்கள். அதிலும் பசீர் சேகுதாவூத் ஈரோஸ்
இயக்கத்தின் முன்னாள் போராளி. விடுதலைப் போராட்டத்தின் வலியை
நன்கு உணர்ந்தவர்.

தமிழ் தேசிய சார்புக் கட்சிகள்

தமிழ்த்தேசிய சார்புக் கட்சிகளில் ஆனந்த சங்கரியின் தமிழர்
விடுதலைக் கூட்டணிக்கும், ஐங்கரநேசனின் தமிழ்த் தேசியப் பசுமை
இயக்கத்திற்கும் கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. சிறிய கட்சிகள் என
அவற்றைப் புறம்தள்ளிவிட முடியாது. ஏனெனில் தமிழரசுக் கட்சியையும்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும்
ஒரு சில நபர்களைக் கொண்ட கட்சிகள் தான். யாழ் நகர மேஜர் மணிவண்ணனும்
தனது அணியை தனியான தரப்பாகவே அடையாளப்படுத்தி வருகின்றார்.
அவருக்கும் அழைப்பு விடுத்திருக்கலாம். எதிர்காலத்தில் இவற்றிற்கும்அழைப்பு விடுப்பது பற்றிக் கவனம் செலுத்துவது நல்லது. எவ்வளவுக்கு எவ்வளவு
கூட்டுக் குரலை அதிகரிக்கின்றோமோ அவ்வளவிற்கு அரசாங்கத்தை
நோக்கிய அழுத்தங்களையும் பலமாக விடுக்க முடியும்.

சிங்கள முங்போக்கு சக்திகளும் இணைந்த ஒரு குடையின் கீழ்                                                                   தவிர சிங்கள முற்போக்கு கட்சிகளையும் இணைத்துக்கொள்வது நல்லது.
விக்கிரமபாகு கருணாரத்னாவின் நவசமாஜக் கட்சிக்கும், சிறீதுங்காவின்
கட்சிக்கும் அழைப்பு விடுத்திருக்கலாம். அரசாங்கத்துடன் இல்லாத தமிழ்
மக்களின் அரசியலை ஏற்றுக்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு
விடுப்பது நல்லது. இதைவிட எதிர்வரும் காலங்களில் மக்கள் அமைப்புக்களை
இணைப்பது பற்றியும் யோசிக்க வேண்டும். அனைத்துத் தரப்பும் ஒரு
குடையின் கீழ் அணிதிரண்டு குரல் எழுப்பும் போதே அழுத்தங்கள்
வினைத்திறன் உடையதாக அமைய முடியும். இலங்கைத் தீவில் இருந்து கூட்டுக் குரல்
எழுச்சியடையுமானால் தமிழகம் உட்பட உலகத் தமிழர்களும், புலம்பெயர்
மக்களும், உலகின் முற்போக்கு ஜனநாய சக்திகளும் இதில் இணைந்துகொள்ள
முன்வருவர். அவ்வாறான ஒரு நிலை வருமானால் சர்வதேச
அபிப்பிராயத்தைக் கட்டி எழுப்பி சர்வதேச அழுத்தத்தையும்
பிறப்பிக்கலாம்.

கூட்டத்தின் தீர்மானங்கள்
கூட்டத்தின் முடிவில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம்
தலைமையில் ஊடகவியலாளர் மாநாடு இடம் பெற்றது. அதில் அவர் கூட்டத்தின்
தீர்மானங்களை அறிவித்தார். அரசியல் யாப்பில் இருக்கும். 13வது
திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்டல் வேண்டும், மாகாண சபைத்
தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படல் வேண்டும். அரசாங்கத்தால் வடக்கு-கிழக்கு
மகாணங்களில் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படல்
வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு தடுத்துவைக்கப்ட்டிருக்கும்
அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும், “ஒரே நாடு ஒரே சட்டம்”
என்பதை நிராகரிக்கின்றோம் என்பன தீர்மானங்களாக
அமைந்திருந்தன. 13 வது திருத்தத்திற்கு ஒருங்கிணைத்து குரல் கொடுப்பது
தொடர்பாகவும் தமிழரசுக் கட்சியை இணைக்காமை தொடர்பாகவும் பல விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

அரசியல் தீர்வு என்பது பரிகார நீதியின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பே.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கைத் தீவில் அரசியல் தரப்புக்கள் ஒருமித்த சக்தியாக ஒருங்கிணைவது
வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழ்த் தேசத்திற்கான அரசியல் தீர்வுத்
திட்டம் என்பது பரிகார நீதியின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு
ஒன்றின் மூலமே காணப்படல் வேண்டும். 2009 இன அழிப்புக்கு
முன்னராக முன்வைக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்திலான அரசியல் தீர்வு
தமிழ்த் தேசத்தின் பெரு விருப்பாக அமையவில்லை என அன்றே அரசியல்
தலைவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே அரசியல் தீர்வு 13
வது திருத்தத்திற்கு அப்பால் சென்று பரிகார நீதியின்படி அமைய
வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

ஊடகங்களின் விசம பிரசாரங்கள்

சில இணையத்தளங்கள் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டவர்களை இந்திய – மேற்குலக நாடுகளின் கைக்கூலிகள் என வர்ணித்திருந்தன. யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்று
தமிழரசுக்கட்சி இணைக்காமையை குற்றம் சாட்டியிருந்தது. ரெலோ
இவ்விவகாரத்தில் அவசரப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழும்பியிருந்தது.

ஆத்திரப்பட்ட மனோ கணேசன்

இந்த விமர்சனங்கள் மனோகணேசனை சற்றுக்
கோபப்படுத்தியிருந்தன. வடக்கை மையமாகக் கொண்டு வடக்கு-கிழக்கு
அரசியல் பரப்பு விசித்திரமானது என்பதை மீண்டும் ஒரு முறை அறிந்து
சிலிர்த்துக் கொண்டேன். நான் என்னை நம்பும் மக்களுக்கு கைக்கூலி தான்.
13 வது திருத்தத்தை முழுமையான தீர்வு என எம்மில் எவரும் கருதவில்லை. சமஸ்டி
தீர்வினை பெற தமிழர்களுக்கு முழுமையான சுயநிர்ணய உரிமை
இருக்கின்றது. அதனைப் போராடிப் பெற வேண்டும். உலகம் துணைப்
பாத்திரத்தை தான் வகிக்க முடியும். வெளியில் இருந்து எவரும் வந்து தட்டில்
வைத்து தீர்வு தரப்போகிறார்களா? எனக்கூறியிருக்கிறார். மனோ கணேசனின் இந்தக் கருத்துகளுடன் 13 வது திருத்தம் பற்றிய
விவாதம் மீண்டும் மேல் நிலைக்கு வந்துள்ளது.

மீண்டும் விவாத பொருளாக மாறிய 13                                                                                                              அது அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக இருக்குமா? இதற்குப் பின்னால் இந்தியத்தரப்பின்
நோக்கம் என்ன? என்கின்ற விடயங்களை விவாதப்பொருட்களாகியுள்ளன.
13 வது திருத்தம் ஆரம்பப்புள்ளியாக இருக்கும் என்பது தமிழ் மக்களில் அனைத்துத் தரப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை. கஜேந்திரகுமார்
தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதனைக் கடுமையாக
எதிர்க்கின்றது. பொது அமைப்புக்களும் பல எதிர்க்கின்றன.
புலம்பெயர் அமைப்புக்களில் பலவும் எதிர்க்கின்றன.

மாநகர சபைகளை புற்கள் உள்ள வெளியில் கட்டிவிட்ட மாடுகள்
என்றால் மாகாணசபைகளை புற்கள் இல்லாத திறந்த வெளியில் கட்டாமல்
விடப்பட்ட மாடுகள்
13 வது திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு சுயாதீனமான இருப்பு
எதுவும் இல்லை. பிடுங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால்
எஞ்சியிருக்கின்ற அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கிறதே ஒழிய
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைகளிடமோ அல்லது அமைச்சரவையிடமோ
இல்லை. ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் ஒரு மாநகர சபைக்குள்ள சுயாதீன
அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு இல்லை என்றே கூறலாம்.
மாநகர சபைகளை புற்கள் உள்ள வெளியில் கட்டிவிட்ட மாடுகள்
என்றால் மாகாணசபைகளை புற்கள் இல்லாத திறந்த வெளியில் கட்டாமல்
விடப்பட்ட மாடுகள் எனலாம். புற்கள் உள்ள திறந்த வெளியில்
கட்டிவிடப்பட்ட மாடுகள் கயிறு உள்ள நீளம் வரையாவது சுற்றிவர
சுதந்திரமாக மேயலாம். புற்கள் இல்லாத திறந்த வெளியில் கட்டாமல்
விட்டால் கூட எதுவும் மேய முடியாது. மாகாணசபை முறையை அதிகாரப் பகிர்வு
எனக் கூற முடியாது. நிர்வாகப் பரவலாக்கம் என்றே கூறலாம்.
எனவே எந்த அதிகாரமும் இல்லாத ஒன்றை எவ்வாறு
ஆரம்பப்புள்ளியாகக் கொள்ள முடியும். இது மனோகணேசனுக்கு
தெரியாததல்ல. கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய கட்சியினருக்கும்
தெரியாததல்ல. இங்கு மாகாண சபைகளிடம் சில அதிகாரங்கள் இருக்கின்றன
அவை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தான் பிரச்சினை என்ற கருத்து முன்வைக்க
முயற்சிக்கப்படுகிறது இது தவறானதாகும்.

மாகாண சபை முறை அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாக இருக்க
வேண்டுமானால்
மாகாண சபை முறை அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாக இருக்க
வேண்டுமானால் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரே அதிகார
அலகாக மாற்றப்படல் வேண்டும். ஆளுனரின் அதிகாரங்கள் மாகாண
சபைக்கும். மாகாண அமைச்சரவைக்கும் வழங்கப்பட்டு ஆளுநர் பெயரளவுநிர்வாகியாக மாற்றப்படல் வேண்டும். ஒத்தியங்கு பட்டியல்
நீக்கப்பட்டு அவை மாகாண சபை; பட்டியலுக்கும்.  மத்திய அரசின்
பட்டியலுக்கும் பகிரப்படல் வேண்டும். மாகாணசபை நிரலில் உள்ள
விடயங்களில் சுதந்திரமாக சட்டமியற்றும் உரிமை இருத்தல் வேண்டும்.
மாகாண பொலிஸ்பிரிவு உருவாக்கப்பட்டு அது மாகாண முதலமைச்சரின்
பொறுப்பில் விடப்படல் வேண்டும். காணிவிவகாரங்களில் சுதந்திரமான
அதிகாரம் மாகாண சபைக்கு இருத்தல் வேண்டும். இவ்வளவும் கொண்டு வரப்பட்ட
பின்னர் மாகாணசபை முறையை ஆரம்பப் புள்ளி எனக் கூறலாம்.

இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் கருத்து 

இரண்டாவது தமிழ்க்கட்சிகள் ஆரம்பப்புள்ளி எனக் கூறினாலும்
இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் கருத்து அவ்வாறானதல்ல. அவை
நிரந்தரத் தீர்வாகவே நிலைநிறுத்த முயற்சிக்கின்றன. இந்தியா
ஜெனிவாவிலும் இதனை முன்வைத்திருக்கின்றது. 13வது திருத்த
முன்னெடுப்புக்களிலுள்ள மிகப் பெரிய அபாயம் இதுதான்.

சமஸ்டி நோக்கி செல்வதை தடுக்கின்ற பெருந்
தடுப்புக் கட்டையாக மாகாண சபை முறை
தவிர மாகாணசபை முறையினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள்
கொஞ்சநஞ்சமல்ல. மேலே குறிப்பிட்டது போல் தமிழ் அரசியலின்
இலக்கான சுய நிர்ணயமுடைய சமஸ்டி நோக்கி செல்வதை தடுக்கின்ற பெருந்
தடுப்புக் கட்டையாக மாகாண சபை முறை உள்ளது. இது முதலாவது பாதிப்பு.
இரண்டாவது தமிழ்த் தேசியத்தின் இருப்பை இது சிதைக்க முற்படுவதாகும்.

கிழக்கை சிதைக்க சிங்கள கட்சிகளுடன் கூட்டு சேரும் கட்சிகள்.
கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் இதனை தெளிவாகக் காணலாம். அங்கு கிழக்கு மாகாண சபையை எவ்வாறாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்கு சிங்களக்கட்சிகளுடன் கூட்டுச் சேருவதற்கும் ஒரு தரப்பு தயாராக இருக்கின்றது.
அதற்காக வடக்கு-கிழக்கு இணைப்பை அடக்கி வாசிப்பதற்கும் தயாராக
இருக்கின்றது. கிழக்கின் முக்கியஸ்தர்கள் இக் கட்டுரையாளரிடம் இதனை
நேரடியாக தெரிவித்துள்ளனர். இந்தப் போக்கை முன்னெடுப்பதற்காக
பிரதேச வாதமும், வடக்கு எதிர்ப்பு வாதமும் அங்கு கிழப்பப்
படுகின்றது. இந்தப் போக்கு கிழக்கு தமிழ் மக்களை
பெருந்தேசியவாதத்திற்குள் கரைப்பதை நோக்கியே நிலைமையை இழுத்துச்
செல்லும். கோட்டபாய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலும் இதுதான். வரப்போகும் மாகாணசபைத் தேர்தலில் இதனை அரங்கேற்றும் நிகழ்ச்சித் திட்டம் பசில்ராஜபக்ச தலைமையில் இலாவகமாக
முன்னெடுக்கப்படுகின்றது.

வடமாகாணசபை ஒரு அரசியல் களம்

மாகாண சபை முறையிலுள்ள ஒரே ஒரு சாதகமான அம்சம் வடமாகாணசபை.
ஒரு அரசியல் களமாக இருக்கின்றது என்பது தான். இதனை இக்கட்டுரையாளர்
முன்னரும் கூறியிருக்கின்றார். போர் நடைபெற்ற பிரதேசம்
என்பதால் வடமாகாணசபை எப்போதும் சர்வதேச கவனிப்புக்கும்
உள்ளாக்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு மாகாணசபை இயங்க வேண்டியது தேவை
இங்கு ஒரு இராஜதந்திர பிரச்சினை இருக்கின்றது என்பதை
இக்கட்டுரையாளர் மறுக்கவில்லை.இந்தியாவிற்கு மாகாணசபை இயங்க வேண்டியது
தேவையாக உள்ளது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை உயிருடன் வைத்திருப்பதற்கு
இது மிக அவசியம். புதிய யாப்பு முயற்சிகள் மாகாணசபை முறையை இல்லாது
செய்து விடலாம். அவ்வாறு நடைபெற்றால் தனது பிடி இல்லாமல் போகும்
என இந்தியா அஞ்சுகின்றது.
இந்த இராஜ தந்திர நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இந்தியாவிற்கும்
பாதிப்பு வராமல் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு வராமல் ஒரு
அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது.

அரசாங்கம் நல்லெண்ணத்தைக் காட்டுவதற்கான நிபந்தனை

எனவே மாகாண சபை முறையை ஆரம்பப் புள்ளி என்றோ,தீர்விற்கான அடிப்படை என்றோ
கூறாமல் “சிறீலங்கா அரசாங்கம் நல்லெண்ணத்தைக் காட்டுவதற்கான
நிபந்தனையாக மாகாணசபை முறையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என
கோரிக்கையை முன் வைக்கலாம். இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைத்தால்
மாகாணசபை முறை அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாக இருக்காது
எனக் கூறுபவர்களும் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.
குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைப்பதற்கு வாய்ப்பு
ஏற்படும். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கூட்டத்தின் சாதகமான அம்சங்கள்
இரண்டாகும். ஒன்று ரவூப்ஹக்கீம் தலைமையில் கூட்டம் இடம் பெற்றதும், ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றதுமாகும். இதன் மூலம் முஸ்லீம்
மக்களுக்கு நாம் இணைந்து செயற்பட எப்போதும் தயார் என்கின்ற
வலிமையான செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. முஸ்லீம்-தமிழ் உரையாடலை
ஏதோ ஒருபுள்ளியில் ஆரம்பிக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிக
அவசியமாக உள்ளது. அதற்கான முதற் காலடி வைக்கப்பட்டிருக்கின்றது
எனலாம்.

தமிழ் முஸ்லீம் உறவு.

வடக்கு-கிழக்கு தாயக அரசியலுக்குள் முஸ்லீம் தரப்பும்
வருமானால் இணைந்த வடக்கு-கிழக்கிற்கு ரவூப்ஹக்கீம் முதலமைச்சராவதைக் கூட
தமிழ் மக்கள் எதிர்க்கப்போவதில்லை.
இங்கு தமிழ்த் தேசியத்திற்குள் முஸ்லீம் மக்கள் கரைய வேண்டும் எனக்
கூற வரவில்லை. அவர்கள் ஒரு தேசிய இனமாகவே இணைந்து கொள்ளலாம். இணைந்த
வடக்கு கிழக்கில் அவர்களுக்கான தனி அதிகார அலகுக் கோரிக்கையைக் கூட
தமிழ் மக்கள் எதிர்க்கப் போவதில்லை.
இரண்டாவது சாதகமான அம்சம் காணிப்பறிப்பு ஒரே நாடு ஒரே
சட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகள் விடுதலை
என்பன பற்றியும் ஒரே குரலில் பேசியமையாகும். எதிர்காலத்தில்இதனை
மேலும் வளர்த்தெடுக்கலாம். தமிழ், முஸ்லீம், மலையக மக்கள்
சந்திக்கின்ற பொதுவான பிரச்சினைகளிலும், தனியான
பிரச்சினைகளிலும், இணைந்து குரல் கொடுப்பது அழுத்தங்கள் வலிமையாக
வருவதற்கு உதவக்கூடியதாக இருக்கும்.

தமிழ்-முஸ்லீம் உறவு ஒருங்கிணைந்த குரல்
மொத்தத்தில் யாழ்ப்பாணக் கூட்டம் பற்றி பல்வேறு விமர்சனங்கள்
இருந்தாலும் தமிழ்-முஸ்லீம் உறவு ஒருங்கிணைந்த குரல் என்பவற்றில்
“காத்திரமான முதல் காலடி” வைக்கப்பட்டிருக்கின்றது எனக் கூறலாம்.
மலையக மக்கள் சம்பந்தமான கோரிக்கைகள் தீர்மானங்களில்
உள்ளடக்கப்படவில்லை. எதிர்காலத்தில் அதனைப் பற்றியும் கவனம்
செலுத்துவது அவசியமானது. மனோகணேசன் கொழும்பை அடையாளப்படுத்துவதால்
மலையகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியையும் ஆலோசனைக் கூட்டங்களில்
இணைத்துக்கொள்வது ஆரோக்கியமானது.

Recommended For You

About the Author: Editor Elukainews