யாழ்.நகரம் – மானிப்பாய் – பொன்னாலை வரையான வீதி புனரமைப்பின்போது பாலங்கள், மதகுகள் சீரமைப்பு செய்யப்படாமை தொடர்பாக வலி,மேற்கு பிரதேசசபை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வலி.மேற்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் வலி.மேற்கு பிரதேச சபை கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
மேற்படி வீதி புனரமைப்பின்போது மானிப்பாய்க்கும் சங்கானைக்கும் இடையே பெரியதும் சிறியதுமாக ஆறு வரையான மதகுகள் புனரமைக்கப்படாமல் காபெற் இடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மதகுகள் அடுத்துவரும் சில ஆண்டுகளிலேயே இடிந்து விழும் அபாயம் காணப்படுவதால் அவற்றைப் புனரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து மதகுகளும் புனரமைக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு சபை உறுப்பினர் நல்லதம்பி பொன்ராசா பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரைக் கடிதம் மூலம் கோரியிருந்தார். இதையடுத்தே, வலி.மேற்கு பிரதேச சபை வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு நேற்றுமுன்தினம் (10) வியாழக்கிழமை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது