இரத்தினபுரி பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் வைத்து சந்தேக நபர் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பனமுர பிரதேச மக்கள், பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (17) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பனாமுர வெலிபோதயாய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் நேற்று (16) பனாமுர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் அவரது மனைவி செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே அவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்து இரு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பானமுர கிராம மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடி சந்தேக நபரின் மரணத்துக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கிராம மக்கள், வீதியின் குறுக்கே மரக்குற்றிகளை எரியூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அதிகாரியின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.