கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்த குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டில் பலபாகங்களிலிருந்தும் கொழும்பை நோக்கி வருகைதந்த மக்களைப் பொலிஸார் தடுத்துநிறுத்தித் திருப்பியனுப்பியதுடன் பொதுமக்களை ஏற்றிவந்த பேருந்துகளையும் சோதனையிட்டனர்.
அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு உயர்வு, உரத்தட்டுப்பாட்டின் விளைவாக விவசாயிகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகள் உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளுக்கும் செயற்திறனற்ற நிர்வாகத்திற்கும் எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும் அரசாங்கத்திற்கு எதிரான இம்மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பஸ்வண்டிகள் ஊடாகவும் பேரணியாக நடந்தும் கொழும்பிற்கு வருகைதருவதற்கு முற்பட்ட மக்களுக்கு பொலிஸார் பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.