சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்க ராஜாங்கத்
திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றுள்ளனர்.
சட்டத்தரணிகள் குழுவே செல்வதாகக் கூறினாலும் அதில் சட்டத்தரணி அல்லாத
சாணக்கியனும் அடக்கம். எது எப்பிடியிருப்பினும் கிழக்குப்
பிரதிநிதி ஒருவரை குழுவில் சேர்த்தமை வரவேற்கக் கூடியதே!
குழுவில் இவர்கள் இருவரும் தவிர ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் சட்டத்தரணியும்
சட்டவிரிவுரையாளருமான நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும்
சென்றுள்ளனர். நிர்மலா சந்திரஹாசன் முன்னாள் நல்லூர்த் தொகுதி
பாராளுமன்ற உறுப்பினர் நாகநாதனின் மகளும்ரூபவ் தந்தை செல்வாவின்
மருமகளுமாவர். சாணக்கியனை இறுதி நேரத்தில் சுமந்திரனே
இணைத்துள்ளார்.
கடந்த 15, 16, 17ம் திகதிகளில் ராஜாங்க தினைக்கள
முக்கியஸ்தர்களோடு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன. சுமந்திரனுக்குச்
சார்பான புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் குழுவில்
இணைந்திருந்ததாக ஒரு தகவல். யார் அழைப்புவிடுத்தது என்பது தொடர்பாக
மாறுபட்ட கருத்துக்கள் வந்திருந்தாலும் பின்னர் அமெரிக்க ராஜாங்க
திணைக்களமே அழைப்புவிடுத்தது என்பது உறுதியாகியுள்ளது.
சுமந்திரனை இந்தியா ஒதுக்கியுள்ளது. இதனால் தன்னை முக்கியத்துவப்படுத்த
சுமந்திரன் இன்னோர் வழியால் முயல்கின்றார் என்ற செய்தியும்
உண்டு. இப் பயணம் பசில் ராஜபக்ச அண்மைக்காலமாக நகர்த்தி வருகின்ற
நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதி என்ற கதையும் அடிபடுகின்றது. 13 வது
திருத்தத்தை இந்தியா முதன்மைப்படுத்த முனைகின்ற போதும்.
தமிழ்த்தரப்பிடமிருந்து அதற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை
அதனால் இந்தியா அமெரிக்கா மூலம் முயற்சிகளைச் செய்கின்றது என்ற
கருத்தும் உள்ளது.
இந்தப்பயணம் அங்கு பேசப்படப்போகின்ற விடயங்கள் பற்றி
சுமந்திரன் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடவில்லை.
சொந்தக்கட்சியுடனும் கலந்துரையாடவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. தவிர
பயணக்குழுவில் உள்ளவர்கள் தமிழ் அரசியல் பற்றி பட்டறிவு அனுபவம்
அற்றவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி
பேசுவர் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.
சுமந்திரனை தமிழ் மக்களுக்கான அரசியலை செய்பவர் என தமிழ்த்தேசிய சக்திகள் கருதுவதில்லை. சுமந்திரன் இப் பயணத்தை கட்சிப் பயணமாகக் குறிப்பிடாமல் தனிப்பட்ட
நிபுணர் குழுவின் பயணம் என்றே குறிப்பிடுகின்றார். சட்ட
நிபுணர்கள் செல்கின்றார்களே தவிர அரசியல் நிபுணர்கள் எவரும்
செல்லவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை அரசியல் பிரச்சினையே
ஒழிய சட்டப் பிரச்சினையல்ல. சுமந்திரன் அனைத்தையும்
சட்டப்பிரச்சினையாக சுருக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுபற்றியே
பேசப்போவதாகவும் செய்திகள் வந்திருந்தன. தமிழ் மக்களுக்கு ஒரு
அரசியல் தீர்வு வேண்டும் என்பதிலும் அதற்கு சர்வதேச அழுத்தம் தேவை
என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அரசியல் தீர்வுக்கு முதலில்
அது பற்றிய அரசியல் தீர்மானம் கூட்டாக எடுக்கப்படல் வேண்டும்.
பின்னர் அத் தீர்மானத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லவும்
சர்வதேச அபிப்பிராயத்தை அதற்கு சார்பாக பெற்றுக்கொள்ளவும்,
வெளிநாட்டுக் கொள்கையும் பயிற்சி பெற்ற இராஜதந்திர லொபியும்
உருவாக்கப்படல் வேண்டும். இந்தச் செயல்முறைகள் எதுவும் இங்கு
இடம்பெறவில்லை. சர்வதேச சக்திகள் விரும்புகின்ற தீர்வுக்கு தாளம்
போடுவது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எந்த வகையிலும் உதவப்
போவதில்லை.
அரசியல் தீர்வு விவகாரத்தில் முதலில் மேற்கொள்ள வேண்டிய
பணி முதலில் கூட்டாக அரசியல் தீர்மானம் எடுப்பதாகும். சமஸ்டி
ஆட்சிமுறை தான் தீர்வு என்றால் அதன் உள்ளடக்கம் எவ்வாறு இருக்க
வேண்டும் என்பது தொடர்பாக பொது முடிவு எட்டப்படல் வேண்டும். சமஸ்டி
ஆட்சி முறையில் பல உலக மாதிரிகள் உள்ளன. மிக உயர்ந்த வடிவத்தில்
சுவிஸ்லாந்து சமஸ்டிமுறை, பொஸ்னிய சமஸ்டி முறை என்பன உள்ளன.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இறுதியாக எட்டப்பட்ட சமஸ்டிமுறையாக
பொஸ்னிய சமஸ்டியைக் குறிப்பிடலாம். மிகவும் பலவீனமான
சமஸ்டிமுறையாக இந்திய சமஸ்டிமுறை உள்ளது.
தமிழ் மக்களுக்கான சமஸ்டிமுறை ஒரு நாட்டின் மாதிரியைத் தான்
பின்பற்ற வேண்டும் என்பதில்லை. பல்வேறு நாடுகளிலுமுள்ள
சமஸ்டிமுறையில் தமிழ் மக்களுக்கு பொருத்தமான கூறுகளை உள்வாங்கி அவை
போதாவிட்டால் நாமும் புதிதாக சில விடயங்களைச் சேர்த்து தமிழ்
மக்களுக்கான சமஸ்டிமுறையை சிபார்சு செய்யலாம். இதற்கு முதலில் தமிழ்
மக்களுக்கான அரசியல் தீர்வில் எத்தகைய உள்ளடக்கங்கள் தேவை என
அடையாளம் காண வேண்டும்.
அதன் பின்னர் பல்வேறு நாடுகளிலும் உள்ள
சமஸ்டி முறைகளில் தமிழ் மக்களுக்கு தேவையான கூறுகளை உள்வாங்கலாம்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கோட்பாட்டு அடிப்படையில்
தேசிய இன அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை
அங்கீகாரம், அதற்கான ஆட்சிப் பொறிமுறை என்பவற்றைக்
கொண்டிருத்தல் வேண்டும். இக்கோட்பாட்டு விடயங்களுக்கு யாப்பு சட்ட வடிவம்
கொடுக்கும் போது தாயக ஒருமைப்பாட்டை குறிக்கும் வகையில் வடக்கு –
கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசமாக பங்குபற்றுவதற்கான பொறிமுறை,
சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்கின்ற நான்கு
விடயங்களுக்கும் உத்தரவாதம் வேண்டும்.
இக்கோட்பாட்டு விடயம் 1985 ம் ஆண்டு திம்பு மாநாட்டின் போது
தமிழ் மக்கள் சார்ந்த அமைப்புக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு
அரசியல் யாப்புச்சட்ட வடிவம் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு
யோசனைகளிலும், வடமாகாணசபையின் தீர்வு யோசனைகளிலும், தமிழீழ
விடுதலைப் புலிகளின் இடைக்கால யோசனைகளிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக் கட்டுரையாளரும் இவற்றை பல தடவைகள் கூறியிருக்கின்றார்.
முதலில் மேற்கொள்ள வேண்டியது அரசியல் தீர்வுக்கான
நிபுணர் குழு.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பல மாதிரிகள்
தமிழ்த் தரப்பினால் மேலே கூறியது போல ஏற்கனவே
முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து தமிழ்
மக்களுக்கான அரசியல் தீர்வு மாதிரியை முடிவு செய்து கொள்வது
பொருத்தமானதாக இருக்கும். இங்கு முதலில் மேற்கொள்ள வேண்டியது அரசியல் தீர்வுக்கான
நிபுணர் குழு ஒன்றை தமிழ்த் தரப்பு உருவாக்குவதே. தாயகத்திலும்,
புலம்பெயர் நாடுகளிலும் வசிக்கும், சட்ட, அரசியல் நிபுணர்களையும்
உலக ரீதியாக பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் தமிழக வம்சாவழித் தமிழ்
நிபுணர்களையும் இணைத்துக்கொள்ளலாம். தமிழர்கள் அல்லாத
நிபுணர்களின் உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். இந் நிபுணர்குழு
அரசியல் தீர்வுப்பொதி ஒன்றை உருவாக்கட்டும். பின்னர் அதனை
அரசியல் தீர்மானமாக மாற்றுவதற்கு அரசியல் கட்சிகள் மத்தியிலும்
பொது அமைப்புக்கள் மத்தியிலும் விவாதங்கள் நடாத்தலாம். முடிவில்
திருத்தங்கள் இருப்பின் அவற்றையும் சீர் செய்து அரசியல் தீர்வுப்
பொதியின் இறுதி வடிவத்தை ஏகோபித்த குரலில் உருவாக்க வேண்டும.
அந்தத் தீர்வுப் பொதி தான் தமிழ் மக்களிற்கான தீர்வுப்பொதியாக
இருக்கும். பின்னர் இவற்றை தாயக மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பேசு
பொருளாக்க வேண்டும். சர்வதேச மட்டப் பேசு பொருளாக்கல் மிக மிக
அவசியம். அப் பேசு பொருளாக்கல் இல்லாமல் சர்வதேச
அபிப்பிராயத்தையும் திரட்ட முடியாது. சிறீலங்கா அரசிற்கு வலுவான
அழுத்தங்களையும் கொடுக்க முடியாது.
தமிழ் மக்களுக்கான
வெளிநாட்டுக் கொள்கை உடனடியாக உருவாக்ககப்படல் வேண்டும்.
சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாக்குவதற்கு தமிழ் மக்களுக்கான
வெளிநாட்டுக் கொள்கை உடனடியாக உருவாக்ககப்படல் வேண்டும். வெளிநாட்டுக்
கொள்கை ஒன்றில்லாமல் சர்வதேச சக்திகளை வினைத்திறனுடன் அணுக முடியாது.
தொடர்ந்து பயிற்சிபெற்ற ராஜதந்திர லொபியையும் உருவாக்க
வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை மூன்று அணிகளான ராஜதந்திர
லொபிகள் தேவை. இந்தியாவை கையாள தனியான ஒரு லொபியையும்,
அமெரிக்க – மேற்குலக தரப்புக்களைச் கையாள ஒரு லொபியும்,
சிறீலங்கா அரசிற்கு நெருக்கமாக உள்ள சீனா, ரஸ்யா, பாகிஸ்தான்
தான் போன்ற தரப்புக்களை கையாள இன்னோர் தனியான லொபியும்
உருவாக்கப்படுவது அவசியமானதாகும். இவற்றை வெற்றிகரமாக்க இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். ஒன்று ஒருங்கிணைந்த
அரசியலைக்கட்டியெழுப்புவதாகும். இரண்டாவது தமிழ் மக்களுக்கான ஒரு
அதிகாரக்கட்டமைப்பை உருவாக்குவதாகும் இரண்டுமே மிகச் சவாலான
விடயங்களாகும், ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் சர்வதேச அரசியலைக் கையாளவும்
முடியாது. ஆட்சியிலிருக்கின்ற பெருந்தேசிய வாதத்தின் இனவாத
முகத்திற்கும் முகம் கொடுக்கவும் முடியாது. அதிகாரக்கட்டமைப்பு இல்லாமல்
வெளிநாட்டு விவகாரங்களை ஒழுங்காக கையாளவும் முடியாது.
அரசியல் தீர்வு விவகாரம் சுமந்திரனதோ சம்பந்தனதோ
தனிப்பட்ட பிரச்சினையல்ல.
அரசியல் தீர்வு விவகாரம் சுமந்திரனதோ சம்பந்தனதோ
தனிப்பட்ட பிரச்சினையல்ல. இது தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வைத்
தீர்மானிக்கின்ற விவகாரம். இங்கு தனிநபர்கள் மட்டும் தீர்மானங்களை
எடுக்க முடியாது. மக்களின் அரசியல் பிரதிநிதிகளும், பொது
அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கூட்டாகப் பேசி முடிவெடுக்கின்ற
விவகாரம். இதில் சுமந்திரன் தனித்து ஓடுவது தமிழ் மக்களின் நலன்களுக்கு
ஏற்றதல்ல. தவிர சுமந்திரன் எதை அடிப்படையாக வைத்து
பேசியிருக்கின்றார் என்பதும் மூடு மந்திரமாக உள்ளது. நல்லாட்சிக்
காலத்து யோசனையைத்தான் முன்வைத்திருப்பார்; என்றால் அது தமிழ்
மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படப்போவதில்லை.
அரசியல் தீர்வை விட இன்னோர் விடயமும் இராஜதந்திர சமூகத்துடன்
உரையாட வேண்டிய முக்கிய விடயமாக உள்ளது. சிறீலங்கா அரசின் பச்சை
ஆக்கிரமிப்புக்களே அதுவாகும். கிழக்கின் ஆக்கிரமிப்பு முற்றப்
பெற்ற நிலையில் வடக்கு நோக்கி இந் நகர்வு திரும்பியுள்ளது. சிங்கள
கிராமசேவையாளர் பிரிவுகளை வவுனியா வடக்குடன் இணைத்து சனத்தொகை
அடர்த்தியை செயற்கையாக மாற்றம் முயற்சி இடம்பெறுகின்றது. வடக்கில்
சிங்களப் பிரதிநிதி ஒருவரை பெற்றக்கொள்வதே இதன் இலக்காகும்.
மட்டக்களப்பில் தேரர் ஒருவர் பிரதேச செயலகத்திற்குள் பலவந்தமாக
நுழைந்து பிரதேச செயலரையே அச்சுறுத்துகின்றார். தொல்லியல்
ஆக்கிரமிப்பும், படை முகாம்களுக்கான காணிப்பறிப்பும் இன்னோர்
வகையில் தொடர்கின்றது.
இந்தப் பச்சை ஆக்கிரமிப்புக்கள் தமிழ் மக்களின்
கூட்டிருப்போடும், கூட்டுரிமையோடும், கூட்டடையாளத்தோடும் தொடர்புடைய
விவகாரமாக இருப்பதால் உடனடியாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
ராஜதந்திர சமூகத்தின் அழுத்தங்கள் இல்லாமல் இவற்றை தடுத்து நிறுத்துவது
மிகவும் கடினமானது. இதனால் ஆக்கிரமிப்புக்களை நிறுத்த சர்வதேச
பாதுகாப்புப் பொறிமுறை ஒன்று வேண்டும் என இக் கட்டுரையாளர்
தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.
எனவே ராஜ தந்திர சமூகத்துடன் இவற்றைப் பற்றியும் அவசரமாகப்
பேச வேண்டும். சுமந்திரன் இப் பணியினை வினைத்திறனுடன் செய்வார் என
எதிர்பாற்பதற்கில்லை. நல்லாட்சிக் காலத்தில் மைத்திரியுடன் இணைந்து
சிங்களக் குடியேற்ற வாசிகளுக்கு காணிப் பத்திரம் வழங்கியவரிடம்
இவற்றை எதிர்பார்க்க முடியாது.
இதனால் தமிழ் மக்கள் இவற்றைக் கவனத்தில் எடுப்பதோடு தனியாக
ஓடும் தரப்புக்களை தடுத்து நிறுத்தி கூட்டாக ஓடும்படி வலியுறுத்துவதும்.
இன்றைய சூழலில் மிகமிக அவசியமானதாகும்