யாழ்.சுன்னாகம் – அம்பனை J/199 கிராமசேவகர் பிரிவில் வயோதிபர் ஒருவரை வீதியில் வைத்து அடித்து பின்னர் வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்கிய சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த பகுதியில் வசிக்கும் முத்து ஜெகதீசன் (வயது 55) என்பவர் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அவர் வெளியே வரும்வரை அயல் வீட்டின் வாயிலில் காத்திருந்த இருவர் இரும்புக் கம்பிகளால் ஜெகதீசன் மீது கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில்
அவரை இழுத்து தமது வீட்டிற்குள் கொண்டு சென்று வாயில் கதவை மூடிவிட்டு அவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் அபயக்குரல் எழுப்பியுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் திரண்ட கிராமத்து மக்கள் தாக்குதல் நடைபெறும் வீட்டிற்குள் நுழைந்து அவரை மீட்க முயன்றபோது தாக்குதல் நடத்தியவர்களால் அங்கு சென்றவர்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் விசாரணையின் அடிப்படையில் தாக்குதல் சம்பவத்திற்கு பழைய பகையே காரணம் என்று தெரியவந்துள்ளது.
தாக்குதல் சந்தேகநபர்கள் இருவருடன் அவர்களின் வீட்டினைச் சேர்ந்த பெண் ஒருவரும் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.