“எங்களுடைய தேசத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்தது எனக் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்தக் கருத்தை நிராகரிக்கின்றேன்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
“போதைப்பொருளால் வடக்கு, கிழக்கில் எமது சமூகம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவது தொடர்பில் சிறிதரன் எம்.பி. கருத்து வெளியிடுகையில், அந்த உண்மையை சகித்துக்கொள்ள முடியாத இராணுவத் துணைக்குழுவின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொய்யான கருத்தை முன்வைத்தார்.
எங்களுடைய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்தது எனக் கூறுகின்றார். இதனை மறுக்கின்றேன். பிரபாகரனின் ஒழுக்கம் தொடர்பில் சரத் பொன்சேகா, கமல் குணரட்னம் போன்றவர்களே தெளிவாகக் கூறியுள்ளனர். எனவே, அவர்களிடம் கேட்டாவது டக்ளஸ் கற்றுக்கொள்ள வேண்டும்” – என்றார்.