யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதியன்று நடைபெற்ற பசுமைக் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த நவம்பர் 20ஆம் திகதி நடந்த நிகழ்வில் கார்த்திகைப் பூ சூடிய விடயம் தொடர்பில் இணையத்தளங்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிகழ்வு எனத் திரிபுபடுத்தப்பட்டு செய்திகள் வெளியான நிலையிலேயே இந்தியத் தூதரகத்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு அறிக்கையொன்று இன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், “மரக்கன்றுகள் விநியோக நிகழ்வு தொடர்பான பல தவறான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தமை கவனத்துக்கு வந்தன. யாழ். இந்தியத் துணைத் தூதுவர், அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அத்தகைய பங்கேற்பு அமைப்பாளர்கள் அல்லது அவர்களின் செயல்களுடன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்கு வெளியே, எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. இது தொடர்பில் அவருக்கு எந்த முன் அறிவித்தலும் வழங்கப்படவில்லை” – என்றுள்ளது.