மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நேற்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றையதினம் கிட்டத்தட்ட 3 மணித்தியாளங்கள் எங்களுடைய விண்ணப்பங்கள் நீதிமன்றினாலே பரிசீலிக்கப்பட்டு இரு தரப்பினருடைய வாதங்களும் மான்புமிகு நீதிபதியினாலே செவிமடுக்கப்பட்டன. முடிவிலே நான் வழங்கிய கட்டளை சட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தை தெரிவித்த நீதவான் அவர்கள், அதை இரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ வேண்டிய தேவை இருப்பதாக தான் கருதவில்லை என்று தீர்ப்பளித்திருக்கின்றார்.
அதே நேரத்திலே, ஆலயங்களிலே அதாவது வழிபாட்டிடங்களிலே எமது மக்கள் தங்கள் விருப்பத்தின் பிரகாரம் சென்று மத அனுஸ்டானங்களிலே ஈடுபடுவதற்கு இந்த கட்டளையில்எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.
அந்த அடிப்படையிலே, இந்த கட்டளை தொடர்பிலே நாங்கள் சொல்லக்கூடியதெல்லாம் இந்த கட்டளையை மாற்றி அமைப்பதற்கு அல்லது இரத்து செ்வதற்கு நாங்கள் எங்களால் இயன்றவரையிலே முயற்சி எடுத்திருக்கின்றோம்.
எதிர்வாதிகளாக நீதிமன்றுக்கு வந்தவர்களும், இந்த விடயத்திலே கடமையை செய்திருக்கின்றார்கள். நீதிமன்றம் தன்னுடைய கடமையை செய்திருக்கின்றது. அப்படிதான் இந்த முழு விவகாரத்தையும் இந்த வழக்குகள் தொடர்பிலே நாங்கள் பொறுப்புள்ள சட்டத்தரணிகளாக பார்க்கவேண்டி இருக்கின்றது.
மாவீரர் நிகழ்வு தொடர்பாக எந்தவித ஒன்றுகூடல்களும் இருக்க கூடாது என்பதுதான் கட்டளை. அதை புரிந்துகொள்வதில் எங்களுக்கு எந்த கஸ்டமும் இருக்காது என்று நினைக்கின்றேன். மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.